கட்டம் 2 இன் விளைவுகள் அடுத்த வாரம் தெரியவரும்! – Brusaferro

இத்தாலிய உயர் சுகாதார நிறுவனத்தின் தலைவர் Brusaferro

இந்த வாரம் இத்தாலி முழுவதும் கொரோனாவைரசால் ஏற்பட்ட முடக்கநிலையத் தளர்த்தி கட்டம் 2 க்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து, உயர் சுகாதார நிறுவனத்தின் (Iss) தலைவர் Brusaferro அவர்களிடம் கட்டம் 2 சார்ந்த சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் சில தொகுப்புக்கள் இங்கே:

இந்த கட்டம் 2 தொடக்கத்திற்கான மதிப்பீட்டினை அறியலாமா?

«தொற்றுநோயியல் ரீதியாக, கட்டம் 2 எவ்வாறு சென்றது என்பதற்கான அறிகுறிகள் அடுத்த வாரம் விளங்கக்கூடும். குடிமக்களின் நடத்தை நல்லொழுக்கமாக இருந்ததா என்பதை தரவுகளிலிருந்து நாம் புரிந்துகொள்வோம். இந்த வகையான பரிசோதனையின் வெற்றிக்கான திறவுகோல் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் எவ்வாறு பங்கேற்கிறோம் மற்றும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வில் அடங்கியுள்ளது. நாங்கள் இன்னும் தொற்றுநோய் கட்டத்தில்தான் இருக்கிறோம். கடைகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றை நிர்வகிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்».

செய்யக்கூடாத தவறு?

«ஆபத்து கடந்துவிட்டது என்று நினைத்து, நாம் பின்வாங்கலாம் என்பதை மறந்துவிடுங்கள், எனவே கட்டம் 1 இன் அதே எச்சரிக்கைகளைப் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் அனைவரும் எங்கள் பாடத்தை கற்றுக்கொண்டோம் என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் இப்படி தொடர்ந்தால், நமக்கு அதிக சுதந்திரத்தை அனுமதித்து, வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஏனைய மறு திறப்புகளை மேற்கொள்ளலாம்».

இத்தாலியர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள்?

«நாடு மெதுவான, படிப்படியான இயல்பு நிலைக்கு திரும்புவதை நோக்கமாகக் கொண்டு, தொடர்ந்து தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்».

அபாயங்கள் எவை?

«பேரூந்து, பல்பொருள் அங்காடிகள், பூங்காக்கள் மற்றும் தெருவில் எங்கும் உருவாக்கக்கூடிய மக்களின் கூட்டங்களே பலவீனங்களாக உள்ளன».

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், எல்லாவற்றையும் மீண்டும் திறக்க முடியுமா?

«நான் அவநம்பிக்கை கொண்டவன் அல்ல, ஆனால் எச்சரிக்கையாக இருக்கிறேன். நான் எல்லாவற்றையும் தடுப்பவன் இல்லை. இந்த முதல் படிகளின் விளைவைக் கண்காணிக்க எங்களுக்கு நேரம் கொடுங்கள். அடுத்ததைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பு புதிய நோய்த்தொற்றுகளை நாம் கணக்கிட்டு அவை அதிகரித்துள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும்».

தொற்றுநோயின் மீள் தாக்கத்திற்கு ஜேர்மனி தயாராகி வருகிறது. மற்றும் இத்தாலி எவ்வாறு தயாராக உள்ளது?

«வைரசு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக செயல்படுகிறது, அது ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசுகிறது. நாம் அவதானமாக இல்லாவிட்டால் அது விரைவாக பரவக்கூடும். தொற்றுநோய் Lombardia வில் வெளிப்படுத்திய கடுமையான தாக்கத்தினால் மீண்டும் இது நிகழ வாய்ப்பில்லை என்றாலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பரவலைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளுக்கு மேலதிகமாக, தீவிர சூழ்நிலைகளைத் தவிர்க்க உடனடியாக மற்றும் விரைவாக செயல்படுவதற்கு ஒரு திட்டம் உள்ளது»

Lombardia மாநிலத்தின் துணைத் தலைவர் Sala தனது பிராந்தியத்தில் தேசிய சராசரியை விட R0 குறைவாக உள்ளது என்று கூறுகிறார். இதனைப் பற்றிய கருத்து?

«தொற்றுநோய் இனப்பெருக்க எண் R0 ஐ 1 க்குக் கீழே அல்லது மிக குறைந்தளவாக வைத்திருப்பதுதான் பெரிய சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உயர் சுகாதார நிறுவனம் என்ற வகையில், ஒவ்வொரு வாரமும் இந்த தகவலை நாங்கள் புதுப்பிக்கிறோம், நாங்கள் அதனை தரவரிசைப் படுத்தவில்லை. ஒரு தொற்றுநோயியல் பார்வையில் 0.5 அல்லது 0.7 என்பது மிக முக்கியமான பொருளைக் கொண்டுள்ளன. தேசியளவில் இந்த R0 கணக்கிடப்படுகிறது».

மருத்துவத் துறையின் பல முக்கிய புள்ளிகள் எதிராகவும் முரண்பாடாகவும் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறதா?

«இது உலகம் முழுவதும் நடக்கிறது. இது Infodemia என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வு ஆகும், இது வைரசைப் போலவே பரவுகிறது மற்றும் நவீன தொற்றுநோய்களின் ஒரு பகுதியாகும். யார் அதிகம் பேசுகிறார்கள், அடிக்கடி பேசுகிறார்கள் என்பதை மறந்து விடுவோம். அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நாங்கள் குறிப்பிடுகிறோம்».

“முகக்கவசங்கள் மட்டுமல்ல” என்ற தலைப்பில் உலக கை கழுவுதல் தினமாக மே 5 இருந்தது. இந்த பாதுகாப்புமுறைக்கு அதிகூடிய கவனம் செலுத்தப்படுகிறதா?

«கை சுகாதாரம் என்பது தொற்றுநோய்களுக்கு எதிரான மிக முக்கியமான நடவடிக்கையாகும். கை கழுவுதல் கிருமிகள் பரவுவதைத் தடுக்கிறது. முகக்கவசங்கள் மட்டும் போதாது. எனவே அவற்றை அணிவதன் மூலம் பாதுகாப்பாக உணருவது தவறு».

உங்கள் கவனத்திற்கு