R0 -“அடிப்படை இனப்பெருக்க எண்” என்றால் என்ன?

R0 -“அடிப்படை இனப்பெருக்க எண்” என்றால் என்னே?

கடந்த நாட்களில் எப்பொழுது இந்த நெறிமுறைகள் எளிதாக்கலாம் என்று கேட்ட போது இத்தாலிய உயர் சுகாதார நிறுவன தலைவர் Brusaferro ஒரு கருத்தை முன்வைத்தார். வருகின்ற கிழமைகள் அவதானிக்க வேண்டும் என்று தெரிவித்தார். குறிப்பாக R0 எண்ணிக்கை 1 க்குச் சமமாகவோ அல்லது 1 விட குறைந்தால் மட்டும் தான் தொழில் சாலைகள் மீண்டும் திறக்கலாம் என்று கூறியுள்ளார்.

அடிப்படை இனப்பெருக்க எண்

R0 (இத்தாலி மொழயில் “R con Zero”, ஆங்கிலத்தில் “R naught”) என்பது தமிழில் “அடிப்படை இனப்பெருக்க எண்” என்று அழைக்கப் படுகிறது.
இது தொற்றுதல் பரவும் விகிதத்தை குறிக்கும் எண். அதாவது தொற்று நோய்க்கு உள்ளானவர்கள் ஏனைய மக்களுக்கு எந்த விகிதத்தில் நோயை பரப்புகிறார்கள் என்பதை இந்த “அடிப்படை இனப்பெருக்க எண்” காட்டுகிறது.

இந்த அளவீடு பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் ஒரு தொற்று நோய் மக்களின் மூலம் பரவுமா, இல்லையா என்பதை தீர்மானிக்க உதவுகிறது.

தொற்றுநோயியலில் SIR வடிவமைப்புப் பிரிவுகள்

R0 என்னவென்று விளக்கம் தருவதற்கு முன்னம், தொற்றுநோயியலில் (Epidemiologia – Epidemiology) ஒரு நோய் பரவும் காலத்தில் மக்கள் எவ்வாறான பிரிவுகளில் பிரிக்கப் படுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

பிரிவுகள்:

S – (Susceptible individuals) இவர்கள் நோய்க்கு உள்ளாகக்கூடிய நபர்கள்.
I – (Infected individuals) இவர்கள் தொற்றுநோய்க்குள்ளான நபர்கள். இவர்கள் மூலம்தான் வைரசின் பரவுதல் ஏற்படுகிறது.
R – (Removed/Recovered individuals) இவர்கள் நோயில் இருந்து குணமாகியவர்கள் அல்லது நோயால் உயிரிழந்தவர்கள். இவர்கள் மூலம் நோய் பரவுதல் நடைபெறாது.

மக்களை இவ்வாறாகப் பிரிப்பதை “SIR வடிவமைப்பு” என்று தொற்றுநோயியலில் அழைக்கப் படுகிறது. இந்த வடிவமைப்பில் தான் R0 “அடிப்படை இனப்பெருக்க எண்” எவ்வாறாக செயல்படுகிறது என்று காணக்கூடும்.

R0 என்றால் என்னே?

இந்த R0 என்பது சராசரியாக ஒரு தொற்றுக்கு உள்ளாகிய நபர் (infected individuals) எத்தனை நபர்களுக்கு (suscettible individuals) நோயை பரப்புகின்றார் என்ற எண்ணிக்கையை குறிக்கின்றது.
COVID-19 உட்பட சில நோய்களின் “அடிப்படை இனப்பெருக்க எண்” களை கீழே உள்ள விளக்கப்படம் காட்டுகிறது.

COVID-19 நோயின் தற்போதைய “அடிப்படை இனப்பெருக்க எண் ” 2 முதல் 2.5 வரை உள்ளது. அதாவது வைரசுத் தொற்றுதலுக்கு உள்ளாகிய ஒவ்வொரு நபர்களும், குறைந்தது இரு நபர்களுக்கு இந்த நோயைப் பரப்புகிறார்கள். எந்த வித நெறிமுறைகளின்றி நோய் பரவும் வேகம் இதுவாகும்.

இந்த வேகம் எதனால் தீர்மானிக்கப் படுகிறது? அதை எப்படி குறைக்கலாம்?

R0 தீர்மானிக்கும் காரணிகள்

முக்கியமாக 3 விடயங்கள் இந்த R0 எண்ணிக்கையை தீர்மானிக்கிறது:

  • அடைகாக்கும் காலம் (இத்தாலி மொழியில் “Periodo di incubazione”, ஆங்கிலத்தில் “Incubation Period”)
    வைரசு உடலுக்குள் நுழைந்த உடனே அறிகுறிகளை வெளிப்படுத்தாது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு தான் அறிகுறிகள் வெளிப்படும். இந்த காலத்தில் தொற்றுதலுக்கு உள்ளாகியவர்கள் (அறியாமல்) மற்றவர்களுக்கு வைரசைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கொரோனாவைரசின் அடைகாக்கும் காலம் இரண்டு நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆகும்.
  • சமூக தொடர்பு விகிதம் (“Contact Rate”)
    என்றால் சராசரி ஒரு மனிதன் எத்தனை நபர்களை ஒரு நாளைக்கு சந்திக்கிறார் என்று குறிக்கின்றது. ஒரு நாட்டு மக்கள் சமூக ரீதியான செயல்பாடுகளில் எவ்வளவு ஈடுபடுகிறார்கள் என்பதையும் இந்த விகிதம் குறிக்கின்றது. இந்த எண்ணிக்கையில் நகர்வுகளின் விளைவுகளும் வெளிப்படுகிறது.
  • பரவுதலின் விகிதம் (“Transmission Rate”)
    இரு நபர்களுக்குள் நடக்கும் ஒவ்வொரு சந்திப்பிலும், நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் எவ்வளவு என்று குறிக்கின்றது.
    இதில் முக்கியமாக பரிமாற்ற வழி என்பது இந்த விகிதத்தை தீர்மானிக்கிறது. அதாவது நோயை காற்றின் வழியாகவோ அல்லது எச்சில் ஊடாகவோ இல்லை வேறு வழியூடாகவோ பரிமாற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதை ஆராயவேண்டும். கைகுலுக்குவது, அணைப்பது, பொது இடங்களில் தும்முவது போன்ற பல செயல்கள் பரவுதலின் விகிதத்தை அதிகரிக்கின்றது.

“அடைகாக்கும் காலம்”, “சமூக தொடர்பு விகிதம்” மற்றும் “பரவுதலின் விகிதம்” என்று இந்த மூன்று விடயங்களும் R0வின் எண்ணிக்கை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

பரவுதலை கட்டுப்படுத்துவது

இந்த 3 காரணிகளை குறைப்பதற்கான நோக்கத்துடன்தான் அவசரகால நெறிமுறைகள் விதிக்கப்பட்டன.

14 நாட்களுக்கு மேலாக அனைவரையும் தனிமைப்படுத்துவதன் ஊடக வைரசு தொற்றுதலுக்கு உள்ளாகியவர்களை அறிகுறிகளுடன் இனம் காணுவது இலகுவாக இருக்கும். மற்றும் இந்த வைரசு “அடைகாக்கும் காலத்தில்” (14 நாட்கள்) அவர்கள் ஏனைய நபர்களை சந்தித்து இந்த நோயை பரப்புவதற்கான வாய்ப்புக்கள் (“Contact Rate”) குறைக்கப்பட்டு இருக்கின்றது. கை கழுவுவது, முகவுரை அணிவது, கை கொடுப்பதை நிறுத்துவது இதை போன்ற அறிவுரைகளூடாக பரவுதலின் விகித்தை (“Transmission Rate”) குறைப்பதற்கான செயல்பாடுகள் ஆகும்.

இந்த நெறிமுறைகள் கடைப்பிடிப்பதால் மட்டுமே இந்த பரவுதலின் வேகத்தை குறைக்க முடியும். இந்த R0 எண்ணிக்கை 1 விட குறைந்து போனால் இந்தத் தொற்று நோய் நீண்ட கால நோக்கில் மறைந்துவிடும். அதாவது இருக்கிற நோயாளிகளின் எண்ணிக்கையை விட குறைவாகத் தான் புதிய நோயாளிகள் உருவாகிறார்கள். R0 <1 என்ற காலத்தைத்தான் நோய்ப்பரவு விளக்கப்படத்தின் முடிவுக் கட்டம் என்று குறிக்கப் படுகிறது.

இந்த நோயின் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தங்களுடைய பங்கை செய்ய வேண்டும். R0 குறைப்பது ஒவ்வொருவரின் கடமை மற்றும் பொறுப்பும் ஆகும்.
இந்த நெறிமுறைகளை நாம் மதித்து நடந்தோம் என்றால் விரைவில் இந்த இருண்ட காலத்தில் இருந்து விடிவு கிடைக்கும்.

உங்கள் கவனத்திற்கு