நோய்ப்பரவு வளைவு (Epidemic curve) – முழு விளக்கம்

தொற்றுநோய் பரவுதல் என்பது கணித மற்றும் புள்ளியியல் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஒரு முக்கியமான விடயம். தினசரி, வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எடுத்து புள்ளியியல் விளக்கப்படத்தில் இணைத்தால் ஒரு வளைவு ஒன்றைக் காணலாம்.
இந்த வளைவைத் தான் நோய்ப்பரவு வளைவு (Epidemic curve) என்று கூறப்படும்.

காலகட்டங்களுடன் நோய்ப்பரவு விளக்கப்படம்

இவ்வளைவில் காலத்தை 3 கட்டங்களாய் பிரிக்கலாம்:

  • ஆரம்பக் கட்டம்: நோயின் பரவுதலின் ஆரம்பக் காலம்;
  • உச்சக் கட்டம்: பாதிக்கப்பட்டவர்களின் அதி கூடிய தினசரி எண்ணிக்கை;
  • முடிவுக் கட்டம்: நோயின் பரவுதலின் முடிவுக் காலம்.

அரசாங்கம் விதிக்கின்ற பாதுகாப்பு நெறிமுறைகளின் நோக்கம் அந்த உச்சக் கட்டத்தை தள்ளிப்போடுவதும் அதன் உச்சத்தை குறைப்பதும் தான்.
அந்த உச்சக் கட்டத்தில் தினசரி பாதிக்கப் பட்ட சனத்தொகையின் எண்ணிக்கை அந்த நாட்டின் மருத்துவ கொள்ளளவுக்குள் இருக்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகளுடன் நோய்ப்பரவு விளக்கப்படம்

வைரசின் பரவுதல் வேகத்தை குறைப்பதால் அந்த நாட்டுக்கு தன் மருத்துவ கொள்ளளவையும் மற்றும் மருத்துவ திறனையும் உச்சக் கட்டத்திற்கு தயார் படுத்தக் கூடிய நேரத்தைக் கொடுக்கின்றது. இன்று Lombardia மாநிலத்தில் நடக்கின்ற மருத்துவ கொள்ளளவு தட்டுப்பாட்டால், அந்த மாநில மருத்துவ நிறுவனங்கள் உச்சக்கட்டத்தை எதிர்க்கொள்ள வலிமை கொண்டவர்களா என்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியிருக்கின்றது.

எப்போது இவ் உச்சக் கட்டம் வரும் என்பதை கணிப்பிடுவது அதி முக்கியம் ஆகும். அவசரக்காலத்தின் நெறிமுறைகள் பயன் தருகிறதா என்பது தெரிந்துகொண்டால் மட்டும் தான் இந்த உச்சக் கட்டம் எப்பொழுது வரும் என்று தீர்மானிக்க முடியும்.

உடம்பில் வைரசு தொற்றிய தருணத்திற்கும் அறிகுறி வெளிவந்து அந்த நோயை உறுதிப்படுத்தும் தருணத்திற்கும் இடையிலே ஒரு குறுப்பிட்ட கால அவகாசம் இருக்கிறது. ஒரு நாட்டின் மருத்துவ வேகம், நோயை இனம் காணுவதற்கு உருவாக்கப்படும் சோதனை மையங்களின் எண்ணிக்கை, சரியான முறையில் தரவுகள் சேகரிப்பது போன்ற பல விடயங்கள் இந்த கால அவகாசத்தைத் தீர்மானிக்கும்.

வைரசின் பரவுதல் இக் கால அவகாசத்திற்கு பின்பு தெரிவது போல், அரசாங்கங்கள் எடுக்கின்ற பாதுகாப்புச் செயல்களின் பயன்களும் இக் கால அவகாசத்திற்கு பின்புதான் புள்ளிவிபரங்களில் அறியவரும்.

சீனாவில் இக் கால அவகாசம் ஏறத்தாழ 12 நாட்கள் அளவு இருந்தது. அதாவது, சீனாவில் விதிக்கப்பட்ட நெறிமுறைகளின் பயன்கள் 12 நாட்களுக்குப் பின்புதான் புள்ளிவிபரங்களில் காணப்பட்டது.

இத்தாலியில், இக் கால அவகாசம் ஏறத்தாழ 7 நாட்கள் அளவு இருக்கிறது. இன்று நாங்கள் பார்க்கின்ற புள்ளிவிபரங்கள் ஒரு கிழமைக்கு முன்பு நடந்த வைரசின் பரவுதலின் விளைவு ஆகும். இத்தாலி அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இந்த நெறிமுறைகளின் விளைவும் 7 நாட்களுக்கு பின்பு தான் காண முடியும்.

சீனாவின் புள்ளிவிபரங்களை வைத்து ஒரு விடயம் உறுதியாகக் கூறலாம். நகரங்களில் நகர்வுவதற்கான தடைகள் விதிக்கப்பட்ட பின்னரும், அங்காடிகள் மற்றும் பொது இடங்கள் பூட்டப்பட்ட பின்னரும் வைரசின் பரவுதல் குறைக்கப் படும். இவ்விளைவுகளை அந்த கால அவகாசத்திற்கு பின்புதான் இனம் காண முடியும்.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகின்றது! இந்த பரவுதலை நிறுத்துவதற்கான முக்கிய பங்கு எங்கள் கைகளில் தான் உள்ளது: விதிக்கப்பட்ட நெறிமுறைகளை கடைப்பிடித்தால், சீனா கற்பித்தது போல், விரைவில் விடிவு காணலாம்.

உங்கள் கவனத்திற்கு