கார்த்திகை 27

“உயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது

உரைத்தது தமிழீழம் – அதை

நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்

நிச்சயம் எடுத்தாள்வோம்”

தமிழீழம் என்கிற ஒப்பற்ற நோக்கத்துக்காக, உதட்டில் நிறைந்த புன்னகையோடு மரணத்தை முத்தமிட்ட மகத்தானவர்களின் நினைவு நாள். சாதாரண மனிதர்களாகப் பிறந்து, இலட்சிய மரணத்தால் வீரசரித்திரமாக உலக வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட மாவீர தெய்வங்களைக் கொண்டாடும் திருநாள்.

நம் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் கட்டளைக்கிணங்க, தாய்நிலம் காக்க, தன்னலம் மறுத்து,உயிரைக்கொடையாகக் கொடுத்து, விதையாக விழுந்த மாவீரர்களைப் போற்றித்தொழும் பெருநாள்.

தமிழ்த்தேசிய இனம் தனக்கெனக் கலை, பண்பாடு, இலக்கியம், மொழி, வேளாண்மை, வாழ்வியல், அறிவியல், அறவியல் என எல்லாம் கொண்டு, அனைத்திலும் தேர்ந்த இனமாக உயர்ந்து, நிமிர்ந்து நின்றது.

உலகை ஆண்ட தமிழன் என்ற சொற்கள் புனைவுக்கதைகளல்ல. அது தமிழர்களின் வீரத்தை பதிவுசெய்து காட்டும் காலக்கண்ணாடியின் பிரதிபலிப்பு.

நிலத்தையெல்லாம் தன் காலடியில் வைத்து ஆண்ட வரலாற்றுப்பெருமிதங்கள் பல வாய்ந்த தமிழர் இனம் காலப்போக்கில் அனைத்தையும் இழந்த இனமாக மாறிப்போனதுதான் வரலாற்றில் மிகப்பெரிய கொடுமை. விளைவு, உலகத்தில் தமிழன் வாழாத நாடில்லை. அவனுக்கென்று உள்ளங்கை அளவு ஒரு நாடில்லை எனும் நிலைக்குத்தள்ளப்பட்டோம். காலங்காலமாய்த் தொடர்ந்த இந்த அவலத்தைத் தீர்க்கத்தான், உலகத்தின் தொன்மையான ஒரு தேசிய இனம் ஒரு நாடு இல்லாமல் நாதியற்ற இனமாக, உரிமைகள் மறுக்கப்பட்ட அடிமை இனமாக மாறிவிடக்கூடாது என்கின்ற இலட்சியத்தாகத்தால்தான், தமிழீழம் என்ற நம் தாயக விடுதலைக்காகத் தன்னுயிர் தந்தார்கள் நம் மாவீரத்தெய்வங்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர் லெப்.சங்கர்வீரச்சாவடைந்த நாளான கார்த்திகை – 27 தமிழீழ மாவீரர் நாளாக 1989 கார்த்திகை -27 அன்றிலிருந்து நினைவு கொள்ளப்பட்டு வருகிறது. ஈழத்தமிழர் வாழ்வியலில் ஒன்றிப்போன ஒரு விடயமாக கார்த்திகை – 27 அமைந்துவிட்டது.

சவால் மிகுந்த ஈழப்போராட்ட வரலாற்றில் போராட்ட வடிவங்கள் மாறலாம்.போராட்ட இலட்சியம் மாறாது என்ற எண்ணவியல்கருத்துகளை ஈழத்தமிழர்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அடுத்த சந்ததியினருக்கு போரின் அன்றைய தேவையும் விடுதலையின் அகத்தியத்தையும் நன்றே எடுத்து விளக்கி அவர்களை அவற்றை நன்கு அறிந்து புரிந்து  நடைபோடும் விற்பன்னர்களாக முன்னகர அத்திவாரமிடும் பொறுப்பு நிகழ்கால ஈழத்தமிழர்களின் பெரும் பொறுப்பு ஆகும்.

நிகழ்கால வாழ்வியலில் உள்ள ஈழத்தமிழர்கள் தான் கடந்த கால போரியலை தங்கள் வாழ்வியலின் ஒரு அங்கமாக கொண்டு வாழ்பவர்கள். அத்தகைய அனுபவங்களை இளையவர்களோடு பகிர்ந்து கொண்டு அன்றைய சூழலை விளங்கிக்கொள்ள வைத்துவிட வேண்டும். அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் எடுத்த முடிவுகள் மீது அன்றைய சூழலியலின் தாக்கம் எத்தகையது என்பதை இன்றைய இளையவர்கள் புரிந்து கொள்ளல்அகத்தியமாகும்.

போரில் வீழ்ந்து விட்ட ஒரு வீரனுக்காக கண்ணீர் சிந்தும் வழக்கம் இல்லா த வீர மறவர்கள் என்று போற்றுதலுக்குரிய வகையில் வாழ்ந்தவர்கள் நம்மவர்கள். புதைகுழியில் புதைக்கப்படவில்லை. அவர்கள் விதைகுழியில் விதைக்கப்படுகின்றார்கள் என்ற மாற்றீட்டை பேணியவர்கள். வழமை போலவே கார்திகையில் எழுச்சி கொள்ளும் ஈழத்தமிழர்கள் மனங்களைக் கொஞ்சம் புடம்போட்டுக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஈழம் மலரும் காலம் வரை நமது விடுதலைப் போராட்டமும் ஓயக்கூடாது என்கின்ற உறுதியான தீர்மானிப்பை இந்த மாவீரர் நாளில் நமக்குள்ளாக நாம் விதைக்க வேண்டும். தமிழீழ மலர்ச்சிக்காக மாவீரர்களின் புனிதக் கனவினை நிறைவேற்ற அணியமாவோம்.

உங்கள் கவனத்திற்கு