வேர்களைத் தேடும் விழுதுகள்-நயினாதீவு

கடலன்னையின் அரவணைப்பில் கண் வளர்ந்து, அருளன்னையின் ஆலய மணிஓசையில் புலர்ந்து, தமிழன்னையின் பண்பாட்டு விழுமியங்களால் தலை நிமிர்ந்து, உலகில் தனக்கென தனியானதொரு வதிவிடப் பரம்பரையைக் கொண்டது நயினை மண். வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் பழம்பெரும் சிறப்பினை உடையது நயினாதீவு.

மணித் திருநாட்டின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் சப்த தீவுகளுக்கு நடுநாயகமாக விளங்கும் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி பீடமாக அன்னை நாகபூசணி அம்மன் அமர்ந்திருந்து அருளாட்சி புரியும் இடமாகக் கருதப்படுவது  நயினாதீவாகும். இந்த அழகான கிராமத்தில் எனது தாய் தந்தையர் பிறந்தார்கள் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

இத்தீவு மணிபல்லவம் என்று  பல ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படும். இலக்கியச் சிறப்பு மிக்கதும்  புத்த பகவானின் புனித பாதங்கள் பட்ட தலமாக பௌத்தர்களால் வணங்கப்பட்டு சர்வமத சந்நிதியாகவும் விளங்குகிறது. புராதன காலம், புராண காலம், ஐரோப்பியர் காலம் அனைத்திலும் முத்திரையைப் பதித்து  வரலாற்றில் தனித்துவமான இடத்தை தக்க வைத்தபெருமை நயினாதீவிற்கு உண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிற்கு களம் அமைத்துக் கொடுத்த பெருமையும் உண்டு.

கடல் கடந்த சோழர் ஆட்சிக் காலத்தில்  வணிகக் கப்பல்கள் தரித்துச் செல்லும்  பாரிய கப்பல் துறைமுகமாக விளங்கியதை இன்றும் காணமுடிகிறது. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும்  தமிழகத்திற்குமான  கடல் வழிப் போக்குவரத்தில்  நயினாதீவு முக்கிய கேந்திர தளமாக விளங்கியது.

இவ்வாறு சரித்திர ஆய்வுகளுக்கு முற்பட்ட மிகப்பழமை வாய்ந்த நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளமை சைவசமயம் சார்ந்த சிறப்பு. போதி மாதவனின் புனித பாதங்கள் பட்டமையால் வரலாற்றுச் சிறப்பும் உண்டு. அத்துடன் பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், கவிஞர்கள்,  புலவர்களைத் தந்த பெருமையும் உண்டு. இத்தகைய பல்வேறு சிறப்புகளுடன் பழமையும் புதுமையுமாய்ப் பொலிந்து விளங்குவது நமது நயினாதீவு. “மூர்த்தி சிறிது  கீர்த்தி பெரிது” என்பார்களே அதற்கேற்ப சிறிய தீவாக இருப்பினும் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது எம் நயினாதீவு.  

நயினையில் வாழ்ந்த பழம் குடிமக்கள் தமிழ்மக்கள். தமிழர்களாயும் சைவசமயத்தவர்களாகவும் வாழ்ந்ததால் தாய்மொழிப் பற்றும் இறைநம்பிக்கையும் உடைய நயினை மக்கள் தமது பிரதான தொழிலாக விவசாயத்தை மேற்கொண்டனர்.

எமது கிராமத்தின் புவியியல் அமைப்பானது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட மயோசின் காலத்திற்குட்பட்ட அடையல் பாறைகளாலானது எனப் புவியியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

இது இந்து சமுத்திரத்தின்  விளிம்பில் பாக்குத் தொடுவாய்க்கு இடையில் அமைந்து காணப்படுகின்றது. வடக்குத் தெற்காக நீளமாகவும்  கிழக்கு மேற்காக ஒடுங்கியும் 5.7 சதுர கிலோ மீற்றர்  பரப்பளவைக் கொண்டு காணப்படுகிறது. இது தட்டை நிலப்பாங்கான சமதரை நிலப்பரப்பைக் கொண்டு காணப்படுகிறது.  இரண்டு  மீற்றர் ஆழம் வரையான தரைக் கீழ் நீரைக் கொண்டு காணப்படும் நிலப்பகுதியானது மாரி காலங்களில் கணிசமான நீரைக் கொண்டு காணப்பட்டாலும் கோடை காலத்தில் வற்றிய நீரைக் கொண்டவையாகக் காணப்படுகிறது.

நாகரிகம் வளர்ச்சி அடைந்த காலத்தில்  நாகரிகங்களை எட்டிப்பிடிக்கத் துணிந்த மக்களின் தேடல்கள் கணிசமான அளவிற்கு எல்லாத் துறைகளிலும் பரவியிருந்தன. அந்த வகையில்  இலங்கை முழுவதிலும்  நயினை மக்களின் வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் அரசபதவிகளிலும்  அவர்களை உட்கார வைத்துள்ளது.

இக்கிராமத்தின் வரலாற்றை  சொல்லப்போனால்  இலங்கையில் எந்த மூலையிலும் வியாபாரத்தில் முன் நிற்பார்கள். இத்தீவின் முக்கிய தொழில்கள் விவசாயம்,  மீன்பிடித்தொழில், பனைசார்தொழில்கள்,  கைவினைத் தொழில்கள் என்பன ஆகும். போர்க்கால  சூழ்நிலை காரணமாக இடம்பெயரத் தொடங்கிய மக்கள் யாழ்ப்பாணம், வன்னி, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களுக்கும்  இளவயதினர்  வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றார்கள். இச்சிறு தீவு எட்டு வட்டாரப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.  தொன்மையோடு யாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல்நடுவே  கம்பீரமாகத்  தோற்றமளிக்கும்  இத் தீவு நயினாதீவு, நாகதீவு,  நாகதீபம், மணிபல்லவம், மணித்தீவு, பிராமணத்தீவு,  நாகேஸ்வரன் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இத்தீவு சக்தியின் அருள் பெற்று விளங்குவதோடு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புக்களுடன் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. காளிதாசன், பட்டினந்தடிகள் மற்றும்  சங்கராச்சாரியார் போன்றோரின் கருத்துக்களிலும் நயினாதீவையே மணித்தீவு என்று குறிப்பிட்டுள்ளனர்.

புத்தபெருமான் வெவ்வேறு காலங்களில் இலங்கையில் கால்பதித்து புனிதமாக்கிய இடங்களில் மணிபல்லவம் என்று அழைக்கப்பெறும்  நயினாதீவும் சிறப்புக்குரியதாகும். புத்தரின் காலம் கி.மு 566 – 483 வரை  ஆகும். புத்தரின் வருகைக்கு முன்பே புவனேஸ்வரி பீடமானது அமைந்திருந்ததை அவர் நாகமன்னனின் பிணக்குத்தீர் அறிவுரை கூறியதிலிருந்து புத்தரின் வருகையைப் போற்றி நினைவு கூரும் வகையில் தரும்பீடிகை அமைந்திருந்தமையும் அதனை மணிமேகலை வழிபட்டமையையும்  மணிமேகலைக் காப்பியத்தில் காணலாம். இதனையே புத்த பீடிகை இங்குள்ளதாகக் கருதி பௌத்தர்கள்  நயினாதீவை  நாகதீபம் எனப் போற்றி வருகின்றனர்.

மணிமேகலை அமுதசுரபி என்னும் பாத்திரத்தை தீவதிலகையின் உதவியால் இக்கோமுகிப் பொய்கையிலே பெற்றாள் எனக் கூறப்படுகிறது. இத்தீவின் இரண்டாம் வட்டாரத்தில் 1944ஆம் ஆண்டு முதல் அமுதசுரபி அன்னதான சபை அமைக்கப்பட்டுள்ளது.

இத் தீவில்  காணப்படும் வணக்க முறைகளுக்கும்  நாகர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. நாகர் ஆட்சி நயினாதீவில் வலுப்பெற்றிருந்தமையைக் குறிக்க இவ்வூரில் வழக்கத்திலிருந்த  நாகராசா, நாகேசு, நாகேஸ்வரன், நாகேஸ்வரி போன்ற பெயர்கள் சான்றாகும். இவ்வாறே நயினாதீவில் உள்ள நாகபூசணி அம்பாளை  நாகம்மாள், நாகேஸ்வரி, நாக ராஜேஸ்வரி எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட  சைவப் பாடசாலை தில்லையம்பல வித்தியாசாலை ஆகும். 1928 ஆம் ஆண்டு இவ் வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராக திருவாளர் ச. கந்தையா பணியாற்றிய காலம் நயினையின் கல்வி வளர்ச்சியின் பொற்காலம் ஆகும். 1938ஆம் ஆண்டு தில்லையம்பல வித்தியாசாலை சிறி நாகபூசணி வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மற்றும் நயினாதீவு மகாவித்தியாலயம், நயினாதீவு கணேசா கனிஷ்ட மகா வித்தியாலயம், என மூன்று பாடசாலைகளும் இன்றும் சிறப்புவாய்ந்த பாடசாலைகளாக விளங்குவதுடன் கல்வி கற்கும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று நயினாதீவு மண்ணுக்கு பெருமை சேர்க்கிறார்கள். நயினாதீவு ஈன்றெடுத்த  சிறந்த கவிஞர்களாக நாகமணிப்புலவர், நாகசண்முகநாதபிள்ளை, இராமச்சந்திரா, இல்லறஞானி போன்றோர் பெருமைக்குரியவராவார்கள்.

இவ்வாறாக பற்பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட நயினை மண்ணில் எனது பெற்றோர் பிறந்து வளர்ந்துள்ளார்கள் என்பதை எண்ணி நான் பெருமிதம் அடைகிறேன்.

அதுமட்டுமல்லாது நயினை மண்ணில் பிறந்து எமது மண்மீட்புப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து இன்னும் பெருமை தேடித்தந்துள்ளனர் நம் மாவீர்ர்கள். இவ்வாறு ஈழ வரலாற்றில் இது வரை காலத்தில் மாவீரர் ஆனோர், நாட்டுப்பற்றாளர் ஆனோர், மாமனிதர் ஆனோர் விபரங்கள் வருமாறு:

  • மேஜர் பூவழகு (விக்கி)
  • லெப்.குணசீலன்
  • கப்டன் செனித்
  • லெப்.கேணல் சேது
  • நாட்டுப்பற்றாளர் சிவசம்பு குணரத்தினம் 

போன்றோர்களை மண்மீட்புப் பணிக்காக நயினை மண் தந்திருக்கிறதென்றால் உண்மையில் பெருமை தான்.

இவ்வாறு தனித்துவமும் பழமையும் மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கொண்ட எனது பெற்றோரின்  மண்ணில் வேர் தேடுவதில் நான் பெருமையும் மகிழ்வும் அடைகிறேன்.

நன்றி

மாந்தோவா திலீபன் தமிழ்ச்சோலை

உங்கள் கவனத்திற்கு