ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை அற்பணித்த அனைத்து போராளிகளுக்கும் வணக்கம் செலுத்தி நினைவுகூரும் நாளே மாவீரர் நாள் ஆகும்.

நவம்பர் 27 ஆம் திகதி 1982 ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான லெப்.கேணல் சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந் நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசிய தலைவரால் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந் நாட்களில் மாவீரர்களின் உறவினர்கள், போராளிகள், இனப்பற்றாளர்கள் என பலராலும் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும். இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந் நாளில் தமிழ்மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றுவர்.

பொதுவாக, தாயகத்தில் மாவீரர் வாரம் முழுவதும் மஞ்சள் சிவப்பு நிறக் கொடிகள் பறக்கவிட்டு, மாவீரர்களுக்கான பாடல்கள் ஒலிக்கவிட்டு துயிலும் இல்லங்களில் வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், புலம்பெயர் தேசங்களிலும் இவ்வகையான வணக்க நிகழ்வுகள் நடாத்துவதுடன் குறிப்பாக, இத்தாலியிலுள்ள தமிழ்பாடசாலைகளில் எமது தமிழ் இளையோர்கள் சிறுவர்களுக்கு மாவீரர்கள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டு, மாவீரர் நாளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.

கொரோனாவைரசு நோய்த்தொற்றால் கடந்த இரண்டு வருடங்களாக புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாளினை வழமை போல் மண்டபங்களில் ஒழுங்கு செய்ய முடியாத சூழ்நிலை நிலவியது. ஆனால், இந்த வருடம் இத்தாலியில் பல நகரங்களில் மண்டபங்களில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் பல சிறுவர்கள் தங்கள் ஆக்கங்கள் மூலம் மாவீரர்களை நினைவுகூர்ந்தார்கள். அவர்களின் ஆக்கங்கள் சிலவற்றை நம் தமிழ் தகவல் மையம் வலைப்பக்கத்தில் பிரசுரித்திருந்தோம். அதேபோல், இந்த ஆண்டும் தமிழ் தகவல் மையம் பக்கத்தில் சிறுவர்களின் மாவீரர் நினைவு சுமந்த ஆக்கங்கள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவை இந்த மாவீரர் வாரம் முழுவதும் பகிர்ந்து வருவோம்.

உங்கள் கவனத்திற்கு