சோல்பரியின் காலந்தவறிய வருத்தம் – வரலாறு சொல்லும் பாடம் 13

பீ. எச். பாமர் எழுதிய “சிலோன் ஏ டிவைடட் நேசன்” (Ceylon A Divided Nation) என்ற நூலுக்கு முகவைரை எழுதிய போது அதில் சோல்பரி இப்படிக் குறிப்பிடுகிறார். «இந்தியா, பாக்கிஸ்தான், மலாயா, நைஜீரியா போன்ற நாடுகளுக்கான அரசியற்றிட்டங்களிற் செய்தது போல, சிறுபாண்மையினரின் உரிமையை உறுதிசெய்யும் வலிய காப்பீடுகளை இந்த (இலங்கை) அரசியற்றிட்டத்திற்குப் பரிந்துரை செய்யாமல் விட்டது பெரும்பிழையென்று நினைக்கிறேன். இந்த இரண்டு (சிங்களவர், தமிழர்) சமுதாயங்களிடையிற் காலங்காலமாக நிலவும் முரண்பாடுகள் பற்றிய மேலெழுந்த வாரியான புரிதலே எமது ஆணைக்குழுவிற்கு அப்போது இருந்தது. சிறுபாண்தையினரின் மனநிறைவும், நலனும் இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த நலனுக்குத் தேவையானது என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியுமென்றே, ஆணை்க்குழு அன்று திருப்திப்பட்டுக் கொண்டது. ஆணைக்குழுவின் குறிப்பின் படி அவ்வகையில் இல்லையெனில், எந்தவொரு காப்பீடும் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியாது. அண்மைய ஆண்டுகள் ஆணைக்குழுவின் இந்த அவதானிப்பு முழுதாகச் சரியெனவே காட்டுகிறது.»

B.H Farmer எழுதிய “Ceylon A Divided Nation” (சிலோன் ஏ டிவைடட் நேசன்)

டி. எஸ் சேனநாயக்கா உயிரோடு இருந்திருந்தால் 1958இல், நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்த பரபரப்புகளும் நிச்சயம் நிகழ்ந்திருக்க முடியாதெனத் தான் நம்புவதாகச் சோல்பரி கூறுகிறார். 1945இல் டீ.எஸ் சேனநாயக்கா பிரித்தானிய அரசுக்கு அரசியற்றிட்டத்தைப் பரிந்துரைத்துப் பேசும் போது “நாட்டின் நலனுக்குத் தமிழர்கள் முக்கியமானவர்கள்” என்று கூறியதை சோல்பரி அப்படியே நம்பி ஏமாந்தாரென்பதை அவரது முகவுரை வெளிப்படையாக்க் காட்டுகிறது.

டீ.எஸ். சேனநாயக்கா டொனமூர் அரசியற்றிட்டத்தின் கீழானா சட்டசபையிற் கிடைத்த தனிச்சிங்கள அமைச்சரவை வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழர் நிலங்களை விழுங்கத் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்த அதேவேளை, பிரித்தானியாவின் கண்களிலே ஒருமைப்பாடு கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்பத் துடிக்கும் தூய்மையாளராகத் தம்மைக் காட்டிக்கொள்ளவுந் தவறவில்லை. பிற்காலத்தில் 1986ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் நாளன்று, 94.000இந்தியத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தின்மீது பேசும்போது கலவானைத்தொகுதி உறுப்பினர் சரத் முத்துவெட்டுவேகம « அடி. எஸ். சேனநாயக்கா உயிரோடு இருந்திருந்தால் மாக்கியவல்லிக்கு அரசியற் பாடம் கற்றுக் கொடுத்திருப்பார் » என்று கூறுமளவிற்கு அக்காலத்தில் அரசியற் சதுரங்கக்காய்களை டீ.எஸ். சேனநாயக்கா உருட்டினார்.

உங்கள் கவனத்திற்கு