புதிய வருடத்திற்கு தயாராகுவோம்!

காலம் காலமாய் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அந்நியனாக்கப்பட்டு வருகின்றான் ஈழத்தமிழன். தமிழ்ர்களுக்கென்ற ஒரு நிலம் உண்டு, அது தனித்தமிழீழமே என்ற தீர்வை நோக்கி, இன்று வரை, தமிழீழ மண்ணில் அயராமல் போராடி வருகின்றான் ஈழத்தமிழன். இவ்வாறு, போராட்டமே வாழ்வாகி இறுதி மூச்சு வரை சுதந்திர தாகத்தைக் கொண்டு களமாடி வித்தாகிய எமது மாவீரர்களை நெஞ்சில் சுமந்து அவர்களது கனவு நனவாகும் வரை மனம் தளராமல் பணி புரிகின்றார்கள் உலகெங்கும் வாழும் எமது ஈழத்தமிழர்கள்.

இவற்றில் முக்கியமாக, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தனித்தமிழீழம் எனும் ஒரு உயரிய இலட்சியத்திற்காக இன்று ஒன்றுபட்ட சக்தியாக அணிதிரண்டு தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்து, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது எமது இளம் சமுதாயம். அவ் வகையில், இத்தாலி நாட்டில், 2019ம் ஆண்டில் தேசிய கட்டமைப்புக்களுடன் இணைந்து இளையோர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டு தமிழர்களுடைய வரலாறு, போராட்டம் மற்றும் அரசியல் சார்ந்த வகுப்புகள் இளையோர்களாலேயே நடாத்தப்பட்டன.

தமிழர்களுடைய அடையாளத்தைக் காப்பாற்றுவது, தாயகத்தில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்துவது, புலத்திற்கும் தேசத்திற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துவது, அடுத்த தலைமுறையை வழிநடத்துவது என்ற நான்கு முக்கிய அம்சங்கள முன்வைத்து இவற்றிற்கான பல திட்டங்களை வகுத்து பணிபுரிய ஆரம்பித்தார்கள் இத்தாலி வாழ் தமிழ் இளையோர்கள்.

புலத்திற்கும் தேசத்திற்கும் ஒரு உறவுபாலத்தை உருவாக்கி உறவை வளர்ப்போம் எனும் ஒரு பெரும் திட்டத்தை முன்வைத்து இதனுடைய முதலாவது கட்டமாக தாயகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் சேகரித்து அனுப்பப்பட்டன. இரண்டாம் கட்டமாக, தாயகத்தில் கல்வி கற்கும் 150 மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக தமிழ், விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் சார்ந்த சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவைரசால் தவித்துக் கொண்டிருக்கும் இவ் இக்கட்டான காலப்பகுதியில், இத்தாலி வாழ் தமிழ் மக்களுக்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு தமிழ் தகவல் மையம் எனும் ஒரு தகவல் தளத்தை உருவாக்கி, கொரோனாவைரசின் அன்றாட புள்ளிவிபரங்கள், சட்டம், சலுகை, தாயகம் சாந்த சிறப்பு கட்டுரைகள், தமிழ் மாணவர்களின் ஆக்கங்கள், தமிழ் இளையோர்களின் திட்டங்கள் குறித்த பல்வேறுபட்ட தகவல் பகிரப்பட்டு வருகின்றன.

தாயகத்தில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் முகமாக, மே 18 தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு cartoon வடிவத்தில் ஒரு காணொளிப் பதிவு தயாரிக்கப்பட்டது. மேலும், கொரோனாவைரசு அவசரகாலத்தால் அனைவரும் ஒன்றுகூடி தமிழின அழிப்பு நாளை நினைவுகூற முடியாத காரணத்தால், tamilsresist.com என்ற ஒரு இணையத்தளத்தை புதிதாக உருவாக்கி இனவழிப்பில் கொள்ளப்பட்ட உறவுகளுக்காக ஒரு நினைவுச்சுடரை இணையவழியில் உலக தமிழ் மக்கள் அனைவராலும் ஏற்றப்பட்டது.

மேலும், 1983 இனக்கலவரத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களை Silhouette எனும் நுட்பத்தினால் மீள் உருவாக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்தாலும், தமிழர்கள் என்றால் யார், தமிழர்களுடைய வரலாறு, போராட்டம் அனைத்தையும் நன்கு உணர்ந்து இவற்றை அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச் செல்கின்றனர் எமத் தமிழ் இளையோர்கள். அந்த வகையில், தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, அவரின் வாழ்க்கை வரலாறு உள்ளடக்கிய ஒரு புத்தகத்தையும் தமிழ் மொழியில் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

இறுதியாக, எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நீரூபித்து, பல வகையான தலைப்புகளை முன்வைத்து, Podcast அமைப்பில் பல அனுபவப் பகிர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதில் முதலாவதாக மாவீரர் நாள் சம்மந்தமான சிறப்பு அனுபவப் பகிர்வும் தொடர்ச்சியாக பல வெவ்வேறான தலைப்புகளில் கலந்துரையாடல் மூலம் பல பகிர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சமூக வலைத்தளங்களிலும் தகவல் தளத்திலும் தமிழர் வரலாறு, தாயகம் சார்ந்த பல சிறப்பு கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிப் பதிவுகள் தொடர்ச்சியான முறையில் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறு, பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுத்து வரும் எமது தமிழ் இளையோர்களின் பணி மென்மேலும் வளர வேண்டும். இனி வரவிருக்கும் புதிய ஆண்டான 2021ற்கும் மேலும் பல திட்டங்களை வகுத்து அவற்றிற்கு செயல் வடிவம் கொடுக்க தயாராகி வரும் எமது இளையோர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இவ் இளையோர்களுடன் இணைந்து சுதந்திர தமிழீழத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்றுவோம்!

உங்கள் கவனத்திற்கு