தமிழீழ விடுதலையை இறுதிவரை நேசித்த எம்.ஜி.ராமச்சந்திரன்

இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் – சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவரது தந்தையின் நண்பர் வேலுபிள்ளை அவர்கள் காவல் துறையில் பணியாற்றி வந்தார். தந்தையார் அவரின் உதவியுடன் அங்குள்ள ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சிறு வயதில் பிள்ளைகள் தந்தையை இழந்து பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர். படிக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் நடிக்கும் நிலை வந்ததே என தாயார் மனம் வருந்தினார். பின்பு இந்தியா சென்று குடியேறினர். அங்கு இவர் பல நாடகங்களை மேடையேற்றி

இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அரசியல் வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில் நடிப்பும் அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக் காலத்திலேயே பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால் அவருடைய இளம் வயதிலேயே இந்திய நஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர் ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார்.
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமா மகேசுவரனார் பிறந்த தஞ்சையில் தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர்.
தமிழ்மொழி தமிழர்களின் கலை இசை நாடகம் ஓவியம் சிற்பம் கட்டிடக் கலை தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் மொழியியல் வரலாறு புவியியல் மெய்யியல் கடலியல் சித்த மருத்துவம் கைவினைக் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப 1981 இல் முதலமைச்சராக இருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.
இதை விட இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும் செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும் வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது.” ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போதே புலிகளின் போராட்டம் வெல்ல வேண்டும் என தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை எந்த நெருக்குதல் பற்றியும் கவலைப்படாமல் உலகறியத் தந்தவர் எம்ஜிஆர்.
1980களில் ஈழப் போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கு என்று தனி நாடு அமைய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று இரண்டு கோடி ரூபாயை முதலில் கொடுத்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று தலைவர் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலகட்டத்திலும் பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்து மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தன் நிலையை

பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார். இவர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்பு கூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தனைக்கும் அந்த சமயத்தில் இந்திய அமைதிப் படை வட இலங்கையில் நிலை கொண்டிருந்தது. அதனால் இந்திய ராணுவம் தான் தமிழர்களைக் கொல்கிறது நீங்கள் இதில் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன் அடிப்படையிலேயே ராஜிவ் காந்தியை எம்.ஜி.ஆர் நேரில் சந்தித்து போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தினார். சுதந்திர தமிழ் ஈழம் அமைவதற்கு நிதியுதவி கொடுத்தது மட்டுமன்றி போரில் காயப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு மதுரையில் தனியாக மருத்துவமனையை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்”
மரண வாயிலில் தான் இருந்த போதும் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் பாதுகாக்கத் துடித்தார். ஆனால் அவரது உடல் நிலை
ஒத்துழைக்கவில்லை. உலகெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கிய எம்.ஜி.ஆரின் மறைவு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் உலுக்கியது.
எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.
அவர் மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் என்றுமே இறையாக உள்ளார்.

உங்கள் கவனத்திற்கு