அங்கீகரிக்கப்படாத ஓரு தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் ஆளுமை அன்ரன் பாலசிங்கம்

மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் அதியுச்ச தேவையாக பிறப்பெடுத்ததே அரசியல் ஆகும். தனி மனிதனின் தேவைகள், உரிமைகள் அதன் தொடர்ச்சியாக அவனது சமூக வாழ்வு அதில் அவரவர்க்குரிய வாழ்விடம், வரைமுறைகள், வரையறைகள், மரபுகள்,  பண்பாட்டு விழுமியங்கள, மற்றும் பொருளாதார வாழ்வு என ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து கிடக்கும் மனிதவாழ்வியக்கத்தின் ஒட்டு மொத்த தேவைகளுக்கான கருத்தியலே அரசியல் எனலாம். இதுவே ஓரு நாட்டு மக்களின், தேசிய இனத்தின் அல்லது இனக்குழுமத்தின் இருப்பை மற்றைய நாடுகள்,  இனங்கள் அதாவது ஒட்டு மொத்தமாக சர்வதேச உறவை,  இணைப்பை எல்லாவற்றையுமே தீர்மானிக்கின்றது.

மனித குலத்தின் அதியுச்ச வளர்ச்சியும்,  பெருக்கமும் அதன் தேவைகளும், விளைவாக போட்டா போட்டிகளும் முக்கியமாக பொருளாதார தேவைகளின் நிமித்தம் அரசியல் என்பது பல மாறுபட்ட வடிவங்களில் பரிணாமித்து தொடர்ந்தும் மாற்றம் பெற்றும் மேலும் தத்தம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வதுமாக அடிப்படையில் இதுவானது எல்லோருக்கும் பொதுவானதாகவோ அல்லது நேர்மையானதாகவோ இருக்கவில்லை; இருக்கப் போவதும் இல்லை.

இவ்வுலகின் அண்மைக்கால ஒழுங்கில் ஓர் நாடு அல்லது இனம் தனக்குரிய அரசியல் கொள்கையை வகுத்துக் கொள்வதும் தத்துவார்த்தமாக அதில் நின்று, அதை நகர்த்துவதும் இலகுவானதல்ல. அதுவும் அடக்குமுறைக்குள்ளான ஓர் தேசிய இனத்தின் விழுமியங்களை காத்து நகர்வதென்பது எமது அதாவது தமீழீழ தேசிய இனத்திற்கு அத்தியாவசியமானதொன்றாகும்.
கடந்த முப்பதாண்டுகால தமீழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அதன் பாதையை தேவையை தமிழீழ தேசியத்தலைவருடன் இணைந்து தீர்மானித்ததில் பெரும்பங்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்குண்டு.
எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராசதந்திர நகர்வுகளில் எனக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி ஆறுதல் தேடி ஓட பாலா அண்ணை இன்று என்னுடன் இல்லை. இவர் இழப்பு இட்டுநிரப்ப முடியாதது. என் ஆன்மாவை உலுக்கிவிட்டது ” என்று தேசியத்தலைவர் கூறிய வார்த்தைகள் தமிழீழ தேசிய விடுதலை போராட்டத்தில் அவர் பங்கின் காத்திரத்தை இயம்பி நிற்கிறது.
இனி தமிழ்த்தேசியத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் அனைவர் மனங்களிலிலும் செல்லமாக பாலா அண்ணா என பதிந்துவிட்ட இவர் யார்? இவரின் பங்கு பற்றி சில பதிவுகளை இங்கு பார்ப்போம்.
1938ம் ஆண்டில் தமிழர் தாயகத்தில் பிறந்த பாலா அண்ணா தனது உயர் கல்வியை முடித்த பின்னர் ஓர் ஊடகவியளாராக பணியைத் தொடங்கி சில காலம் தென்னிலங்கையில் வீரகேசரி நாளிதளில் பணியை தொடங்குகின்றார்.

தொடர்ந்து இலங்கையின் பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவே பத்தாண்டு காலம் தொடர்ந்து பணியாற்றி பிரித்தானிய குடியுரிமையை பெற்று 1970களில் பிரித்தானியா சென்று உலக அரசியல், மனிதவாழ்வியல் மனிதவுரிமை என பல் துறையிலும் தனது பட்டறிவை வளர்த்து லண்டன் பல்கலைக்கழக விரிவுரியாளராக பணியாற்றி வருகின்ற அதே நேரத்தில் கெரில்லாப்போர் என்ற நூலையும் எழுதுகின்றார்.
இக்காலகட்டத்திலேயே பின்னாளில் இறுதிவரை அவருடன் வாழ்க்கைத்துணையாக இருந்த அவுஸ்த்திரேலியா பெண்மணி  அடேல் அம்மையாரையும் 1978ம் ஆண்டளவில் சந்திக்கின்றார்.
பல்கலைகழகத்தில் தொடங்கிய இவர்களின் சந்திப்பு உலக அரசியல் தொடர்பாகவும் இவர்களிடையே இருந்த கருத்தொற்றுமையும் இவர்களை ஈர்த்து அக்காலத்தில் முனைப்பெற்றிருந்த அமெரிக்க காலனித்துவ எதிர்ப்பு, மற்றும் தென்னாபிரிக்கா, சிம்பாபே, பலஸ்தீனம் போன்ற நாடுகளின் விடுதலை தொடர்பான அரசியல் இயக்கங்களின் அசியல் போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்காற்றி வருகின்றனர்.
இக்காலகட்டத்திலேயே எமது தமீழீழ விடுதலைபபோராட்டம் முனைப்பு பெற்று தேசியத்தலைவரின் தலைமையின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் கெரில்லா இயக்கமாக பரிணமிக்கின்றது.

இத்தருணத்திலேயே தலைவர் பிரபாகரன் அவர்கள் பாலா அண்ணை தொடர்பாக கேள்வியுற்று அவரைத்தொடர்பு கொண்டு உலகில் அக்காலத்தில் இடம்பெற்ற கெரில்லா போராட்டங்கள் சார்ந்த  தமிழ் மொழிப்பெயர்ப்பை வேண்டுகின்றார். குறுகிய காலத்திலேயே இவர்களிடேயே ஓர் ஆத்மார்த்தமான நட்பு வளர்கின்றது. அதன் தொடர்ச்சியாக அக்காலகட்டத்தில் தமிழகத்தில் இடம் பெற்ற போராளிகள் பயிற்சி முகாம்களில் பாலா அண்ணாவின் அரசியல் வகுப்புக்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.
இது பின்னாளில் விடுதலை இயக்கம் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் பல தளபதிகள் பாலா அண்ணாவுக்கு ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்களாக இருக்க துணை நின்றது.
இதனையே தேசியத்தலைவர் அவர் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார். « எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக, தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக ஊக்கமும், உத்வேகமும், ஆலோசனையும், ஆறுதலும் தந்து எனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டு புரிந்து கொண்டவர்.  எனது பழுக்களையும் பங்கிட்டுக் கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம் பெற்ற காலம் முதல் என்னோடு இருந்து எல்லா சோதனைகளையும், வேதனைகளையும், சவால்களையும், சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர். எமது அரசியல் இராசதந்திர முன்னெடுப்புகளுக்கு மூலாதாரமாக முன்னின்று செயற்பட்டவர் ».

பாலாண்ணையால் எழுதப்பட்ட புத்தகங்களே அவர் பங்கு பற்றியும் அவர் ஆளுமை பற்றியும் எடுத்துரைக்கும். குறிப்பாக ஆரம்ப காலத்தில் இந்திய றோ உளவுப்படையிருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட முரண்பாடு முதல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜீ. ஆர் தலைவர் பிரபாகரனுக்கிடையான ஆத்மார்த்த உறவு திம்பு பேச்சு வார்த்தை முதல் நோர்வே அனுசரனையுடன் சர்வதேச நாடுகளில் இடம் பெற்ற பேச்சு வார்த்தைகள் என அவரின் பங்கும் பதிவுகளும் எமது வரலாற்று பதிவுகள்.  இது வரும் தலைமுறைகளுக்கான வழிகாட்டிகள்.
ஏனென்றால் ஓர் அரசியல் மாற்றத்துக்காக இடம் பெறும் போராட்டத்தில் எதிர் கொள்ளும் இராணுவ அடக்குமுறைக்கெதிராக ஆயுதமேந்தி போராட நிர்ப்பந்திக்கப்படும்போது தொடர்ந்தும் இலக்கு நோக்கி பயணிக்க சமாந்திரமாக அரசியல் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதையே சீனத்தலைவர் மா. ஓ. சேதுங் அவர்கள் ஒரு போராட்டத்தில் யுத்ததந்திரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு அரசியல் தந்திரோபாயமும் முக்கியமானது. அதாவது எவ்வளவு ஆற்றலுள்ள அரசியல் முயற்சியும் பலவீமான யுத்த தந்திரத்தால் பாதிக்கப்படும். அதுபோலவே பலமான யுத்த வெற்றியை தக்க வைக்க சரியான அரசியல் தந்நதிரோபாயம் அடிப்படையானது.
அவ்வகையில் பல நெருக்கடிகள் மத்தியில் எமது போராட்டத்தை முன்னகர்த்த ஓர் காத்திரமான அரசியல் அணுகுமுறை தேவைப்பட்டது. அதாவது சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படாமலும் அதே நேரம் சர்வதேச சதிக்குள் சிக்குப்படாமலும் எமது போராட்டத்தை நகர்த்த முன்னெடுக்க பாலாண்ணையின் பங்கு மகத்தானது. அவரின் பன்னாட்டு பட்டறிவால் அவர் சர்வதேச இராசதந்திரிகளுக்கு இணையாக உயர்ந்து நின்றார்.

அதுமட்டுமல்லாமல் பேச்சுவார்த்தை மேசைகளில் நகைச்சுவை கலந்து நாசுக்காக பதிலடிகொடுப்பதிலும் வல்லவர். உதாரணமாக பிரேமதாசா அரசுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் பிரேமதாசா அவர்கள் பிரபாகரன் எனது இராணுவத்தளபதியாகவும் நீங்கள் எனது ஆலோசகராகவும் இருந்தால் இலங்கை வல்லரசாக மாறிவிடும்.
இதற்கு பாலா அண்ணா எங்கள் தனிநாட்டுக்கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டு தமிழீழம் உருவாக்கப்படுமானால் தங்கள் தேசப்பற்றும் அரசியல் சாணக்கியத்தினாலும் இலங்கையில் இரண்டு வல்லரசுகள் உருவாகிவிடும் என்றாராம். இதே போன்று தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரைகளில் தங்கி நிற்கும் பூடகமான செய்திகளை இலகுவாக அதன் கனதி குறையாமல் நகைச்சுவையுடன் தமிழ் மக்கள் மனங்களில் பதிய வைத்தவர்.

நீண்டகாலம் தமிழர் தேசம் தாண்டி வாழ்ந்தாலும் இவரின் தமிழ்ப்புலமையும் சொல்லாடலும் அலாதியானது. நிகராகவே ஆங்கில மொழியை கையாள்வதிலும் வல்வராக திகழ்ந்தார்.
இதுவே இவரை இராசதந்திரியாகவும், மக்களுக்கு போராட்டம் பற்றி தெளிவுபடுத்தவும்,  போராளிகள் மத்தியில் நேசத்தையும் புரிதலையும் வளர்க்கவும், சில சர்ச்சைகளைத் தீர்க்கவும் என முப்பரிணாமத்தில் இவரின் பணி விசாலாமாக இருந்தது.
தமிழீழ தேசத்தின் முதல் அரசியல் இராசதந்திரியும் இவர் மட்டுமே. நீண்ட வரலாறு கொண்ட எம் தேசத்தில் அவ்வப்போது சில அரசியல் அறிவாளிகள் தோன்றி மறைந்திருந்தாலும் அவர்கள் தமிழ்மக்களுக்காக அதை பயன்படுத்தவில்லை. மாறாக சிங்கள தேசத்திற்கு இசைவாகவும் அல்லது சுயநல நோக்கிற்கும் தம் பொருளாதார மேம்பாட்டிற்குமே பயன்படுத்தினர். இதனாலேயே பாலாண்ணா தன்னிகரற்று நிற்கின்றார்.

இவரின் இழப்பு எமது போராட்டத்தின் மிக நெருக்கடியான காலத்தில் சம்பவித்தது துன்பகரமானது. இதுவே எம் போராட்டம் சர்வதேச அரங்கில் பின்னடைவை பிற்காலத்தில் சந்திக்க காரணியாக அமைந்தது என்பது சர்வதேச ஆய்வாளர்களின் கருத்து மட்டுமல்ல, பல தமிழர் மனங்களிலும் பதிந்துள்ளது. வன்னியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் நகைச்சுவையாக நான் பிரபாகரனின் குரலே என கூறியது ஆழ்ந்த அர்த்தமுள்ளது. அவர் பிரபாகரனது குரல் மட்டுமல்ல எம் தேசத்தின் குரல். அங்கீகரிக்கப்படாத எம் தேசத்தின் அங்கீகாரம் பெற்று சர்வதேச மட்டத்தில் ஒட்டுமொத்த அங்கீகாரம் பெற்ற தமிழர் தேசத்தின் முதன்மையான அரசியல் போராளி, இராசதந்திரி. அவர் மறைந்து பதின்னான்கு ஆண்டுகள் கடந்து விட்டது. இட்டு நிரப்ப முடியாத அவர் இடத்தை அவர் இட்ட பாதையில் தொடர்ந்து நாம் இணைந்து பயணித்து அவர் கனவை நனவாக்க முயற்சிப்பதே அவருக்கு நாம் செய்யும் கடமையும் வணக்கமுமாகும்.

உங்கள் கவனத்திற்கு