டிசம்பர் 4 முதல் நடைமுறைக்குவரும் புதிய ஆணை

டிசம்பர் 03 அன்று பிரதமர் Conte, Covid-19 தொற்றுநோய் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகள் கொண்ட புதிய ஆணையினை கையெழுத்திட்டார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த ஆணை விளக்கப்பட்டுள்ளது. “நாங்கள் ஒரு நாடளாவிய முடக்கநிலையை தவிர்த்துவிட்டோம், எனினும் இப்போது, ​​நத்தார் காலப் பகுதியில், நாங்கள் எங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை குறைத்து மீண்டும் தொற்றுப்பரவளை அதிகரிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். மூன்று நிற மண்டலப் பிரிவு நடைமுறையில் உள்ளது என்றும்: “நத்தார் விடுமுறை நாட்களில் அனைத்து பகுதிகளும் மஞ்சள் நிற பகுதிகளாக மாற்றப்படும்” எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த புதிய ஆணை டிசம்பர் 4 முதல் ஜனவரி 15 வரை அமுல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்கள்

புதிய ஆணையின்கீழ், மூன்று நிற மண்டலங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு. தொற்றுநோய்ப் பரவல் வளைவின் வீழ்ச்சியின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் Roberto Speranza, வாராந்திர கண்காணிப்பின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை முதல் இத்தாலியின் பல பகுதிகளை “மேலும் மஞ்சள்” ஆக்கும் புதிய கட்டளைகளில் கையெழுத்திடுவார்.

  • நகர்வுகள்

டிசம்பர் 21 முதல் ஜனவரி 6 வரை பிற பிராந்தியங்களுக்கும் தன்னாட்சி மாகாணங்களுக்கும் இடையில் நகர்வுகள் மேற்றகொள்ளவது தடை செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 25, 26 மற்றும் புத்தாண்டு தினத்தன்று வசிக்கும் நகராட்சிகளுக்கு இடையில் எந்தவொரு நகர்வுகளும் தடைசெய்யப்பட்டுள்ளது. நகர்வுகள் வேலை, சுகாதாரம் மற்றும் “அவசியத் தேவைகள்” காரணங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

  • ஊரடங்கு சட்டம்

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இத்தாலி முழுவதும் இரவு நேரங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். இந்த தடை 24, 25, 31 டிசம்பர், 1 மற்றும் 6 ஜனவரி ஆகிய திகதிகளிலும் செல்லுபடியாகும். புத்தாண்டு தினத்தன்று (1 சனவரி) இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை இத் தடை நீட்டிக்கப்படும்.

  • நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் வீட்டில் சேர்ந்து வசிப்பவர்களுடன் மட்டுமே

“குறிப்பாக இந்த சந்தர்ப்பங்களில், வெளி ஆட்களை வீட்டுக்குள் பெற்றுக்கொள்ளவேண்டாம் ” என்பது அரசாங்கத்திடமிருந்து ஒரு “வலுவான பரிந்துரை” என்று பிரதமர் Conte கூறினார். நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் வீட்டில் சேர்ந்து வசிப்பவர்களுடன் மட்டுமே என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • பள்ளிக்குத் திரும்புதல்

ஜனவரி 7 முதல் 75% விகிதம் உயர்நிலைப் பள்ளி (scuola superiore) மாணவர்கள் வகுப்பிற்குத் திரும்புவார்கள். மற்றும் பிற்பகல் வேளை பள்ளிகளின் இயக்கம் வரவேற்கபடுகின்றன.

  • பார்கள் மற்றும் உணவகங்கள்

மஞ்சள் நிற பிரதேசங்களில் 25,26,31 டிசம்பர், 1 மற்றும் 7 ஜனவரி ஆகிய நாட்களிலும் மதிய உணவிற்கு உணவகங்கள் திறந்திருக்கும். சிவப்பு மற்றும் செம்மஞ்சள் பகுதிகளில் 5 மணி முதல் 22 மணி வரை பார்கள் மற்றும் உணவகங்கள் எடுத்துச் செல்லக் கூடிய சேவையை வழங்கலாம்.

  • டிசம்பர் 31 ஆம் தேதி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு அறையில் மட்டுமே உணவு சேவை

31 டிசம்பர் இரவை ஒரு விடுதியில் கழிக்க முடிவு செய்பவர்களுக்கு தங்கள் அறையில் கழிக்கவேண்டும். புதிய ஆணையின் படி, 2020 டிசம்பர் 31 முதல் 2020 ஜனவரி 1 ஆம் திகதி வரை மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு தங்கள் அறையில் மட்டுமே உணவு சேவை வழங்க அனுமதிக்கப்படுகிறது.

  • வழிபாடுகள்

டிசம்பர் 24 தேவாலயங்களுக்கு செல்பவர்கள் இரவு ஊரடங்கு நேரத்திற்கு முன்பு வீடு திரும்பும் விதமாக இரவு வழிபாடுகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக நத்தார் வழிபாட்டு நேரங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

  • கடைகள் மற்றும் வணிக வளாகங்கள்

டிசம்பர் 4 முதல் ஜனவரி 6 வரை சிவப்பு பிரதேசங்களைத் தவிர்த்து பிற பிரதேசங்களில் கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வணிக வளாகங்கள் (centri commerciali) திறப்பதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள் (supermercati) வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்.

  • வெளிநாட்டிலிருந்து திரும்புவர்களுக்கான தனிமைப்படுத்தல்

புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் “வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் அல்லது இந்த காலகட்டத்தில் இத்தாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும்” கட்டாய தனிமைப்படுத்தல்” உள்ளது.

  • Cashback

நத்தார் விற்பனைகளை ஊக்குவிப்பதற்காக “Italia cashless” திட்டத்தை தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது: டிசம்பர் 8 முதல் ஆண்டு இறுதி வரை டெபிட் (debit) மற்றும் கிரெடிட் (credit) அட்டைகளுடன் எவ்வித பொருட்களும் வாங்குபவர்கள் (உணவு, நத்தார் பரிசுகள்) 10% சதவிகிதம் (அதிகபட்சம் 150 யூரோக்கள் வரை) செலவினங்களை திருப்பிபெற்றுக்கொள்ள முடியும். மேலும், இதற்குரிய “IO” செயலி (app) மூலமாகவே பணம் செலுத்தும் பட்சத்தில் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

  • Covid-19 தடுப்பூசி

“தடுப்பூசி எடுத்துக் கொள்வது கட்டாயம் இல்லை, கட்டாயமற்ற தடுப்பூசியாகவே இருக்கும்” என அரசாங்கம் ஏற்பாடு செய்யும் தடுப்பூசி பிரச்சாரம் குறித்த கேள்விக்கு பிரதமர் Conte பதிலளித்தார்.

உங்கள் கவனத்திற்கு