வன்னித் தமிழன் மாவீரன் பண்டாரவன்னியன்

மாவீரன் பண்டாரவன்னியனின் தடம்பற்றி வேர் தேட விளைவோம். வேர்தேடுவதில் ஆர்வமுள்ள விழுதுகளாகவும் கண்முன்னே எமது தலைமுறைசார்ந்த எமது தலைமுறைக்கு முந்திய பல விடயங்கள் அழிந்து கொண்டிருப்பதையும் கண்டு அப்படியே  கடந்து போகமுடியாத ஓர் ஆற்றாமையுடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. 

        மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம்செறிந்த வாழ்வையோ அல்லது அவருடைய ஆட்சி பற்றியோ கூறுவதற்கு முன்பு பண்டாரவன்னியனின் வன்னிநாடு, வன்னிநிலம் பற்றிய சில விடயங்கள் பற்றிப் பாரப்போம். இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தையும், தெற்கே அருவியாறு, நுவரெலியா மாவட்டம் போன்றவற்றையும், மேற்கே மாந்தை, மன்னார் போன்ற மாவட்டங்களையும், கிழக்கே திருகோணமலையையும் கொண்டதாக பரந்து விரிந்த வீரம்செறிந்த நீண்டகாலத் தொன்மையுடைய நிலம் வன்னிநிலம். இத்தனை பெருமைகளையும், இத்தனை தத்துவங்களையும் கொண்ட வன்னி நிலத்தினுடைய தனித்துவம் நிலைத்திருக்க வன்னியர் என்கின்ற இனக்குழுமம் கரணியம் எனப் பல நூல்கள் கூறுகின்றன. அந்த வன்னிநில வீரத்தின் சாட்சியாய், வன்னிநிலமக்கள் மாண்பின் சாட்சியாய், வன்னியை ஆண்ட கடைசி மன்னன் என்னும் புகழோடு பண்டாரவன்னியன் பற்றி தடம் தேடுவோம்.

           யாழ்ப்பாண வைபவமாலை நூலாதாரங்கள் அடிப்படையில் ஒப்பிடுகையில் வட இலங்கையில் முல்லைத்தீவில் பிறந்து வளர்ந்தவர் பண்டாரவன்னியன். இவரது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என்பதும் தன் முன்னோர் ஆண்டுவந்த வன்னிஇராட்சியத்தை ஆண்ட ஒரு சிற்றரசர் என்பதும் தெளிவாகிறது. சோழப்பேரரசுகளால் சோழநாட்டிலிருந்து ஈழநாட்டையாள அனுப்பப்பட்ட வன்னிக்குலத்தளபதியின் வழித்தோன்றல் பண்டாரவன்னியன் என்பது யாழ்ப்பாண வைபவமாலையின் கருத்தாகும். இலங்கைக்குப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்ற அந்நியர்கள் வரவுக்கு முன்னர் செழித்திருந்த வன்னி இராட்சியத்தின் கடைசி மன்னன் பண்டாரவன்னியன் எனக் கூறலாம்.

         1605 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராட்சியம், கண்டி இராட்சியம் என அனைத்தையும் கைப்பற்றி ஆட்சி செய்தபோதிலும் அவர்களின் ஆட்சி முடியும்வரை அவர்களால் வன்னி இராட்சியத்தை கைப்பற்றமுடியவில்லை என்பதுதான் பண்டாரவன்னியனின் ஆளுமையின் சாட்சியாகும். போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த காலத்தில் கோட்டை இராட்சியம், கண்டி இராட்சியம், யாழ்ப்பாண இராட்சியம் என மூன்று இராட்சியங்கள் இருந்தன என்பது இன்றைய இலங்கைப் பாடத்திட்டங்கள் உட்பட பல நூல்களும் கூறுகின்றன. ஆனால் அதே போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது பற்றியதான ஆரம்பகால ஆவணங்களிலும் மூன்று இராட்சியங்கள் பற்றி பெரிதாக கூறப்பட்டுள்ளன.

போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் மூன்றாக பிரிக்கப்பட்டிருந்த இலங்கைத் தீவு

      போர்த்துக்கேயர்களின் மத்திய காலம், பிற்காலம் மற்றும் ஒல்லாந்தருடைய முழுவரலாற்றுக் காலத்திலும் பல்வேறு ஆவணங்கள் வன்னிஇராட்சியம் பற்றி மிக முக்கியமான ஒரு தடத்தை பதித்து வைத்திருக்கிறது. போர்த்துக்கேயர் தொடர்ச்சியாக இலங்கையை ஆளத்துடித்த அல்லது ஆண்ட ஒல்லாந்தர்கள், போர்த்துக்கேயர் போலவே இலங்கையைக் கைப்பற்ற எண்ணிய போது ஆரம்பம்பகாலங்களில் அவர்களின் தலைவலியாக கண்டி இராட்சியம், கோட்டை இராட்சியம், யாழ்பாண இராட்சியம் என்பவற்றைக் கருதினர். யாழ்ப்பாண இராட்சியத்தைக் கைப்பற்றியவுடன் வன்னிஇராட்சியம் இயல்பாகவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பது அவர்கள் போட்ட தப்பான கணக்காக இருந்தது. ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பிறகு பல்நெடும் காலமாகவே வன்னியைக் கைப்பற்ற முடியாமல் இருந்திருக்கிறது. வன்னிநிலத்தைக் கைப்பற்றுவதற்கும் தமக்குக் கீழ் அடிபணிய வைப்பதற்கும் தயக்கமும் ஒல்லாந்தரிடம் காணப்பட்டது. அதற்கான கரணியம் இரண்டு உள்ளன. ஒன்று பண்டாரவன்னியன் உட்பட வன்னியை ஆண்ட வெவ்வேறு பிரிவு மன்னர்களின் ஆட்சி மீது இருந்த ஒரு வகையான பயம். மற்றது கண்டி இராசதானிக்கும், வன்னிஇராசதானிக்கும் இடையில் இருந்த வெகுவான தொடர்பு. இந்த தொடர்புக்கான கரணியம் வன்னியை ஆண்ட வன்னிய மன்னர்களும் சரி, கண்டி இராட்சியத்தை அப்பொழுது ஆண்ட நாயக்க வழி தமிழ்மன்னர்களும் சரி இருவரும் மிக நெருக்கமான நட்பை உடையவர்களாக இருந்தமையாகும். இந்த விடயம் ஒல்லாந்தருக்குப் புரிந்தது. யாழ் இராசதானியை முற்றாகக் கைப்பற்றிய பிறகு ஒட்டிசுட்டானுக்கும் நெடுங்கேணிக்கும் இடையே ஒட்டிசுட்டானிலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பண்டாரிக்குளத்தில்தான் இந்த வாள்கொடி வீரன் பண்டாரவன்னியனின் ஆட்சிபீடம் அமைந்திருக்க வேண்டும். குமுழமுனைக்கு அருகிலுள்ள குருத்தூர் சைவ ஆலயம் பண்டாரவன்னியனின் அரண்மனை என்றும் கோட்டை என்றும் மாறுபட்ட கருத்துக்கள் இன்றும் நிலவிவருகின்றன.

           பண்டாரவன்னியன் வளைவு, பண்டாரவன்னியன் கிணறு என்பன அழிந்த நிலையில் குமுழமுனைக் கிராமத்தில் இன்றும் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் இன்றும் பல வரலாற்று எச்சங்கள் பண்டாரவன்னியனின் ஆட்சிக்கு சாட்சியாக உள்ளன. தான் ஓர் இராட்சியமாக நிமிர்ந்து நின்ற போதும் யாழ்ப்பாணஇராட்சியம், கண்டிஇராட்சியம் போன்ற அரசுகளோடு நட்புப் பாராட்டியும் ஆபத்தான வேளைகளில் உதவிகளை வழங்கியும் வன்னி இராட்சியம் இருந்திருப்பதை ஆதாரபூர்வமாக நிறுவமுடியும். குறிப்பாக கண்டி இராட்சியத்தை ஆண்ட நாயக்கர் வழித் தமிழ் மன்னர்களோடு வலுவான உறவுகள் இருந்ததை பல்வேறு வரலாற்று நூல்கள் வெளிப்படுத்துகின்றன.

தொடரும்..

ஆக்கம்: Bologna திலீபன் தமிழ் சோலை

உங்கள் கவனத்திற்கு