சிந்துவெளி நாகரிகம்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். இந்த நில உலகு தோன்றிய காலத்திலேயே தமிழ் இனம் தோன்றிவிட்டது. மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ்மொழி என்று தமிழினத் தொன்மைச் சிறப்பை எடுத்துரைக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். மனிதன் முதன் முதலாகப் பரிணாம அடிப்படையில் (Evolution) குமரிக்கண்டத்திலேயே தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். குமரிக்கண்ட மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்த நிலையில் வடஇந்தியப் பகுதிகளில் சென்று குடியேறினான். அங்கு சிந்துநதிக்கரையின் சமவெளிப்பகுதியில் அவன் அழகிய குடியிருப்புகளையும், நகரங்களையும் உருவாக்கினான். அந்த நகரங்களே இன்று மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்பெற்றுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும் நகரங்களாகும். இங்குத் தோன்றிய நாகரிகமே சிந்துவெளி நாகரிகம் எனப்படும். இதனைத் தோற்றுவித்தவர் தென்னாட்டிலிருந்து சென்று பரவிய திராவிடரே ஆவர்.

 இந்தியாவின் வடமேற்கே சிந்து ஆற்றின் கரைமருங்கு இற்றைக்கு 5000 ஆண்டுகட்குமுன் சிறந்த திராவிட நாகரிகத்தோடு விளங்கியிருந்து பின் மண்மூடுண்ட ‘மொஹெஞ்சொ-தரோ’ ‘அரப்பா’ முதலிய பெரு நகரங்கள், அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டன. தக்க நாகரிகச் சான்றுகள் அவற்றிலிருந்து நேரிற் கண்டெடுக்கப்பட்டுச் சிறந்த ஆராய்ச்சி அறிஞர்களால் நன்கு சோதனை செய்யப்பெற்றன: சிந்துவெளி நாகரிகம் திராவிட (தமிழ்) நாகரிகமே ஆகும். இற்றைக்கு 4500 ஆண்டுகட்கு முன் இந்தியா முழுமையும் திராவிடமே யென்று விளக்கி, நிலப்படப் புத்தகத்திற் (Atlas) படமும் எழுதப்பெற்றிருக்கிறது.

 •  அரப்பா பகுதியை எடுத்துக்கொண்டால்

1920ஆம் ஆண்டு அரப்பா என்ற பழைய நகரம் மண்ணுக்கடியில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறை ஒன்றும், மட்பாண்டங்களும், விலங்குகளின் எலும்புகளும், சில முத்திரைகளும் இங்கு கிடைத்தன.

அரப்பாவிலுள்ள களஞ்சியம் மற்றும் மண்டபம் ஒரு தோற்றம்

எம். எஸ். வாட் (M.S. Watt) என்னும் அறிஞர் ஹரப்பாவின் அகழ்வாய்வுகள் என்னும் நூலில் அரப்பா பற்றிக் கூறும் செய்திகள் வியப்பளிக்கின்றன. இந்த நகரத்தின் சுற்றளவு 4 கிலோ மீட்டராகும். இங்கு ஆறு பெரிய மண்மேடுகள் உள்ளன. இவற்றில் பெரியது 29,000 செ. மீ. நீளமும், 23,000 செ. மீ. அகலமும், 1,800 செ. மீ. உயரமும் உடையது. இந்த மண்மேடுகள் எட்டு அடுக்குகளைக் காட்டுகின்றன. எட்டுமுறை புதுப்பிக்கப்பட்ட நகரம் என்பதை இந்த அடுக்குகள் காட்டுகின்றன. கி.மு. 3,500க்கும் கி.மு. 2,750க்கும் இடைப்பட்ட காலத்தின் நாகரிகம் என்று இதனைக் கருதலாம்.

 •  மொகஞ்சதாரோ

மொகஞ்சதாரோ நகரம் நிலத்தின் அடியில் புதையுண்டிருப்பது 1922-இல் கண்டறியப்பட்டது. சிந்து ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ளது. இந்நகரை அகழ்ந்தபோது நாற்கோணமுள்ள ஒரு முற்றம், முற்றத்தைச் சூழ முப்பது சிற்றறைகள், சில நாணயங்கள் ஆகியன காணப்பெற்றன. அங்கே சில எழுத்து முத்திரைகளும் கிடைத்தன.

மொகஞ்சதாரோ ஏழு அடுக்குகளையுடைய நிலப்பகுதியைக் கொண்டது. வரிசை வரிசையான வீடுகள், நீண்ட தெருக்கள், பெருமாளிகைகள், நீராடும் குளம், மண்டபங்கள், கழிவுநீர்ப் பாதைகள், மட்பாண்டங்கள், பல நிறந் தீட்டப்பெற்ற பானைகள், பொம்மைகள், அணிவகைகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

மொகஞ்சதாரோவில் அகழப்பட்ட அழிபாடுகள். குளிப்பிடம் முன் பகுதியில் உள்ளது.

இவ்வாறு எம் இனத்தின் ஆரம்ப வாழ் நிலையே நாகரிகமான வாழ்கை முறையைக் கொண்டுள்ளதை நினைத்து நாம் பெருமை கொள்ளவேண்டும். உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் கொண்ட நம் உயிர் மொழி, இந்த உலகம் இருக்கும் வரை வாழ வைக்க வேண்டும். இதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாய் கொள்ளவேண்டும்.

ஆக்கம்: Napoli திலீபன் தமிழ் சோலை

உங்கள் கவனத்திற்கு