தியாகத்தின் உருவானான் திலீபன்

ஈழவிடுதலைப் போராட்டமும் அதற்காக உயிரை அர்ப்பணித்த தியாகிகளின் வரலாறும் மனித இனம் இருக்கும்வரை பேசப்படும் முக்கியமான விடயங்கள். “பிறர் வாழத் தன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் வரலாற்றில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்” என்ற கூற்றிற்கு அமைய, ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இருப்பினும், அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கையிலேந்தி, தமிழ் மக்களின் விடிவிற்காய்  நீரின்றி, உணவின்றி பட்டினியால் உயிர் துறந்த ஒரு உத்தமனின் மகத்தான தியாகம் தமிழீழப் போராட்ட வரலாற்றில் பிரதான பங்கு வகிக்கின்றது. அவர் தான் தியாக தீபம் திலீபன்.

இவர் 1963ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் 29ஆம் நாள் ஊரெழு மண்ணில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசையா பார்த்தீபன். கனிவு, பணிவு, இனிய வார்த்தை என்பன இவரிடத்தில் இயல்பாகவே குடிகொண்டிருக்கும். மருத்துவப்பீட மாணவனாக இருந்த அதே காலப்பகுதியில் (1983 இல்) இவர் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு “திலீபன்” என்னும் நாமத்தைத் தனதாக்கிக்கொண்டார். போர்ப்பயிற்சிகளை நிறைவு செய்து வெளிவந்தபோது வலிகாமத்தின் ஒரு பகுதியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்பணியில் காட்டிய திறமை, ஈடுபாடு, விசுவாசம் என்பவற்றின் காரணமாக தலைமைப்பீடம் அவரை யாழ் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக 1985ஆம் ஆண்டில் நியமித்தது. 1986இல் நடைபெற்ற முறியடிப்புச் சமரில் வயிற்றில் விழுப்புண்பட நேர்ந்ததால் திலீபனின்  சிறுகுடலின் ஒரு பகுதி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதன் பின்பும் அவர் புதுவாழ்வு  பெற்றது போல விடுதலைப்பணியில் முனைப்புடன் செயற்பட்டார்.

தன்னினம் பகைவனால் அழிக்கப்பட்டு, இந்திய வல்லாதிக்க அரசின் கூட்டுச்சதிக்கு இலக்காகி சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்ட திலீபன் தான் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடியலுக்காக உண்ணாநோன்பு, அகிம்சை வழி என மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையைக் கையில் எடுத்தார். அகிம்சைக்கே ஆசானாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும்  இந்திய தேசத்திடமே தியாக தீபம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அறப்போரைத் தொடுத்திருந்தார்.

  1. மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்;
  2. சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும்;
  3. அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்;
  4. ஊர்க்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும்;
  5. தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக காவல் நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும்;

1987 செப்டம்பர் 15ம் நாள் நல்லைக் கந்தனின் முன்றலிலே தனது உண்ணாநிலைப் போராட்டத்தை   ஆரம்பித்தார்.

நாட்கள் கடந்தோடின, ஆனால்  அந்தக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. உடல் வலிமை குன்றிய போதிலும் திலீபனின் மனவலிமை வானளவு உயர்ந்து நின்றது. தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, தான் நேசித்த மக்களுக்கு  தன் இறுதி உரையை ஆற்றினார் திலீபன்.

“என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயாராகிவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது. நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொருவரும்  இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள், என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும், வருத்தப்படும். எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று பேசி முடித்தார்.

அகிம்சையின் உறைவிடமாக மார்தட்டிக்கொள்ளும் காந்தியின் தேசம் தமிழருக்கு பெரும் துரோகம் இழைத்தது. தன்  இனத்திற்காக தன் பசி மறந்த தியாக தீபத்தின்  உயிரொளியை அணைத்தது.

1987ம் ஆண்டு செப்டம்பர் 26ம்  நாள்  சனிக்கிழமை அன்று, தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள், தனது திடமான கோரிக்கைகளை  மட்டும் நெஞ்சில் வைத்திருந்து, சரியாகக்  காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணல் திலீபன் உயிர் பிரிந்தார். அறவழிப் போரிற்கு புது இலக்கணம் வகுத்தார். அமைதிப் படை என்ற போர்வையில் எமது இனத்தை அழிக்க வந்த இந்திய வல்லாதிக்க அரசின் முகத்திரையைக் கிழித்தெறிந்தார்.

இவ் உன்னத வீரனின் மறைவு தமிழ் இளைஞர்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்து போராட்டக் களத்திற்கு இழுத்து  வந்தது. இன்று அவர் உயிர் நீத்த 33வது ஆண்டு  நினைவு  நாளை  நினைவுகூர தமிழர்  தாயகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், உலகெங்கும் பரந்து  வாழும்  ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் சுடர்விட்டு  எரிந்துகொண்டுதான் இருக்கிறது  அவர் விட்டுச்சென்ற உணர்வுத் தீ.

பார்த்தீபன் இப்போது மட்டுமல்ல, தமிழீழ மக்களின் உரிமைகளும் அவர்களுக்கான நீதியும் மறுக்கப்படும்வரை பசியோடுதானிருப்பார்.