Decreto Rilancio எனும் புதிய ஆணை

இத்தாலி பிரதமர் Conte மற்றும் பொருளாதார அமைச்சர் Gualtieri

ஆரம்பத்தில் Decreto Maggio என அழைக்கப்பட்ட ஆணை தற்போது Decreto Rilancio எனும் புதுப் பெயரில் வெளிவரவுள்ளது. ஏறக்குறைய 800 பக்கங்களைக் கொண்டு பல்வேறு துறைகளைத் தொடும் ஆணையாக இது அமைகின்றது. அதாவது ஆரோக்கியம், குடும்பம், விளையாட்டு, வேலை, வணிகங்கள் மற்றும் போக்குவரத்து சார்ந்தவை ஆகும். அடுத்த வாரம் இந்த ஆணை வெளியிடப்படவுள்ளது. இதனுடைய சில முக்கிய அம்சங்கள் இங்கே:

  • குழந்தை பராமரிப்பாளர்களுக்கான (baby sitter) சலுகை 600 இருந்து 1200 யூரோக்கள் வரை அதிகரிக்கப்படும். இச் சலுகை குழந்தைகளுக்கான துணை சேவைகளுக்காகவும், நகரங்களின் சமூக-கல்வி சேவைகளுக்காகவும், கல்வி மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளைக் கொண்ட மையங்களுக்காகவும், குழந்தை பருவத்திற்கான புதுமையான சேவைகளுக்காகவும் பதிவுசெய்ய பயன்படுத்தப்படலாம். சுகாதார பணியாளர்களுக்கு இந்த சலுகை 2000 யூரோக்களாக கூட்டப்படும்.
  • அவசரநிலை முடியும் வரை, தனியார் துறையில் ஒப்பந்த வேலைகளுடன் பணிபுரியும் பெற்றோர்கள் 14 வயதிற்கு உட்பட்ட ஒரு குழந்தையாவது இருந்தால், smartworking (வேலையிடத்தில் மேற்கொள்ளும் பணிகளை இயன்ற அளவில் வீட்டில் இருந்து செய்வது) பணியைச் செய்ய உரிமை உண்டு. இவ்வாறான வேலைக்கு முதலாளியால் தகுந்த கருவிகள் வழங்கப்படாவிட்டால், பணியாளர் தன்னிடம் இருக்கும் கருவிகள் மூலமாகவும் வேலையை மேற்கொள்ள முடியும்.
  • 3 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான பகல்நேர கோடைகால மையங்களை (campi estivi) வலுப்படுத்துவதற்கும், கல்வி வறுமையை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கும் 150 மில்லியன் யூரோக்கள் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • குறைந்த பட்சம் 35 ஆயிரம் யூரோக்களுக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள், இத்தாலியில் விடுமுறை நாட்களைக் கழிப்பதற்கு பெரிய குடும்பங்களுக்கு அதிகபட்சம் 500 யூரோக்கள் வரை சலுகையும், இரண்டு நபர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 300 யூரோக்கள் மற்றும் தனி நபருக்கு 150 யூரோக்கள் வழங்குவதற்கு திட்டம் அமைக்கப் படுகிறது. சுற்றுலாப் பருவத்தின் தொடக்கத்தை எளிதாக்குவதற்காக, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு, சுற்றுலா விடுதி வணிகங்கள், வேலைக் கருவிகள் மற்றும் இடங்களை அமைத்தல் ஆகியவற்றிற்கு 50 மில்லியன் யூரோ நிதியும் உள்ளது.
  • இந்த திட்டத்தில் அதிகபட்சம் 500 யூரோக்கள் வரை மிதிவண்டி வாங்குவதற்கான 70% தள்ளுபடி மற்றும் முடக்குநிலை காலப்பகுதியில் பேரூந்து, தொடரூந்து போன்றவற்றிற்கு செலுத்திய கட்டணப் பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகியவை உள்ளன.
  • ஐந்து மாதங்களுக்கு பணிநீக்கங்கள் நிறுத்தப்படும். இது நியாயமான புறநிலை காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்படும் காலத்தை நீட்டிக்கிறது மற்றும் நிலுவையில் உள்ள நடைமுறைகளையும் இடைநிறுத்துகிறது. மேலும், எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படுவதை ரத்து செய்வதற்கான வாய்ப்பை முதலாளிக்கு வழங்கப்படுகிறது.
  • Cura Italia ஆணையில் விதிக்கப்பட்ட பணிநீக்க நிதி (Cassa integrazione) 9லிருந்து 12 வாரங்களாக உயர்கிறது.
  • சுயதொழில் செய்பவர்களுக்கும் வீட்டு வேலை செய்பவர்களுக்கும் அவசரகால வருமானம் நிறுவப்பட்டுள்ளது. மாதாந்திர கொடுப்பனவு 400 யூரோக்கள் முதல் அதிகபட்சம் 800 யூரோக்கள் வரை இருக்கும். மேலும், Naspi மற்றும் reddito di cittadinanza போன்ற சமூக பொருளாதார சலுகைகள் இன்னும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.

உங்கள் கவனத்திற்கு