உலகம் – வரலாறு – விடுதலை: ஒரு பையில் இறையாண்மை

உலகம் – வரலாறு – விடுதலை

நாம் ஈழத் தமிழர்களாய் விடுதலை போராட்டத்தை சார்ந்து நன்று அறிவோம். 
ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ காலத்தைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாத ஆதிக்கம் வரை நாம் தொடர்ச்சியாக எங்கள் விடுதலைக்காய் போராடி வருகிறோம். குறிப்பாக கடந்த தசாப்தம் வரை எங்கள் தேசியத் தலைவரின் வழிகாட்டியில் போராளிகளின் அர்பணிப்புக்கள், இயக்கத்தின் சாதனைகள் மற்றும் எங்கள் மாவீரர்களின் தியாகங்களும் இன்னும் கண்ணுக்கு முன் நிற்கின்றன. 
1983ம் ஆண்டில் நடைபெற்ற கருப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்ந்து உலகமெங்கும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புலம்பெயர்ந்த சமூகம் உருவாகியது. இவ்வாறான கட்டாய இடப்பெயர்வால் தமிழர்கள் வெவ்வெறு நாடுகள், மொழிகள், கலாச்சாரங்கள் என்று பல்வேறான சமூக விழுமியங்களை சந்தித்தார்கள், அறிந்தார்கள்.

இன்று இவ் உலகமயமாக்கல் வெவ்வேறு சூழலில் வாழ்கிற மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புக்களை உருவாக்குகிறது. உன்னிப்பாக பார்த்தோம் என்றால் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைகளும் அவதானிக்க முடியும். 

“இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி, தான்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவதுதான் சுதந்திரம்” என்று தமிழீழத் தேசிய தலைவர் கூறியுள்ளார். 
மானிட வரலாற்றை பார்த்தோம் என்றால் எப்பொழுதும் விடுதலைக்காகவும் அநீதிகளுக்காகவும் போராடும் மக்கள் இருப்பார்கள். சில மக்கள் வெற்றிகளைக் கண்டு இருப்பார்கள், சிலர் வரலாற்றில் அழிந்து போய் இருப்பார்கள், சிலர் எம்மைப் போல் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் அடித்தளத்திலும் மக்களின் கடின உழைப்பும் குருதியும் உள்ளது. இதில் சிலர் தியாகங்களால் மற்றும் விடுதலைப் பற்றால் பிரகாசிக்கும் மனிதர்களாய் வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறார்கள். 

இவ்வாறான மனிதர்களைப் பற்றி அறிவதற்கான சந்தர்ப்பமாக இந்த தலைப்பில் வரும் கட்டுரைகள் அமையும்.  இந்த “உலகம் – வரலாறு – விடுதலை” பயணத்தில் எங்களுடன் சேர்ந்து வாருங்கள்.

25 ஏப்ரல் இத்தாலியின் “விடுதலை” நாள்.  1945ம் ஆண்டில் நாசிப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தும் 23 வருட Mussoliniயின் சர்வாதிகாரத்தில் இருந்தும் இத்தாலி மக்கள் விடுதலையைப் பெற்றெடுத்த நாளாக கொண்டாடப் படுகிறது. 
இவ் விடுதலை இத்தாலியின் எதிர்ப்பு இயக்கங்களின் உழைப்பின்றி கிடைத்து இருக்க முடியாது. இந்த தியாகங்களுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான  மனிதர்களின் உழைப்பும் குருதியும் இருக்கிறது. 
இவர்களில் ஒரு முகம் தான் “Valdossola” எதிர்ப்பு இயக்கப்  படையணியைச் சேர்ந்த பெண் போராளி Cleonice Tomassetti அவர்கள்.

Cleonice Tommasetti

யார் இவர்?

ஆறு சகோதரர்களில் கடைசிப் பிள்ளை, Cleonice  நவம்பர் 4 1911 அன்று Capradossa வின் Petrella Salto எனும் குக்கிராமத்தில் பிறந்தார். அவரின் பெயர் “வெற்றியில் மகிமை ” என்று பொருள்.
விவசாய குடும்பம், ஒரு சிறிய பண்ணைவீடு இவைதான் அவரது பின்புலம். அவர் மிகவும் புத்திசாலியான திடமான பெண், ஆனால் வீட்டிலும் வயல்களிலும் வேலை செய்ய அவர் பள்ளியை பாதியிலே விட்டு வெளியேறினார்.

16 வயதில் தனது தந்தையரால் கர்ப்பமாகி குழந்தையை இழந்தார். Cleonice தந்தையின் வன்முறையிலிருந்து தப்பித்து, தனது சகோதரியிடம் Rome இல் தஞ்சம் அடைகிறார். அங்கு ஒரு உணவக பணியாளராக வேலை செய்து வந்தார்.

22 வயதில் Rome ஐ விட்டு வெளியேறி Milano வைச் சென்றடைந்தார். அங்கு பல வேலைகள் செய்து வந்தார். Milano வில் தான் அவரது வாழ்க்கைப் பயணம் வழிமாறியது.

அங்கு அவரைப் போலவே பாசிச நாசிச வாதிகளுக்கு எதிரான ஒரே கருத்துக்களை கொண்ட பல நண்பர்களை சந்திக்கிறார். அவர்களுடன் சேர்ந்து எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுக்க இயக்கப் பயிற்சிக்கு Val d’Ossola மலைப் பகுதிகளுக்கு கால்நடையாக புறப்பட்டார். செல்லும் வழியில், நாசிச படைகளின் சுற்றிவளைப்புக்களில் சிக்குப்பட்டார். பின்பு கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கும், போலி தூக்கிலிடல்களுக்கும் உட்படுத்தப்பட்டு, பல இடங்களுக்கு மாற்றப்பட்டார். இறுதியில் Villa Caramora வில் ஒரு ரகசிய அறையில் பிற போராளிகளுடன் சேர்த்து அடைக்கப்பட்டார். 

ஜூன் 20 1944 அதிகாலை, ஏரி நகரங்களின் தெருக்களில் Fondotoce நோக்கி அணிவகுத்து வந்த நாற்பத்தாறு Partigianiகளின் ஊர்வலத்தில், Cloenice முன் வரிசையில் இருந்தார்.
“இவர்கள் இத்தாலியின் விடுதலையாளர்களா அல்லது பயங்கரவாதிகளா?” என்ற ஒரு பதாகையுடன் இவர்களை ஊர்வலம் செய்ய வைத்தார்கள். 

அந்த 46 போராளிகளில் ஒரே ஒரு பெண் இவரே ஆவார். நேரடி சாட்சிகளின் கூற்றுப்படி  அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதியை முதன்முதலில் புரிந்துகொண்டதும்,  “ஜேர்மனியர்களின் அடிமைகளாக இருப்பதைவிட இத்தாலியர்களாக இறப்பது நல்லது என்பதைக் காண்பிப்போம்” என்பதே இறுதிவரை அவரது தூண்டுதலாக இருந்தது. 

படுகொலை நடந்த நேரத்தில், Cloenice, அவரது பல தோழர்களைப் போலவே, “Viva l’Italia” “வாழ்க இத்தாலி” என்று கூச்சலிட்டு இறந்தார். 

ஒரு பையில் இறையாண்மை

வீட்டிலுள்ள வன்முறைகளை எதிர்த்தும், சமுதாயத்தில் இருக்கும் ஆணாதிக்கத்தை எதிர்கொண்டு தன் நாட்டுக்காக போராட வெளிக்கிட்டவர் Cleonice. ஆண்களை விட பெண்களை குறைவாக மதிப்பிட்டுப் பார்க்கும் சமுதாயத்தில், எதிர்ப்பு படைகளில் சேர்வதற்கு இவர் பல தடைகளை எதிர்கொண்டார். இவரின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்  ஊடாக மட்டுமே முடிந்தது.

பிடிபட்ட காலத்தில், பெண் என்ற காரணத்தால் பாலியல் வன்முறைகள் சித்திரவதைகளை இவர் மீது நாசி படைகளும் பாசிச படைகளும் தொடர்ச்சியாக நடத்தியுள்ளார்கள். ஆனாலும் அந்நேரத்திலும், தன் தளராத தேசப்பற்றுடன் சக போராளிகளுக்கு மன உறுதியை உண்டாக்கினார். பெண் வீரத்தின் எடுத்துக்காட்டாக அமைகிறார்.

43 போராளிகளின் ஊர்வலத்தை நாசி படைகள் புகைப்படம் எடுத்தார்கள். Cleonice விற்கு ஒரு துணிபையை கொடுத்து முன் வரிசையில் நிறுத்தினார்கள். ஒரு பெண் ஒரு போராளியாக முடியாது என்று சுட்டிக்காட்டுவதற்கு விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தும் கைகளில் ஒரு துணி பையை வைத்தார்கள் நாசி படைகள். 

எடுக்கப்பட்ட 3 புகைப்படங்களிலும் தலை நிமிர்ந்து Cleonice அந்த துணி பையை இறுக்கமாக பிடிக்கிறார். அவரை இழிவு படுத்துவதற்கு கொடுத்த அந்த துணி பை, அவர் இறுக்கமாக ஏந்திய இத்தாலியின் இறையாண்மையின் குறியீடாக மாறியுள்ளது. 

அவரை  தாழ்த்த முயற்சித்த நாசி மற்றும் பாசிச படைகளை அவரின்  மன உறுதியுடன் அவர் தோற்கடித்தார்.

Cleonice மற்றும் அவரின் சக போராளிகளின் தியாகம் இந்த புகைப்படங்களில் மட்டும் இல்லாமல் இத்தாலியின் விடுதலையில் பதிந்து இருக்கிறது.