Cervi சகோதரர்களும் விடுதலையும் – தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி

25 ஏப்ரல் இத்தாலி நாட்டின் விடுதலை நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஒரு மக்களின் போராட்ட தியாகங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற சுதந்திரம் என்பதே உண்மை.

1921 ஆம் ஆண்டில் இருந்து 1943 ஆண்டு வரை இத்தாலி பாசிச சர்வாதிகாரி Mussolini யின் ஆட்சிப் பிடியில் இருந்தது. மனித உரிமைகளை மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் கட்டமைப்பைக் கொண்டது பாசிசம். இந்த அடக்குமுறையை எதிர்த்து இத்தாலியில் பல எதிர்ப்புப் படைகள் தோன்றின.

Partigiani என அழைக்கப்பட்ட சாதாரண மக்களின் எதிர்ப்பு படைகள் Mussolini அரசுக்கு எதிராக போராடின. விடுதலைப் போராட்டத்தில் இணைந்துள்ள மக்கள் மத்தியில் Cervi சகோதரர்கள் இத்தாலி வரலாற்றிலும் இத்தாலி மக்களின் மனதிலும் ஒரு முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறார்கள்.

“Fratelli Cervi” (Cervi சாகோதரர்கள்) என அழைக்கப்படுகின்ற 7 சகோதரர்கள் Reggio Emilia வில் Campegine என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாய பின்புலத்தைக் கொண்டவர்கள். இவர்களது பெற்றோர்கள் ஆரம்பகாலத்திலிருந்தே குடும்ப பொருளாதார மற்றும் பண்பாடுகளின் வளர்ச்சியை மேம்படுத்த முயச்சித்தனர். அதிலும் நவீன விவசாய நுட்பங்களை அறிந்து கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர்.

அவர்களின் பண்ணைவீடு பாசிசத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களுக்கான சந்திப்பு இடமாகவும், பின்னர் ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கும், நாசிச படைகளிலிருந்து தப்பிக்கும் சோவிய மக்களுக்கு அடைக்கலமாகவும் மாறியது.

26 ஜூலை 1943 அன்று இத்தாலி மன்னர் Mussolini யை ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்காக Cervi குடும்பம் அயலவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டாடினர். 1943 ஆம் ஆண்டில் இருந்து 1945 ஆண்டு வரை பாசிச படைகள் மற்றும் அவர்களுடன் இணைந்த அந்நிய நாசி படைகளையும் எதிர்த்து கெரில்லா வடிவத்தில் இத்தாலி விடுதலை இயக்கங்கள் போராடினார்கள்.

Cervi சாகோதரங்களும் இத்தாலி விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடவேண்டும் என முடிவு எடுத்து சில நண்பர்களுடன் Reggio Emilia மலைப் பகுதிகளில் GAP (Gruppi d’Azione Patriottica) எனப்படும் “தேசப்பற்றுள்ள செயல் குழுக்கள்” என்று ஆயுத இயக்கத்தை உருவாக்கினார்கள்.
இதன் மூலம் நாசிச மற்றும் பாசிச படைகளிலிருந்து இத்தாலியின் விடுதலைக்காக கெரில்லா தாக்குதல்கள் மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டங்கள் தீட்டப்பட்டன. இவ் விடுதலை போராட்டங்களில் பெண்களும் அதிகளவு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

25 நவம்பர் 1943 Cervi சகோதரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பாசிச படைகளால் சுற்றிவளைக்கப்பட்டனர். பின்னர் 7 சகோதரர்களும் அவர்களின் சக போராளிகளுடன் கைது செய்யப்பட்டு Reggio Emilia வில் இருந்த Servi அரசியல் சிறையில் அடைக்கப்பட்டனர். 28 டிசம்பர் அன்று பாசிச அதிகாரி மீது கொலை முயற்சி மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு 7 சகோதரர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 சாகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியை அறிந்து இத்தாலி முழுவதும் அதிர்ச்சியில் உள்ளாகியது. இவர்களின் தியாகம் பாசிச படைகளின் வெறித்தனத்துக்கு எதிராக போராட வேண்டும் என மக்கள் மத்தியில் இருந்த உணர்வுக்கு மேலும் வலுச் சேர்த்தது.

இத்தாலி விடுதலை பெற்ற பின்பு 7 சகோதர்களுக்கு இராணுவ மரியாதைகள் வழங்கப் பட்டு பல நகர வீதிகள் இவர்களின் பெயரில் திறக்கப்பட்டன மற்றும் இவர்களின் கதையை பள்ளிகளில் பாடங்களாக கற்பிக்கப்பட்டுள்ளது.

7 சகோதர்களின் தந்தை Alcide Cervi, விடுதலை போராளிகளுக்கு தங்குமிடமாக இருந்த Gattaticoவில் உள்ள பண்ணை வீட்டை தன் மக்களின் கதையை சொல்வதற்காக ஒரு அருங்காட்சியகமாக மாற்றி அமைத்துள்ளார். அவர்கள் வாழ்ந்து வந்த அதே பண்ணைவீடுதான் இப்போது ஓர் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டு “Casa Cervi” (Cervi இல்லம்) என்று அழைக்கப்பட்டுகிறது. இத்தாலியின் விடுதலை நாளன்று ஆண்டுதோறும் முன்னாள் எதிர்ப்பு இயக்கப் போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் பல ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி கொண்டாடிவருகின்றனர்.

2012ஆம் ஆண்டிலிருந்து இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பான நாங்கள் “Casa Cervi” கொண்டாட்டத்தில் பங்கேற்று வருகிறோம். ஆண்டுதோறும் 25 ஏப்ரல் அன்று நடைபெறும் நிகழ்வை ஒருங்கிணைப்பதற்கும், செயற்படுத்துவதற்கும் 2012 ஆம் ஆண்டில் இருந்து இளையோர் அமைப்பு இணைந்து பணியாற்றி வருகிறோம்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டை வெளிகொண்டு வருவதற்கும் தமிழீழ மக்கள் மீது நடாத்தப் பட்டுக்கொண்டு இருக்கும் இனப்படுகொலை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ் இளையோர்களால் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், 2012 ஆம் ஆண்டு Casa Cervi யில் நடைபெற்ற சுதந்திர நிகழ்வில் அவர்கள் எங்கள் தமிழீழத் தேசிய கொடியினை பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியிலும் அங்கீகரித்து பெற்றுக்கொண்டதோடு எங்கள் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும் புரிந்துள்ளனர்.

கொரோனா வைரசால் உருவாகி இருக்கும் அவசரகாலத்தால் இந்த வருடம் இந்த நிகழ்வு நடைபெறவில்லை. ஆனாலும் Partigiani களின் விடுதலை மீட்பு போராட்டம் மற்றும் தியாகமும் காலத்தால் அழியாதவை. இவர்களின் நினைவுகள் மற்றும் இலட்சியங்கள் இத்தாலி மக்கள் வரலாற்றில் பதிவு செய்தது போல் தமிழீழ தேசத்தின் உரிமைக்காக போராடிய மாவீரர்களின் தியாகங்களும் எமது மக்கள் அனுபவித்த வலிகளும் மனதிலிருந்து நீங்காதவையாக இருக்கவேண்டும் .

ஒரே விடுதலை உணர்வோடு இத்தாலி மக்களுடன் இணைந்து நாங்களும் இன்று இத்தாலி விடுதலை நாளை கொண்டாட வேண்டும். எதிர்காலத்தில் நிச்சியமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணிசெய்வதன் ஊடாக ஒரு நாள் தமிழீழ சுதந்திர நாளையும் கொண்டாட முடியும் என்று உறுதியுடன் இருப்போம்.

உங்கள் கவனத்திற்கு