ஒவ்வொரு எண்ணுக்கும் பின்னால் ஒரு மனிதனின் கதை இருக்கும்

கடந்த நாட்களில் இத்தாலியில் 25,000 நபர்களுக்கு மேல் கொரோனா வைரசின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்கள்.

நாம் அனைவரும் இந்தத் தொற்றுநோய் பரவிய காலத்தில் இருந்து சிவில் பாதுகாப்பு துறை வெளியிடுகின்ற எண்ணிக்கையை சரியாக 18:00 மணிக்கு ஆர்வத்துடன் காத்து இருப்போம். தொற்றுதலுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை, குணமாகியவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்று ஒரு கணித கண்ணோட்டத்தில் இந்த பரவுதலை கண்காணித்து வருகிறோம். நேற்றில் இருந்து எண்ணிக்கை எவ்வளவு கூடியிருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்பதை அவதானிப்போம்.
நாள்தோறும் பார்க்கும் போது எண்ணிக்கைகள் மற்றும் எண்கள் கண்களுக்குத் தெரிகிறது.
ஆனால் ஒவ்வொரு எண்ணுக்குப் பின்னால் ஒரு மனிதனின் வாழ்க்கை இருப்பதை மறந்து விடக் கூடாது.
COVID-19 நோயால் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 0 ஆகும் வரை, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை அழிந்து போகிறது. அந்த நபரின் உற்றார் உறவினர் வாழ்க்கை முழுமையாக மாற்றப் படுகிறது. ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு கதை இருக்கிறது.

146,479 எண்ணை பாடமாக்கிய ஒரு இனத்திற்கு ஒவ்வொரு எண்ணுக்குப் பின்னால் இருக்கும் கதைகள், வேதனைகள், துயரங்கள் நன்று அறிந்தது. 30,000 உயிர்களுக்காகப் போராடிய ஒரு இனத்திற்கு ஒவ்வொரு உயிரின் அர்த்தமும் பெறுமதியும் நன்று அறிந்தது.

கொரோனாவைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக்கு பின்னால் இருக்கும் மனிதர்களை நினைவு கூறும் முகமாக “Gruppo Gedi” பத்திரிகைச் சங்கம் ஒரு இணையத்தளத்தை உருவாக்கியுள்ளது.

“நினைவுகள்” என்ற பெயரில் (Memorie.it) இவ் இணையத்தளம் ஒவ்வொரு நபரின் படங்களையும் அவர் உறவினர்களின் இரங்கல் செய்திகளையும் பதிவு செய்கிறது. உயிரிழந்த 700 நபர்களின் தரவுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் இனி உறவினர் இழந்த குடும்பங்களுக்கும் பதிவுகள் ஏற்றும் அனுமதியை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு எண்ணுக்கும் பின்னால் ஒரு மனிதனின் கதை இருக்கும் என்று நினைவில் வைத்துக்கொள்ளுவோம்.

உங்கள் கவனத்திற்கு