எதார்த்தத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வளவு வேறுபாடுகள் உண்டா?

முன்னுரை

பாலின வேறுபாடு என்பது சமூகத்தில் தொடர்ந்து காணப்படக்கூடிய ஒரு விடயமாகும், இப் பாகுபாடானது ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என நம்பும், ஆண் ஆதிக்கம் போன்ற சித்தாந்தங்களால் வலுப்படுத்தி வருகிறது.
மேற்கத்திய நாடுகள் பாலின சமத்துவத்தை நோக்கி பல நடவடிக்கைகள் எடுத்த நிலையிலும், பாலின சமத்துவம் என்பது இன்னும் ஒரு தொலைதூர இலக்காக உள்ளது.
பாலினப் பாகுபாடுகள் பெண்களை தற்போது பொதுவான முறையில் பாதிக்காமல் இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாய்ப்புக்கள் குறைந்து காணப்படும் ஒரு சூழ்நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, பள்ளிச் சூழலில், ஆண் வர்க்கத்தைச் சேர்ந்த பொறியியல் போன்ற கல்வித் துறையை தேர்ந்தெடுப்பதற்கு அல்லது வேலைச் சூழலில் மதிப்புமிக்க பதவியை அடைவதற்கு வாய்ப்புகள் குறைந்தளவிலேயே இருக்கின்றன.
ஆனால் எதார்த்தத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வளவு வேறுபாடுகள் உண்டா?

வேறுபாட்டை விட ஒற்றுமையே அதிகம்

சமூகம் ஆண்களையும் பெண்களையும் மிகவும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது, இவ்வகையில் குழந்ததைப் பருவத்திலிருந்தே ஆண்களுக்கு வலிமையையும், துணிச்சலையும் மற்றும் சுயாதீனமாக வாழ கற்றுக்கொடுக்கும் நாங்கள், பெண்களை அடக்கமாகவும், கனிவாகவும், மற்றும் பரிவுள்ளவராகவும் வளர்க்கிறோம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஆணும் பெண்ணும் உடல் வலிமையாலும் மற்றும் உடலியல் பண்புகளால் மட்டுமே வேறுபட்டவர்கள் எனவும், மற்றும்படி ஆணுக்கு பெண் நிகர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆதலால், பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே காணப்படும் சமத்துவமின்மை, சமூக கட்டமைப்பில் வேர் உண்டிய தவறான கருத்துக்களின் சித்தரிப்பு மட்டுமே தவிர, அவை எதார்த்தமானவை அல்ல. உதாரணமாக, பொதுவாக நம்பப்படுவதற்க்கு மாறாக, பெண்கள் ஆண்களை விட உணர்வுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவர்கள் என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன; காரணம், தாங்கள் சுயாதீனமாகவும் வீரியமாகவும் தோன்ற வேண்டும் எனும் கொள்கையுடன் இருப்பதால், அவர்கள் பிறர் உதவியை நாடாமல், தங்களை உளவியல் ரீதியாக ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளுவார்கள். சமூகத்தில் பரவலாக காணப்படக்கூடிய மற்றோரு தவறான கருத்து, பெண்கள் தலைமை இடங்களில் இருப்பதற்கு பொருத்தம் அற்றவர்கள் என்பதாகும். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களிடம் இருக்கும் சூழல்களில், பாகுபாடின்றி ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த சூழல் நிறுவப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், இச் சூழலில் ஒன்றாக வேலை செய்வதும் ஒத்துழைப்பதும் எளிதானது என்றும் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

பெண்கள் எதிர்க்கொள்ளும் விளைவுகள்

இந்தப் பாலின வேறுபாடு சார்ந்த கருத்துக்கள் சில தவறான நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் உருவாக்கி, பெண்களின் எதிர்காலத்தை மறைமுகமாக பாதிக்கின்றன. உதாரணமாக ஆண்களுக்காக கருதப்படும் பள்ளிப் பாடங்களில் பெண்கள் சிறந்து விளங்க முடியாது என அவர்களாகவே நம்புவார்கள், அல்லது பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்கள் என உணருவார்கள். பொதுவாக, அவர்களது சுயமரியாதை குறைவதை அனுபவிக்கிறார்கள், இதன் விளைவாக அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட திறன்களை குறைத்து மதிப்பிடுவார்கள். சில சந்தர்ப்பங்களில், பெண்களே இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பேணுவதற்கு பங்களிக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, பெண்கள் வெற்றியைத் தழுவியதும் மற்றப் பெண்களை, வாய்ப்புகள் இருந்தபோதிலும், அங்கீகரிக்க தவறிவிட்டு, தாங்கள் மட்டுமே முக்கியப் பதவிகளை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என நினைத்து அவர்களிடமிருந்து விலகி விடுவார்கள்.
இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்க்கு பெண்கள் தங்களை அதிகமாக மதிக்க வேண்டும், ஆண்களுக்கு நிகரான திறன்கள் வாய்ந்தவர்கள் என நம்பவேண்டும், முக்கிய இடங்களை அடைந்ததும் மற்ற பெண்களிடம் பாகுபாடு காட்டாது அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தனிப்பட்ட அனுபவங்கள்

இவ் விடயத்தை நன்கு புரிந்து கொள்வதற்கு தமிழ் பெண்களாக வளர்வதின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு சில தமிழ் பெண்களிடம் கேட்டோம். தங்களைப் பாதுகாக்க வேண்டிய பெற்றோர்களே ஒவ்வொரு கட்டுப்பாடுகள் மூலம் பயமூட்டி வருவதைக் கண்டு இவர்கள் ஆச்சரியப்படுகின்றார்கள். பெற்றோர்கள் எச்சரிப்பது போல்
அவர்கள் கவனமாக இருந்தாலும், எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பதை பெரியவர்கள் உணர வேண்டும். ஆனால் வாழ்வில் ஒரு முறை மட்டும் அனுபவிப்பது இளம் பருவம் தான், அதாவது கவலையற்ற மற்றும் சந்தோசம் மிகுந்த ஒரு காலப்பகுதியாக விளங்க வேண்டியது சில இளம் பெண்களுக்கு சோகமானதாக அமைகின்றது. ஒரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்க முடியாத சோகம், பாடசாலைச் சுற்றுலாக்களில் கலந்துக் கொள்ள முடியாத சோகம், இனில் வாழ்வில் திரும்பி வராத தருணங்களை இழந்ததற்கான சோகம். இவை அனைத்தும் பெண்ணாகப் பிறந்ததால் இடம்பெறுகின்றது. இவ்வாறான விடயங்களால் ஆண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் சிறப்புரிமைகள் மீது பொறாமைப்பட்டு, பெண் பிள்ளைகள் தங்களை அறியாமலேயே தாழ்ந்த மனப்பான்மைக்கு உள்ளாகி, அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியும் தடுக்கப்பட்டு வருகின்றது. ஏனையவர்களால் கவனிக்கப்படக்கூடாது என்ற ஒரு சிந்தனை இருப்பதும் இதன் காரணமாகும். இவர்களின் நடத்தையில் சரி, எப்பவும் ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று கேட்கப்படுவதால், அணியும் ஆடைகளிலும் சரி, அவர்களைப் பிரதிபலிக்கும் மற்றும் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடிய ஆடைகளை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியாமல், அரைக்கை சட்டைகளைக்கூட அணிவதற்கு அனுமதிக்காத பாரம்பரிய நியதிகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதாலும் இது நிகழ்கிறது.

பெண்களை மிகவும் எரிச்சலூட்டும் விடயம் என்னவென்றால் பெரும்பாலான கட்டுப்பாடுகள் ஏனையவர்கள் தங்கள் மகள்களைப் பற்றி என்ன சிந்திப்பார்கள் என்ற பெற்றோர்களின் பயத்திலிருந்தே உருவாகின்றன, ஆகையால், தங்கள் மகிழ்ச்சியை விட பொதுக் கருத்து முக்கியமானது என்ற சிந்தனை பெண்களுக்குள் ஏற்படுகிறது.
பெண்கள் தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டதன் காரணம்
அவர்களின் பெற்றோரை குறைச் சொல்வதற்கு அல்ல, ஆனால் சமூகத்தில் தங்கள் பங்கு மாறிவிட்டது என்பதை அவர்களுக்கு உணர வைக்க வேண்டும் என்பதற்காகவே. ஆகையால், சாதாரண இல்லத்தரசிகளாக மட்டுமல்லாமல் ஒரு இலக்கை குறிவைத்து அதை அடைவதற்கு அவர்களின் பெற்றோர்களின் ஆதரவும் முக்கியமானது.
பெண் பிள்ளைகளை சுயாதீனமாக வளர்த்து சிறு வயதிலிருந்தே ஆதரிக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே அவர்கள் பெரியவர்களாக மாறியதும் அவர்களின் இலக்குகளை நிறைவேற்ற தேவையான தன்னம்பிக்கையை ஊட்ட முடியும்.

தமிழீழத்தில் பெண்கள்

எமது குழந்தைகளை, பாலின வேறுபாடுகள் இன்றி வளர்ப்பதற்கு, முக்கியமாக பெண் குழந்தைகளை துணிச்சல் உள்ளவர்களாக வளர்ப்பதற்கு ஒரு பெரும் உதாரணமாக விளங்குகின்றவர் தமிழீழத்தில் வாழும் எமது தமிழ் பெண்களே.
தமிழ் பெண்ணானவள், பிறந்ததிலிருந்தே, தனது பாதுகாப்பிற்காகவும், விடுதலைக்காகவும், தனது உரிமைகளுக்காகவும் போராடி வருகின்றாள்.

சிறு வயதிலிருந்தே, வன்முறையையும் அவமதிப்பையும் தொடுக்கும் வீட்டு ஆணாதிக்கம் சிந்தனை கொண்ட குடும்பங்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பெண் போராடுகின்றாள்.

பெரியவளானதும், சமூகத்தில், பள்ளிச் சூழலிலோ சரி வேலைச் சூழலிலோ சரி, தனது சுயமரியாதையை நிலை நிறுத்துவதற்கு ஆண்களுடன் போராடுகின்றாள்.

திருமணமாகியதும் அவளின் புகுந்த வீட்டில், சீதனக் கொடுமைகளிலிருந்து வெளியாகி அங்கீகாரம் பெறுவதற்குப் போராடுகின்றாள்.

பெண்ணாகப் பிறந்தவள் வீட்டு வேலைகளைப் பார்ப்பதற்கும், ஆணின் சொல்லுக்கு அடங்கியவளாகவும், குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்கு மட்டுமே ஏற்றவள் என்ற தவறான சிந்தனைகளைக் கொண்டுள்ள சமுதாய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி வருவது ஒரு பக்கம் இருக்க, சிங்கள இனவாத அரசினால் தமிழ்ப் பெண்கள் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் போராடும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டாள்.

பாடசாலை, பல்கலைக்கழகம், வேலையிடம், தோழிகளின் வீடு ஏன் சொந்த வீட்டில் கூட நிம்மதியாக வாழ முடியாத ஒரு ஆபத்தான, பயங்கரமான சூழ்நிலையை தமிழ்ப் பெண் எதிர்கொண்டாள். தனது குடுமபத்திற்கு முன்னிலையிலேயே சிங்கள வெறியர்களால் தமிழ்ப் பெண்கள் காட்டுமிராண்டித் தனமாக பாலியல் வன்முறையுடன் தாக்கப்பட்ட சம்பவங்களும் பல்லாயிரக்கணக்கானவை.

இவ்வாறான சமூதாய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சிங்களப் பேரினவாத அரசின் இலக்காக அமையும் தமிழ் பெண்ணினம் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களுக்கு எதிராகவும் தைரியமாக குரல் கொடுத்தப் பெண்களை நினைவுக் கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம். ஆண்களை விட எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை தமிழ் பெண்கள் நிரூபிக்க ஆரம்பித்தார்கள்.

அமைதிவழிப் போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரப் போராட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் ஆண்களுக்கு சரிநிகர் நின்று பெண்களும் போராட ஆரம்பித்தார்கள். இந்த வகையில், பல பெண்களுக்கு பெரும் ஆதரவு அளித்து அவர்களுக்காக குரல் கொடுத்தவர் அன்னை பூபதி. தமிழ் மக்கள் சந்தித்து வந்த அநீதிகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை துணிச்சலாக மேற்கொண்டு உயிர்நீத்தார்.

இதே துணிச்சலுடன், தமிழ் மக்கள், தமிழ் பெண்களின் விடுதலைக்காக தோற்றம் பெற்றவர்கள் தான் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள். தமிழ்ப் பெண்களின் வளர்ச்சிப் பற்றிய ஒரு பிற்போக்கான சிந்தனையைக் கொண்டிருந்த பெருமளவு மக்கள் மத்தியில் கூட எமது பெண் போராளிகள் சாதனைப் பெண்களாகத் திகழ்ந்தனர். ஆண்களுக்குச் சமமாகப் போராடிய அவர்களின் வேகம், துணிச்சல், தன்னம்பிக்கை எமது வளர்ச்சிக்கு ஒரு பெரும் உந்துதலாகவும் எடுத்துக்காட்டாகவும் அமைய வேண்டும்.

தமிழீழ சட்டக் கோவையில் மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்க்கையில் பாலின சமத்துவத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நிலைநாட்டினார்கள். இது உலகம் அறிந்த உண்மை.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்பும் இன்று வரை சிங்கள அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய், சகோதரி, மனைவி ஆகியவற்றின் தொடர்ச்சியான தேடுதல் போராட்டங்களையும் நாங்கள் அவதானிக்க வேண்டும். தங்கள் சொந்தங்களைக் காணாமல் தவிக்கும் இப் பெண்களின் துயரம் அளப்பெரியது. ஆனால் இந்த துயரத்தால் மனம் தளர்ந்து போகாமல், இன்று வரை தமிழீழத்தில் தங்கள் உறவினர்களைத் தேடும் முயற்சியில் பெண்கள் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான பெண்களின் சாதனைகள் எமக்கு உதாரணமாக இருக்கும் போது தமிழர்களாகப் பிறந்த நாம் பாலின வேறுபாடுகளை மேற்கொள்ளும் தவறில் விழுந்து விடக்கூடாது. தமிழீழத்தின் சாதனைப் பெண்களின் தடங்களைப் பின்பற்றி, ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்ற உறுதியான உணர்வுடன் எமது பிள்ளைகளை வளர்க்க முயற்சி செய்வோம்.

சுயாதீனமாக இருப்பது, முடிவுரை

குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் குறிக்கோள் அவர்களை சுயாதீனத்தீற்கு அழைத்துச் செல்வதாக அமைகின்றது, அதாவது பெரியவர்களானதும் தங்களைச் சுயாதீனமாக பார்த்துக் கொள்வதாகும்.
ஆனால், பெரும்பாலானவர்கள், ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் அவர்களுக்கு, பெண்களுக்கான வேலைகளாகக் கருதப்படும் சமையல், சலவை செய்தல், சுத்தம் செய்தல் போன்றவற்றை கற்பிப்பதைத் தவிர்க்கிறார்கள். அதே போல் ஆண்களுக்கான வேலைகள் என கருதப்படும் மின்சாரம் மற்றும் இயந்திர வேலைகள் போன்றவற்றில் பெண்களை ஈடுபட வைப்பதில்லை.
ஆனால், இவ் வேலைகள் சுயாதீனமானவர்கள் என கருதப்படுவதற்கு மிகவும் முக்கியமானவை, ஏனெனில் பிள்ளைகள் படிப்பு அல்லது வேலை காரணங்களுக்காக குடும்பங்களைப் பிரிந்து வேறு இடங்களுக்கு நகர்ந்து
சுயாதீனமாக வாழ்வதும் இன்றைய சமுதாயத்தில் இயல்பாக இருக்கின்றது.
ஆண்களும் பெண்களும் வேறுபட்டவர்கள் அல்ல, இருவரும் ஒரே திறன்களைக் கொண்டவர்கள், சமமான முறையில் அவர்கள் நடத்தப்படுவதற்கு தகுதியானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியிருக்கும் என்று நம்புகின்றோம்.

இக் காலகட்டத்தைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளுக்கு, அவசியமற்ற பாலின வேறுபாடுகள் இன்றி, எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய தெரியாத வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.
மேலதிகத் தகவல்கள், தெளிவுப்படுத்தல்கள் அல்லது உங்களுக்கு ஒருவருடன் கதைக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால், எங்களைத் தொடர்பு கொள்ள தயங்காதீர்கள்!

உங்கள் கவனத்திற்கு