இத்தாலி ரெச்சியோ எமிலியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2024.

தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பு நினைவு நாளான மே18 நினைவு நாள் இன்று ரெச்சியோ எமிலியாவில் இடம்பெற்றது.

2024ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இன்றுடன் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்று 15 வருடங்கள் நிறைவடைகின்றது.

காலம் காலமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்குள் ஈழத்தமிழினம் சிக்குண்டு பல்வேறு வடிவங்களில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இத்தகைய தமிழ் இன அழிப்பின் உச்சம்தொட்டு 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேசம் பார்த்திருக்க முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு செய்யப்பட்ட வலிநிறைந்த நினைவு நாளே இன்றாகும்.

இந்த வலிமிகுந்த நாளில் இத்தாலிய தேசிய கொடி,தமிழீழத் தேசிய கொடியேற்றலுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுடர் வணக்கம், மலர்வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி இத்தாலிய மக்களுக்கும்,பல்லினமக்களுக்கும் இளையோர்களால் தமிழ் இன அழிப்பு தொடர்பான நிழல்பட விளக்கமும்,துண்டுப்பிரசுரமும் வழங்கி விளக்கப்பட்டது.

அத்தோடு முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் இறுதியாக அருந்திய கஞ்சியும் வழங்கப்பட்டது.பின்னர்அனைத்துலகத் தமிழர் கலைப்பண்பாட்டு கழகத்தால் நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பு மே18 தொடர்பான போட்டியில் வென்றவர்களுக்கான சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டதன் பின்பாக இத்தாலிய,தமிழீழத் தேசிய கொடிகள் இறக்கப்பட்டதன் பின்பாக எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்தெறிந்து நெஞ்சுறுதி கொண்ட வேங்கைகளாக ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் “மூச்சோடும், வீச்சோடும் விடுதலையை வென்றெடுக்கும் வரை ஒருபோதும் ஓயோம்” என்ற ஓர்மத்துடன் படுகொலை செய்யப்பட்ட எமது மக்கள்மீதும் , எமது மண்ணின் விடுதலைக்காக இறுதி கணம் வரை போராடி தம்மை ஈகம் செய்த மாவீரர்கள் மீதும் உறுதியெடுத்து நம்புங்கள் தமீழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் வணக்கநிகழ்வுகள் நிறைவடைந்தன.

உங்கள் கவனத்திற்கு