வலிகளை வழியாக்கி வாழும் தமிழீழக் கோட்பாடு

மே 18 இரண்டாயிரத்து ஒன்பது
முள்ளிவாய்க்கால் நினைவு நாள், இன்று பதினைந்து ஆண்டுகள் காலச்சக்கரத்தில் கரைந்தோடிவிட்டது.
ஈழத்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா வடுவாக மாறா ரணமாக பதிந்து கிடக்கிறது
தமிழ் இன அழிப்பு உச்சம் தொட்ட நாள் கொத்து கொத்தாக, பிஞ்சு குழந்தை முதல் முதியவர் பெண்கள் என சிறீலங்கா அரசு ஓர் மனித வதையை நடாத்தி முடிந்திருந்தது . இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய அளவிலான இனப்படுகொலையின் கறை படிந்த மனித வதையின் அடையாளமாக உலக சரித்திரத்தில் இந் நாள் பதிவு செய்யப்பட்டது . மனித குலத்தில் மனித நாகரிகம் வளர்ச்சி பெற்ற பின்னர் நடந்த அதியுச்ச கொடுமைகளை சர்வதேசமும் கண்டு கொள்ளாமல் வாழாவிருந்தது.

ஈழத் தமிழர்களை அரசியல் வெறுமைக்குள் தள்ளி தமிழ் தேசியத்தின் வீரியத்தை அழித்து தமிழீழ விடுதலைப் புலிகளை சிதைத்து தமிழீழ நிலத்தை முற்றாக ஆக்கிரமித்து ஈழத்து தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறீலங்காவுடன் இணைந்து பிராந்திய வல்லரசான இந்தியா மற்றும் உலக வல்லரசுகள் என பல நாடுகள் சேர்ந்தே நடாத்தி முடித்த மனித படுகொலை இதுவாகும்.
ஆனால் மாறாக அதுவே ஈழத்தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் வாழ்வின் மைல்கல்லாகவும் மாறி நிற்கின்றது.
இப்பதினைந்து ஆண்டுகளில் சிங்கள தேசம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவை பிளக்க பலவழிகளில் முயற்சி செய்து வந்தாலும்.குறிப்பாக முதல் ஐந்தாண்டு காலம் ஈழத்து தமிழ் இனம் செய்வதறியாது நடந்த அவலத்தை நினைத்து திகைத்து நின்று உளவியல் ரீதியாக உடைந்து போயிருந்ததாலும் தொடர்ந்து வந்த காலங்களில் தன்னை சுதாரித்துக் கொண்டு மீண்டு எழுந்து நின்றது.

ஈழத்தமிழ் மக்களின் தேசம் சிதைக்க பட்டதும் தமிழ் தேசியத்தின் முதுகில் சிறீலங்கா அரசு மட்டும் இன்றி சர்வதேசமும் சேர்ந்தே குத்தியதும் தமிழ் மக்களின் மனதில் அழியாத வடுவாக மாறி அதுவே தமிழ் தேசியத்தின் ஆன்மாவாக கட்டமைப்பாக மாறி நிற்கின்றது இதனாலேயே தம் சொந்தங்களை நினைவு கூறும் அதேவேளை தேசியத்திற்கான தேசத்தை மீட்க உறுதி பூணும் அடையாளம் ஆகவும் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் மே18 உணர்வின் உச்சம் தொட்டு நிற்கின்றது.
ஈழத்தமிழ் மக்கள் இன்று தமது அரசியல் நிலையை ,சர்வதேச நாடுகளை,முள்ளிவாய்க்காலில் நடந்தேறியதை, மீண்டும் மீண்டும் அரங்கேறும் சிறீலங்கா அரசு மற்றும் அதன் அடிவருடி கூட்டத்தின் தமிழ் தேசியத்தை குலைக்கும் முயற்சிகள் என அனைத்தையும் பிரித்து அறிந்து தெளிந்து கொள்ளும் நிலைக்கு தம் அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டு உள்ளார்கள்.

இதுவே இன்று கடந்து வந்த பதினைந்து ஆண்டுகளில் ஆண்டுகள் கடக்க கடக்க தமிழ் தேசியம் பலமடைந்து வரவும் காரணமாக அமைகின்றது.
ஏனெனில் 2009 மே 18 இன அழிப்பு என்பது வெறும் இனப்படுகொலைக்கு அப்பாற்பட்டு மிக நீண்ட நேர்த்தியான வரலாறு கொண்ட மனித நாகரிமே தோற்றம் பெற்ற மக்கள் கூட்டம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு எதிராக போரிடும் ஆற்றல் மிக்க நேர்மை நியாயம் அறம் செறிந்த விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கிலேயே நடந்தேறியது.


ஆனால் தமிழீழ தேசியத் தலைமையானது விடுதலைப் போராட்டத்தை அறவழி அல்லது ஆயுதப்போராட்டத்திற்கு அப்பாலும் தூர நோக்கு பார்வையுடன் திட்டமிட்டு சிந்தித்து இருந்தது.
இதுவே ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் இன்று மே18 என்பதும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்பதும் இன அழிப்பு அடையாளம் என்பதையும் தாண்டி தமிழரின் இருப்பின் அடையாளம் ஆகவும் தமிழர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்னும் கருத்தாக்கத்தை மட்டும் அன்றி ஈழத்தமிழ் மக்களின் பல தலைமுறைகளுக்கு தமிழ் தேசியத்தின் நேர்கோட்டில் தடம்பிறளாது தொடர்ந்து பயணிக்கும் உறுதி பாட்டையும் மக்கள் மனதில் பதித்து விட்டுள்ளது.

இறுதியாக ஈழத்தமிழ் மக்களுக்காகவும் தமிழ் தேசியம் சார்ந்தும் செயற்படும் அனைவரும் எமது தேசத்தின் தலைமை பல கட்டங்களில் குறிப்பிட்டதுபோல் இப் பூமி பந்தானது தமது சொந்த நலனுக்காக எதையும் செய்ய துணிந்தது அதன் சாட்சியமே மே 18ஆகும் .அதேவேளை நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் துணிவுடன் நேர்மையுடனும் போராடினால் எமக்கான நீதியும் உரிமையும் கிடைக்கும் என்ற உறுதி கொள்ளும் நாளே மே 18என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு