தேர்வு அறிக்கை வழங்கும் நிகழ்வு 2023-திலீபன் தமிழ்ச்சோலை
பலெர்மோ – இத்தாலி

திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் இணைந்து நடத்திய தேர்வு அறிக்கை வழங்கும் நிகழ்வு 21.05.2023 ஞாயிற்றுக்கிழமை Piazza S. Marino, Viale Francia, Palermoமண்டபத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது. இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளர் திரு.சுப்பிரமணியம் குமாரமூர்த்தி அவர்கள் சிறப்புவிருந்தினராக வருகைதந்து நிகழ்வைச் சிறப்பித்திருந்தார். தமிழீழத் தேசியக்கொடி, இத்தாலியத் தேசியக்கொடி, திலீபன் தமிழ்ச்சோலைக்கொடி ஆகியன ஏற்றப்பட்டு, பொதுச்சுடரேற்றல், தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கான மலர்மாலை அணிவித்து, ஈகச்சுடரேற்றல், மங்கல விளக்கேற்றல், அகவணக்கம் மற்றும் திலீபன் தமிழ்ச்சோலைகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, என்பன இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வரவேற்புரை, வரவேற்பு நடனம், திலீபன் தமிழ்ச்சோலை பற்றிய முகவுரை மற்றும் திலீபன் தமிழ்ச்சோலையின் கடந்தகால நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒளிப்படத் தொகுப்பு வெண்திரையில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், மாணவர்களின் நடனங்கள், கிராமிய நடனம், நாடகங்கள், குழுப்பாடல், எழுச்சி நடனங்கள், மாணவர்களின் உரைகள் என்பன நடைபெற்றன. தொடர்ந்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021, 2022ம் ஆண்டுகளுக்குரிய தேர்வு அறிக்கையும் அதிதிறன் எடுத்த மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகளிலும் ஆண்டு 12 நிறைவு செய்த இரு மாணவர்களுக்கான பட்டமளிப்பும் மிகவும் சிறப்புற நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் உரை, மற்றும் சிறப்பாளர்களாக வருகை தந்தவர்களின் உரை, பெற்றோர் உரை, நிர்வாகத்தினரின் நன்றி உரைகள் என்பவற்றுடன் இறுதியில் கொடிகள் இறக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம்” இசைக்கப்பட்டு, எமது தாரக மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு தேர்வு அறிக்கை வழங்கும் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

உங்கள் கவனத்திற்கு