வேர்களைத் தேடும் விழுதுகள் – சாவகச்சேரி

சாவகச்சேரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து A9 வீதியூடாக தென் இலங்கை (கொழும்பு) நோக்கிப் பயணிப்பவர்கள் சாவகச்சேரியைக் கடந்துதான் செல்ல வேண்டும். இலங்கை தொடருந்து வலையமைப்பில் நாவற்குழி, மீசாலை தொடருந்து நிலையங்களுக்கிடையில் சாவகச்சேரி அமைந்துள்ளது.

தென்மராட்சி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பெரும் பிரிவுகளுள் ஒன்று. ஏனையவை வடமராட்சி, வலிகாமம், தீவகம் ஆகியன. தென்மராட்சிக்கு மேற்கே வலிகாமமும், வடக்கே வடமராட்சியும், தெற்கே யாழ்ப்பாணக் கடலேரியும், கிழக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பிரிவான பச்சிலைப்பள்ளியும் உள்ளன. தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி ஆகும். சாவகச்சேரி நகரம் சாவகச்சேரி நகர சபையினால் நிர்வாகம் செய்யப்படுகிறது. மீசாலை, கைதடி, வரணி, மட்டுவில், கொடிகாமம், கச்சாய் போன்றவை தென்மராட்சியில் உள்ள ஊர்களில் சிலவாகும்.

சாவகச்சேரி நகரத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, வெளிநாடுகளின் ஒரு நகரம் போல அனைத்தையும் தன்னகத்தே குறிப்பிட்ட சுற்றளவிற்குள் அமையப்பெற்ற ஒரு நகரம் என்று சொல்ல முடியும். ஆலயங்கள், தேவாலயங்கள், பிரபல பாடசாலைகள், தொடருந்து நிலையம், பேருந்து நிலையம், மிகப் பெரிய சந்தை, கடைகள், கலாசார மண்டபம், வங்கிகள், நீதிமன்றம், காவல் நிலையம், தபால் நிலையம், ஆதார வைத்தியசாலை, திரையரங்கு, மயானம், நகராட்சி மன்றம், பிரதேச சபை என அனைத்தும் ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே அமையப்பெற்ற நகரம் என்றால் மிகையாகாது.

தென்மராட்சி – சாவகச்சேரி

யாழ் மாவட்டத்தில் பரந்ததொரு நிலப்பரப்பை உள்ளடக்கியதும், தனித்துவமான பல பண்புகளைக் கொண்டதுமாக தென்மராட்சிப் பிரதேசம் உள்ளது. இம் மாவட்டத்தின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பினை வழங்குவதாக இப்பிரதேசம் உள்ளது. நெல், பழவகை, தென்னை மரங்கள் மற்றும் பனை மரங்கள்  என்பன அதிகளவில் இங்கு செய்கை பண்ணப்படுகிறது. வானுயர்ந்த மரங்களும், வளமுடைய நிலங்களும், நீர் நிலைகளும், பச்சைப் பசேலென வயல் வெளிகளுமெனப் பேரெழில் பெற்று விளங்குகின்றது இப் பிரதேசம்.

தென்மராட்சிப் பிரதேசம் 232.19 சதுர கிலோமீட்டர்கள் பரப்பைக் கொண்டு யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரதேசமாகக் காணப்படுகிறது. அதாவது மாவட்டத்தின் 22.5% நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டதாக உள்ளது. தென்மராட்சி பௌதீக ரீதியாக சமதரைப் பாங்கானதாகக் காணப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளில் மணல் மண் மேற்பரப்பாக காணப்படுகிறது. இங்கு ஆறுகளோ மலைகளோ காணப்படாத போதிலும் பற்றைக் காடுகளும் சிறுகுளங்களும் காணப்படுகின்றன. யாழ் குடாநாட்டின் பாறை அமைப்பிற்கேற்றவாறு இப்பிரதேசத்தில் தரைக்கீழ் நீர்வளமே உள்ளது. எனினும் சில பகுதிகளில் கனியங்களின் செறிவு காரணமாக நீர் பழுப்பு நிறங்கொண்டதாகவும் அடர்த்தி கூடியதாகவும் உள்ளது. இப்பிரதேசத்தின் சில பகுதிகளில் செம்மண் தொகுதியும் காணப்படுகிறது.

தென்மராட்சிப் பிரதேச செயலகமானது 60 கிராம சேவகர் பிரிவுகளையும் 130 கிராமங்களையும் கொண்டமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசம் சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை என்ற இரு உள்ளூராட்சி அலகுகளை உள்ளடக்கி உள்ளது. இதில் சாவகச்சேரி நகரசபை 11 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி 31.29 சதுர கிலோமீட்டர்கள் பரப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. மிகுதி 49 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்ட 200.90 சதுர கிலோமீட்டர்கள் பரப்பு சாவகச்சேரி பிரதேச சபைக்குள் அடங்குகிறது. தென்மராட்சிப் பிரதேச செயலகம் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்குள் அடங்குகிறது.

தென்மராட்சிப் பிரதேசமானது இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படுகிறது. அத்துடன் நவம்பர் தொடக்கம் சனவரி வரையான மாதங்களில் வடகிழக்குப் பருவ மழைவீழ்ச்சியினைப் பெற்றுக் கொள்கிறது. இம் மழைவீழ்ச்சியானது நெற்பயிர்ச் செய்கைக்கும் நிலத்தடி நீர் சேகரிப்பிற்கும் உதவியாக உள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் நீர் ஏனைய பருவகாலங்களில் கிணறுகளின் மூலம் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இப் பிரதேசமானது யாழ் மாவட்ட விவசாய உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. இதனால் யாழ் மாவட்டத்தின் உணவுக் களஞ்சியம் என்றும் அழைக்கப்படுகிறது. இப் பிரதேசம் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என்பவற்றிற்குப் பெயர் பெற்ற இடமாக விளங்குகிறது. இங்கு தென்னை வளமும் மற்றும் பனை வளமும்  காணப்படுகிறன. அத்துடன் கடந்த கால யுத்தத்தினால் பெருமளவு தென்னை, பனை  மரங்கள் அழிவடைந்துள்ளன. இங்கு பெருமளவு நெல் சாகுபடி செய்யப்படுவதுடன் தானியங்களும் மரக்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கோடை காலங்களில் கிணற்று நீரைப்பயன்படுத்தி பயிற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.

தென்மராட்சிப் பிரதேசமானது யாழ் மாவட்டத்தினை ஏனைய மாவட்டங்களுடன் இணைக்கும் A9 வீதியினையும் உள்ளடக்குகிறது. அத்துடன் கொடிகாமம் – பருத்தித்துறை வீதி, சாவகச்சேரி- பருத்தித்துறை வீதி, மீசாலை – புத்தூர்ச்சந்தி வீதி, கேரதீவு ஊடாக சாவகச்சேரி-பூநகரி வீதி ஆகிய பிரதான வீதிகளையும் கொண்டுள்ளது.

சாவகச்சேரியின் தொன்மையான வரலாறு

தென்மராட்சிப் பிரதேசத்தில் வரலாற்றுத் தொல்லியற் கட்டடங்களோ அல்லது புதைபொருட் சின்னங்களோ குறிப்பிடத்தக்களவிற்கு கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பல இப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளன.

கி.பி 1242-ல் வட இலங்கையில் சிம்மாசனமேறிய கலிங்கச்சக்கரவர்த்தி 1248-ல் யாழ்ப்பாண நகரினை உருவாக்கி அங்கு தனது இராசதானியை அமைத்ததாகக்   கூறப்படுகிறது. இவ் இராச்சியத்தின் முதல் மன்னனான விஜயகாலிங்க சூரியன் தென்னிந்தியாவிலிருந்து மக்களை அழைத்து வந்து யாழ்ப்பாணத்தில் குடியேற்றியதாக யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை போன்ற சரித்திர நூல்கள் கூறுகின்றன. திருநெல்வேலி, புலோலி, இணுவில் என பல இடங்களில் இவ்வாறான குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளதோடு தென்மராட்சியின் கோயிலாக் கண்டி பகுதியிலும் இவ்வாறான ஒரு குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தென்னிந்தியாவின் புல்லூரைச் சோ்ந்த தேவராயேந்திரன் கோயிலாக்கண்டியில் தனது அடிமைக் குடிகளுடன் குடியேறியதாக மேற்படி நூல்கள் கூறுகின்றன.

கி.பி 1247-ல் தென்னிலங்கையை நோக்கிப் படையெடுத்த சந்திரபானு என்ற சாவகன் (யாவா தேசத்தைச் சோ்ந்தவன்) அங்கு தோல்வியடைந்ததால் வட இலங்கை நோக்கிப் படையெடுத்து கலிங்கச் சக்கரவர்த்தியின் அரியணையைக் கவர்ந்து கொண்டான். அவனோடு வந்தவர்கள் குடியேறிய பகுதி சாவக்கோட்டை, சாவகச்சேரி, சாவகன்சீமா என வழங்கப்படலாயிற்று.

கி.பி 1450-ல் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றும் நோக்குடன் 6ம் பராக்கிரமபாகு மன்னன் சப்புமல்குமரனை (செண்பகப்பெருமாள்) பெரும்படையுடன் வட இலங்கைக்கு அனுப்பியிருந்தான். இவ்வாறு சப்புமல்குமரன் படையெடுத்து வந்த போது, சிங்களப்படைக்கும் தமிழ் படைக்குமிடையில், வட இலங்கையில் நடந்த முதலாவது யுத்தம் சாவகன்கோட்டையில் (சாவகச்சேரி) நிகழ்ந்துள்ளது.

உக்கிரசிங்கனிடம் கருணாகரத்தொண்டமான், உடுப்பிட்டியிலுள்ள கரணவாய், மட்டுவிலில் உள்ள வெள்ளப்பரவைக் கடல்களில் விளைகின்ற உப்பைக் கேட்டதாக வரலாறு கூறுகின்றது. இவ் உப்பை கொண்டு செல்வதற்காகவே தொண்டமனாறு வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சங்கிலி மன்னன் உண்டாக்கிய குழப்பத்தால் அப்போதைய யாழ்ப்பாண இராச்சிய மன்னன் பரராச சேகரனை சோழமன்னன் சிறை எடுத்தபோது அம் மன்னனை மீட்ட பரநிரூபசிங்கம் என்ற வீரனுக்கு ஏழு ஊர்களை அம்மன்னன் பரிசளித்திருந்தான். அந்த ஏழு ஊர்களில் தென்மராட்சிப்பகுதியின் கச்சாயும் உள்ளடங்குகிறது. சாவகச்சேரி வாரிவணேஸ்வரம் சோழர் காலத்துடன் தொடர்புபட்டுக் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இவ்வாறாக பல வரலாற்று நிகழ்வுகள் இப்பிரதேசத்துடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது.


தமிழில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்தவர்கள் சாவகர்கள்  அல்லது யாவகர்கள் என அழைக்கக்கப்படுவதால் சாவகச்சேரி என்ற பெயர் வரக்காரணம் என்பர். மற்றும்,  சந்திரபானுமன்னனின்  காலத்தில் வந்து இருந்தவர்கள் குடியேறிய இடமாகவும் கருதலாம் என்பர். சாவகச்சேரியானது 12ஆம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை இலங்கையின் வரலாற்றில்  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கின்றது.  

“வாரி வனநாத ஈசுவரம்” என அழைக்கப்பட்ட சாவகச்சேரி

சோழர் காலத்தில் முன்னேசுவரம், கோணேச்சரம், திருக்கேதீச்சரம் போல் சாவகச்சேரியும் “வாரி வனநாத ஈசுவரம்” என அழைக்கப்பட்டது. அக்காலத்து இராசதானிகளில் ஒன்றாக இது விளங்கியுள்ளது. பின்பு சங்கிலியன் ஆண்ட காலத்தில் நாணயம், நம்பிக்கை, வீரம் எனப்பல சிறப்புகள் பெற்றுத் தென்பகுதியில் வாழ்ந்த மக்களினால் தென் மறவர் ஆட்சி என்பது காலத்தின் ஓட்டத்தால் “தென்மராட்சி” என மருவி வந்துள்ளது.

ஐரோப்பியர்களின் காலத்தில் “சாவகச்சேரி”

“சாவகச்சேரி” Chavagatzeri  என ஒல்லாந்தரின் வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு கோயிற்பற்றுப் பிரிவுகளில் காணப்பட்ட கிறித்தவ தேவாலயங்களுடன் இணைந்ததாகப் பாடசாலைகள் இருந்தன. தென்மராட்சியில் நாவற்குழி, சாவகச்சேரி, கைதடி, வரணி, எழுதுமட்டுவாள் ஆகிய 5 இடங்களிலும் பாடசாலைகள் இருந்தன.

போர்த்துக்கேயர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் அவர்களால் வடமாகாணத்திற் பல தேவாலயங்கள் அமைக்கப்பட்டன. அவற்றிற் சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட தேவாலயம் மிகப் பெரியதாகக் காணப்பட்டது என்றாகிறார் பல்தேயசு அவர்கள். இந்துக் கோயில் ஒன்று அழிக்கப்பட்ட இடத்திலேயே இக்கோயில் கட்டப்பட்டதாக சுவாமி ஞானப்பிரகாசர் (1921  118  இல்) குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட டச்சுக்காரர் ஆட்சியை நினைவூட்டுவதாக இங்கு “டச்சு வீதி”யும் உள்ளது. சாவகச்சேரிச் சந்தைக்கு முன்பாகத் தொடங்கும் வீதி வளைந்து வளைந்து மீசாலையூடாகச் செல்கின்றது. இது டச்சுக்காரர்களால் அமைக்கப்பட்டமையால் டச்சு றோட் என்று பெயர் பெற்றுள்ளது. இதன் வளைவுகள் மறைந்து நின்று தாக்குவதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்டன என்று கூறுவார்கள்.

டச்சு வீதி

பூநகரி, இலங்கை சுதந்திரமடைந்த 1948 காலப்பகுதியில் சாவகச்சேரித் தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஐரோப்பியர் வருகைக்கு முன்பாகவே கச்சாயில் பெரிய துறைமுகம் இருந்து வணிகம் நடைபெற்று வந்துள்ளது. கொழும்பிற்கு நேரடித் தொடருந்து, பேருந்து பாதைகள் தொடங்கிய பின் இதனைப் பயன்படுத்துவபர்களின் எண்ணிக்கை  குறைவு என்றே கூறலாம்.

சாவகச்சேரி சந்தை

சாவகச்சேரி சந்தையில் மரக்கறிச் சந்தை, பழங்களுக்கான பகுதி,  வெற்றிலைகள் விற்கும் பகுதி, தேங்காய்ச் சந்தை, மீன் சந்தை, இறைச்சிக் கடைகள், பலசரக்குக் கடைகள், உடுப்புக் கடைகள், அழகுசாதனப் பொருட்கள், பனை உற்பத்திப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் போன்றனவற்றை ஒவ்வொரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தென்மராட்சியில் விளைவிக்கப்படும் மரக்கறிகள், பழவகைகள், தேங்காய்கள், பனை உற்பத்திப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு பெரிதும் உதவுவது சாவகச்சேரி சந்தையாகும்.

சாவகச்சேரி தொடருந்து நிலையம்

இலங்கையின் மிக நீண்ட தொடருந்து சேவையான கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை நடைபெறும் தொடருந்து சேவை வலையமைப்பில் நாவற்குழி, மீசாலை தொடருந்து நிலையங்களுக்கிடையில் சாவகச்சேரி மற்றும் சங்கத்தானை ஆகிய இரண்டு தொடருந்து நிலையங்கள் அமைந்துள்ளன.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையானது தென்மராட்சிப் பகுதியிலுள்ள மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்திசெய்து வருகின்றது. இந்த ஆதார வைத்தியசாலையால் பல நோயாளிகள் நன்மையடைகிறார்கள். சாவகச்சேரியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது எனது அப்பாவின் இடமான மீசாலை பற்றியும் சற்று குறிப்பிட விரும்புகிறேன்.

மீசாலை

மீசாலை, யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் சரசாலை, மந்துவில் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் அல்லாரையும், தெற்கில் சங்கத்தானையும், மேற்கில் மட்டுவில், சரசாலை, கல்வயல் ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மீசாலை வடக்கு, மீசாலை தெற்கு, மீசாலை மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதியின் வழியே சாவகச்சேரியில் இருந்து செல்லும்போது இவ்வூர் சுமார் 3 கிலோமீட்டர்கள் தொலைவிலும், கொடிகாமத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. இவ்வீதிக்கு இணையாக ஒரு தொடருந்துப் பாதையும் தொடருந்து நிலையமும் அமைந்துள்ளன. மீசாலை என்னும் பெயர் வரக் காரணம் யாதெனில், மாமரங்கள் கூடுதலாக நிற்பதால் மா – சாலை என்பது மருவி மீசாலை ஆக வந்தது என்றும் கூறுவர்.
மேலும், சாவகச்சேரியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது எனது அம்மாவின் இடமான சங்கத்தானை பற்றியும் சற்று குறிப்பிட விரும்புகிறேன்.

சங்கத்தானை

“சங்கத்தானை”  தொடருந்து நிலையம்

யாழ் குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதி தொன்று தொட்டு சைவத்தையும் தமிழையும் வளர்த்துக் கொண்டே வருகிறது. தென்மராட்சியின் திலகம் போல் திகழ்வது சங்கத்தானை என்னும் கிராமமாகும். சாவகச்சேரி நகருக்கும் மீசாலைக் கிராமத்திற்கும் இடையில் உள்ள “சங்கத்தானை” ஒரு பெரும் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியுள்ளது. அதன் புகழும், பெருமையும் அதன் பரப்பிற்கு ஏற்பப் பிரகாசம் கொண்டதுதான். ஒரு காலத்தில் இப்பகுதி ஒரு பெரும் வியாபாரத் தளமாகப் பல பொருட்களும் வியாபாரம் செய்யும் ஒரு மையமாகக் காணப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற “யாவகர்கள்” தூர கிழக்கு நாடுகளில் இருந்து இங்கே வந்து சங்கு முதலிய நூதனமான தமது பொருட்களைக் கொண்டு வந்து பண்டமாற்று செய்தமையால் “யாவகர்சேரி” பின்னர் “சாவகச்சேரி” என்று பெயர் பெற்றது என்றும் சங்கு வியாபாரத்தில் புகழ் ஈட்டிய இடமாகச் “சங்கத்தானை” பெயர் கொண்டிருக்கலாம் என்றும் சரித்திர ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். இச்சங்கத்தானைக் கிராமம் தென்மராட்சியில் உள்ள சாவகச்சேரி தொகுதியின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

தென்மராட்சி கலை மன்றம்

தென்மராட்சி கலை மன்றத்தின் கலாசார மண்டபமானது சிவன் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது. தென்மராட்சியில்  வாழும் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை வெளிக்கொண்டுவரும் மேடையாக தென்மராட்சி கலைமன்றம் விளங்குகின்றது.

சாவகச்சேரியில் உள்ள இந்து ஆலயங்களில் சில…

நான் தாயகத்துக்குச் சென்றிருந்தபோது சில ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அவற்றில் சில ஆலயங்களின் விபரங்களையும் இணைக்க விரும்புகிறேன்.

சாவகச்சேரியில் பண்டைநாளில் இருந்த “வாரி வனநாதர்” என்ற பழம்பெருங்கோயில் பிற்காலங்களில் அழிந்திருக்கிறது. சாவகச்சேரியில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. இவற்றில் மிகத் தொன்மையானது வாரிவனநாதசிவன் கோயிலாகும். போர்த்துக்கேயர் இதனை அழித்தனர். பின்னாளில் வயல் உழும்போது சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுக் கோயில் அமைக்கப்பட்டது என்பர். இதன் பழைய கோயிலின் தீர்த்தக்கிணறு சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அண்மையில் காணப்படுகின்றது.

சாவகச்சேரி பேருந்து நிலையமும் அதற்கருகாமையில் உள்ள கிணறும்

வாரிவனநாதர் – சிவன் கோயில் சாவகச்சேரி

அமிர்தபாஷினி உடனுறை வாரிவனநாதர் – பெருமான் சாவகச்சேரி

சாவகச்சேரிச் சந்தையின் தென் பகுதியையொட்டிக் காணப்படுகின்ற மருதமரங்கள் நிறைந்த பகுதி ஆதிகாலத்தில் வயல்நிலங்களாகவே இருந்தன. அப்பகுதியில் சிவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வந்தது. போர்த்துக்கேயரின் வருகையின் பின் சைவாலயங்களின் அழிப்பு இவ்வாலயத்திலும் இடம்பெற்றது. அடியவரொருவரால் விக்கிரகங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டது. காலப்போக்கில் இக்கிணறு சாத்தாவரிக்கொடிகளால் மூடப்பட்டு மண்மேடாகியது. இத்தேசத்தைச் சேர்ந்த சிவபக்தனாகிய விருபாக்கன் என்பவன் பால் வியாபாரத்தினை மேற்கொண்டு வந்தான். இவன் தலையில் பாற்குடத்துடன் வருகையில் சாத்தாவரிக்கொடி தடக்கி விழுத்தியது. தொடர்ந்து மூன்று முறை இவ்வாறு நடந்தமையினால் அக்கொடியினை கத்தியினால் வெட்டியவேளை இரத்தக் கசிவோடு சிவலிங்கமொன்றினைக் கண்டான். இவ்வாறு தான்தோன்றீச்சரமாகத் தோன்றியதே அமிர்தபாஷினி உடனுறை வாரிவனநாதர் பெருமான் கோயிலாகும். சாத்தாவரிக்கொடிகளால் மூடப்பட்டு கிடந்தமையினால் அச்சிவலிங்கப்பெருமானை வாரிவனநாதர் என்றும் அம்பாளை அமிர்தபாஷினி என்றும் அடியவர்கள் அழைத்தார்கள்.

சங்கத்தானை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில் (குட்டி நல்லூர்)

சங்கத்தானையில் ஆரம்பத்தில் வைரவர் சுவாமி கோவிலாக அமையப்பெற்றிருந்தது. பின்னர் ஒருமுறை வைரவ சுவாமி பக்தர் ஒருவரின் ஊடாக அருள் வாக்கில் தனது வலது பக்கத்தில் முருகனுக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறியிருந்தார். அதனை அடுத்து முருகனுக்கும் சந்நிதி அமைத்து தற்போது வைரவசுவாமி கந்தசுவாமி கோவிலாக அழைக்கப்படுகிறது.

இந்தக் கோவிலை மையப்படுத்தி விளையாட்டுக் கழகம், சன சமூக நிலையம், முன்பள்ளி, அறநெறிப் பாடசாலை போன்றன செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது. அருட்கவி விநாசித்தம்பி ஐயா அவர்களினால் “குட்டி நல்லூர்” எனச் சிறப்பித்துக் கூறப்பட்ட ஒரு ஆலயமாகும்.

சப்பச்சிமாவடி விநாயகர் ஆலயம்

சாவகச்சேரியில் அரசடிப்பகுதியில் அமைந்த ஓரிடம் சப்பச்சி மாவடி ஆகும். இங்கு “சப்பச்சிமாவடி விநாயகர் ஆலயம்” அமைந்துள்ளது. தமிழ்நாட்டுக் காஞ்சிமாவடி என்ற தலத்து மாவிதை கொண்டுவரப்பட்டு இங்கு நட்ட மரத்தடியிலேயே கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாவின் கனி விதையின்றி இருப்பதால் “சப்பச்சி” எனப் பெயர் பெற்றதென்பர். மேலும் பெரிய மாவடி” என்ற வட்டாரமும் இங்குள்ளது. இங்கு பெரிய மாவடிக் கந்தசுவாமி கோவிலும் அமைந்துள்ளது. மரப்பெயரால் இத்தலம் பெயர் பெறுவதாயிற்று.

இத்தியடி ஶ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம் – சங்கத்தானை

சாவகச்சேரி – சங்கத்தானை இத்தியடி ஶ்ரீ வீரகத்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, சங்கத்தானை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயத்தின் மேற்குத் திசையில் நின்ற இத்தி மரத்தடியில் சிறுகுடிசையில் வசித்த விஸ்வகுலப் பெண்ணொருவரின் சொப்பனத்தில்  விக்னேஸ்வரப்பெருமான் தோன்றி தன்னை அக்குடிசையில் வைத்து வழிபடுமாறு வேண்டவே அவரும் அதன்படி செய்தார். இவரின் வழித்தோன்றலான சின்னத்தம்பி நாகமுத்து என்பவர் 1886 ஆம் ஆண்டில் தூபியுடன் கூடிய மண்டபத்தினை அமைத்து கும்பாபிசேகம் செய்ததாகவும் இக்காலத்திலிருந்து கோவில் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து இன்றைய நிலையினை அடைந்தது எனலாம்.

தென்னிந்திய திருச்சபை – சாவகச்சேரி

அமெரிக்கன் மிசன் தொண்டர்களால் 1834 இல் ஆரம்பிக்கப்பட்ட திருச்சபை மக்களுக்கான வழிபாட்டிடமாகும். தென்மராட்சிப் பகுதியிலே இறைபணியினை ஆரம்பிக்கும் முகமாகச் சாவகச்சேரியினைத் தெரிவு செய்து அங்கு ஒரு திருச்சபையைத் தாபித்தனர். முன்பு அமெரிக்கன் இலங்கை மிசன் தேவாலயம் ஆக இருந்தது தற்போது தென்னிந்திய திருச்சபை ஆதீனமாக விளங்குகின்றது.

சாவகச்சேரி புனித லிகோரியார் தேவாலயம்

சாவகச்சேரியிலுள்ள இன்னுமொரு தேவாலயம் “சாவகச்சேரி புனித லிகோரியார் தேவாலயம்”. இது ஒரு கத்தோலிக்கத் தேவாலயமாகும்.

பாடசாலைகள்

சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை

1904 இல் சாவகச்சேரிச் சந்தைக்கு அண்மையில் ஒரு சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை வி. தாமோதரம்பிள்ளை என்பவரால் நிறுவப்பட்டது. பின்பு 1905 இல் சங்கத்தானைக்கு மாற்றப்பட்டு சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆரம்ப பாடசாலையாக இருந்தது. 21-08-1989 இல் இருந்து ஆரம்ப பாடசாலை “இந்து ஆரம்ப பாடசாலை”  என்ற பெயருடன் தனித்து இயங்கத் தொடங்கியது.

இங்கு நான் சிறப்பித்துக் கூற விரும்பும் விடயம் என்னவெனில், “எனது அம்மா இந்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று, பின்னர் ஆசிரியையாக தனது உள்ளக பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்வதற்காக தான் கல்வி கற்ற  இந்தப் பாடசாலையையே தெரிவு செய்து 1 வருட காலம் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார்”.

சாவகச்சேரி இந்துக் கல்லூரி

சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சாவகச்சேரி நகரத்தில் கண்டி வீதியில் அமைந்திருக்கும் பாடசாலை ஆகும். இங்கு இடைநிலை, உயர் தரம் வரையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. அதாவது தரம் 6 முதல் தரம் 13 வரையான வகுப்புகளுடன் இயங்கிவருகின்றது. இப் பாடசாலை தென்மராட்சியில் இருக்கும் ஒரே ஒரு  தேசிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

1904 இல் சாவகச்சேரிச் சந்தைக்கு அண்மையில் ஒரு சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை வி. தாமோதரம்பிள்ளை என்பவரால் நிறுவப்பட்டது. 1905 இல் அது சங்கத்தானைக்கு மாற்றப்பட்டது. 1979 இல் இப்பள்ளி மத்திய மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 1989 ஆகத்து 29 இல் இருந்து இந்து ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பப்பிரிவு தனித்து இயங்கத் தொடங்கியது. அவ்வேளை 6 – 13 வரையான வகுப்புகளுடன் இந்துக் கல்லூரி தொடர்ந்து இயங்கியது. 1993 பெப்ரவரி 5 இல் தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.

இந்தப் பாடசாலையிலேயே எனது அம்மா வகுப்பு 6 முதல் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றிருந்தார்.

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவின் தலைநகரமான சாவகச்சேரியில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். தென்மராட்சியில் நிறுவப்பட்ட முதல் பாடசாலை இதுவே. இது ஆண், பெண் இரு பாலாரும் கல்வி பயிலும் கலவன் பாடசாலையாகும்.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்காக இலங்கை வந்த அமெரிக்க மிசனைச் சேர்ந்தவர்கள் 1875 ஆம் ஆண்டில் “டிறிபேக் ஆங்கிலப் பாடசாலை” என்ற பெயரில் இப்பாடசாலையை நிறுவினர். அக்காலத்தில், தென்மராட்சி நீதிமன்றத்தில் காவல்துறை நீதவானாகப் பணியாற்றிய ஜேம்சு இசுடுவர்ட் டிறிபேக் என்பவர் இதற்குத் தேவையான நிதியின் பெரும் பகுதியை வழங்கினார். இதன் காரணமாகவே இப்பாடசாலைக்கு அவருடைய பெயர் இடப்பட்டது.

சாவகச்சேரி மகளிர் கல்லூரி

சாவகச்சேரி மகளிர் கல்லூரியானது தென்மராட்சி பிரதேசத்திலுள்ள ஒரே ஒரு பெண்கள் கல்லூரி எனும் பெருமைக்குரியதாகும். அன்றைய சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் உயர்திரு வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்களின் அரும் பெரும் முயற்சியினால் 1952 ஆம் ஆண்டு இக்கல்லூரி உதயமானது.

ஈழ விடுதலைப் போராட்டமும் சாவகச்சேரி மண்ணும்

சாவகச்சேரியில் 10-06-1991 இல் நடைபெற்ற முத்தமிழ்விழாவில் தமிழீழ தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் மக்கள் முன் தோன்றிய வரலாற்று நிகழ்வு

இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமிப்புச் செய்து தமிழ் மக்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்து வெளியேறிய பின் மீண்டும் “ஈழப்போர்” ஆரம்பமானது. அப்போது தமிழீழ தேசியத்தலைவர் உயிருடன் இருக்கின்றாரா எனும் ஐயம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் சாவகச்சேரியில் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய முத்தமிழ் விழாவின் 5 ஆவது நாள் நிகழ்வு, 10-06-1991 அன்று சாவகச்சேரி மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தமிழீழ தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார். அங்குதான் முதற்தடவையாக தமிழீழத்தின் உயரிய தேசிய விருதான “மாமனிதர் விருது” வழங்கப்பட்டது. முத்தமிழ் விழாவுக்குச் சென்றிருந்தபோது இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வினை நேரில் பார்க்கும் வாய்ப்பு தமக்கும் கிடைத்தது என எனது அப்பா கூறினார்.

யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு

யுத்த காலத்தில் தென்மராட்சி, சாவகச்சேரி பிரதேசம் ஒரு மையப் புள்ளியாகத் திகழ்ந்தது. 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது வலிகாமத்தைச் சேர்ந்த மக்கள் தென்மராட்சியின் பல பகுதிகளிலும் வந்து தற்காலிகமாக தங்கியிருந்தனர். அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் தென்மராட்சிப் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களுக்குச் செல்லும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டது.

போரின் உக்கிரத்தினால் சாவகச்சேரி மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் பல கட்டடங்கள் வெகுவாகச் சேதமாகின. இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக்கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்பியதால், சாவகச்சேரியும் அதனை அண்டிய பகுதிகளும் மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன.

“தமிழீழத்தின் நேதாஜி”

இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவரான திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவர். அரசாங்க ஊழியராக பணியற்றிய வேளையிலும் தமிழர்களின் உரிமைக்கான குரலை ஓங்கியொலிக்கச் செய்வதற்கான “மொழிவழி தொழிற்சங்கம்” அமைக்கப்படல் வேண்டும் எனக் கருதிச் செயற்பட்டவர் ஆவார். இதனால் “தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்” என்ற அமைப்பின் முன்னோடியகாவும் செயற்பட்டார். “இலங்கை மீண்டும் எரிகிறது”, ‘Why Tamils Need a Nation’, ‘The History of Thamiraparani’ என்பன போன்ற பல நூல்களை எழுதி தமிழ் மக்களின் சிக்கலை உலகின் மனசாட்சிக்கு முன் எடுத்துரைக்கப் பாடுபட்டவர் திரு ஆ. இராசரத்தினம் அவர்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் அவர்களுடன் இயக்கத்தின் ஆரம்பக் காலத்தில் திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முன்னோடி இயக்கமான “புதிய தமிழ்ப் புலிகள்” (TNT) என்ற பெயர் சூட்டப்படுவதற்கு திரு இராசரத்தினம் அவர்களின் ஆலோசனை மூலகாரணமாக இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாடு சென்று விடுதலைப் படையை அமைத்துப் போராடி வீரமரணம் அடைந்தவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள். அதுபோலவே தமிழீழ விடுதலைப் போராட்டதிற்காக இலங்கையில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்குச் சென்று தமிழீழ விடுதலைக்கு போராட ஒரு ஆயுதப்படையை அமைக்க வேண்டும் என்ற ஆவலில் செயற்பட்டு வந்தவர் ஆ. இராசரத்தினம் அவர்கள். தமிழ்நாட்டிலேயே அவர் தன்னுயிரை அர்ப்பணித்தார். மறைந்த திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் தமிழீழ மக்களால் ‘தமிழீழத்தின் நேதாஜி’ என நினைவு கூரப்படுதல் பொருத்தமானதே.

விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகம் சாவகச்சேரியில் நடாத்திய முத்தமிழ் விழாவில் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் அவர்களினால் தமிழீழத் தேசிய விருதான “மாமனிதர்” விருதினை  வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். அந்த விருதினை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.

மாமனிதர் நடராஜா ரவிராஜ்

நடராஜா ரவிராஜ் (யூன் 25, 1962 – நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ், சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி. யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

மாமனிதர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான். எனினும், அக்குறுகிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் நன்கு அறிவர். எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்பதற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்திலுள்ள கல்விமான்களதும், முதியோர்களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக்கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண்பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒரு தலைவரானார்.

நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.

தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கௌரவித்துள்ளார். அவருடைய திருவுருவச் சிலை சாவகச்சேரி பிரதேச சபை முன்றலில் அமைக்கப்பட்டுள்ளது. அவர் தென்மராட்சி மக்கள் மனதில் என்றும் நிறைந்தவராக விளங்குவார் என்பதில் ஐயமில்லை.

தாய்மண் மீட்பிற்காகத் தம் உயிரை அர்ப்பணித்தோர்

எமது தாயக விடுதலைப் போராட்டத்திற்காக எனது பெற்றோரின்  பிரதேசத்திலிருந்தும் பல வீரர்கள் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்துள்ளார்கள். வீரத்திற்கே பெயர் பெற்றதென்று சிறப்பித்துக் கூறப்படும் தென் மறவர்கள் ஆட்சி புரிந்த இடமான தென்மராட்சியிலிருந்து அதாவது சாவகச்சேரிப் பிரதேசத்திலிருந்து வீர காவியமானவர்கள் பலர், அவர்களில் சிலரது விபரங்களையும் இணைக்க விரும்புகிறேன்.

வீரவேங்கை தேவன்
தம்பிப்பிள்ளை வசந்தகுமார்
மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: வீரவேங்கை, இயக்கப் பெயர்: தேவன், இயற்பெயர்: தம்பிப்பிள்ளை வசந்தகுமார், முகவரி: மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 24.02.1963, வீரச்சாவு: 14.02.1987, நிகழ்வு: யாழ். மாவட்டம் கைதடி பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவு.

மேஜர் அப்துல்லா
கணபதிப்பிள்ளை நகுலகுமார்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: மேஜர், இயக்கப் பெயர்: அப்துல்லா, இயற்பெயர்: கணபதிப்பிள்ளை நகுலகுமார், முகவரி: சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 20.07.1963, வீரச்சாவு: 05.10.1987, நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய – சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.

கப்டன் சீலன்
தாமோதரம்பிள்ளை இளம்பிறைநாதன்
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: கப்டன், இயக்கப் பெயர்: சீலன், இயற்பெயர்: தாமோதரம்பிள்ளை இளம்பிறைநாதன், முகவரி: சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 26.11.1968, வீரச்சாவு: 19.09.1991, நிகழ்வு: மணலாற்றில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு.

லெப்.கேணல் சூட்டி
சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன்
கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: லெப்.கேணல், இயக்கப் பெயர்: சூட்டி, இயற்பெயர்: சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன், முகவரி: கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்,  வீரப்பிறப்பு: 26.05.1967, வீரச்சாவு: 14.07.1991, நிகழ்வு: யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் கடல்வழியாகத் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு.

கப்டன் ஆரமுதன் (நிரேஸ்)
குலவீரசிங்கம் தேவபாலன்
மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: கப்டன், இயக்கப் பெயர்: ஆரமுதன் (நிரேஸ்), இயற்பெயர்: குலவீரசிங்கம் தேவபாலன், முகவரி: மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 16.09.1972, வீரச்சாவு: 23.09.1993, நிகழ்வு: “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முகாமை வேவு பார்த்துவிட்டுத் திரும்புகையில் சங்குப்பிட்டி – கேரதீவுக் கடலில் வீரச்சாவு.

லெப்.கேணல் குணா
சுந்தரம் விஜயராசா
கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

பொறுப்பு: தென்மராட்சிக் கோட்ட சிறப்புத் தளபதி, நிலை: லெப்.கேணல், இயக்கப் பெயர்: குணா, இயற்பெயர்: சுந்தரம் விஜயராசா, முகவரி: கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 28.11.1963, வீரச்சாவு: 11.11.1993, நிகழ்வு: பூநகரி – நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கையின்போது வீரச்சாவு.

கப்டன் நக்கீரன்
தம்பிப்பிள்ளை கணேசமூர்த்தி
சாவகச்சேரி வடக்கு, மீசாலை, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: கப்டன், இயக்கப் பெயர்: நக்கீரன், இயற்பெயர்: தம்பிப்பிள்ளை கணேசமூர்த்தி, முகவரி: சாவகச்சேரி வடக்கு, மீசாலை, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 28.10.1972, வீரச்சாவு: 09.06.1997, நிகழ்வு: யாழ்ப்பாணம் மீசாலையில் படையினருடனான மோதலில் வீரச்சாவு.

லெப்டினன்ட் வாகீசன்
குலவீரசிங்கம் இந்திரபாலன்
மீசாலை மேற்கு, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: லெப்டினன்ட், இயக்கப் பெயர்: வாகீசன், இயற்பெயர்: குலவீரசிங்கம் இந்திரபாலன், முகவரி: மீசாலை மேற்கு, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 30.10.1978, வீரச்சாவு: 05.10.1997, நிகழ்வு: முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு.

லெப்டினன்ட் கோமகள்
ஆசைப்பிள்ளை சசிகலா
மீசாலை வடக்கு, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: லெப்டினன்ட், இயக்கப் பெயர்: கோமகள், இயற்பெயர்: ஆசைப்பிள்ளை சசிகலா, முகவரி: மீசாலை வடக்கு, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 01.03.1978, வீரச்சாவு: 27.09.1998, நிகழ்வு: கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 02 நடவடிக்கையின் போது வீரச்சாவு.

மேஜர் கமலன் (விஜயன்)
தெய்வேந்திரம் விஜயரூபன்
பெரியமாவடி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: மேஜர், இயக்கப் பெயர்: கமலன் (விஜயன்), இயற்பெயர்: தெய்வேந்திரம் விஜயரூபன், முகவரி: பெரியமாவடி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 17.10.1974, வீரச்சாவு: 11.11.1999, நிகழ்வு: யாழ்ப்பாணம் சரசாலைப்பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.

லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்)
கிருஸ்ணசாமி சதீஸ்வரன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

பிரிவு: கடற்கரும்புலி, நிலை: லெப்.கேணல், இயக்கப் பெயர்: ஆற்றலோன் (சுதன்), இயற்பெயர்: கிருஸ்ணசாமி சதீஸ்வரன், முகவரி: சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 23.03.1979, வீரச்சாவு: 07.02.2003, நிகழ்வு: நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலாலும் தங்களைத் தாங்களே அழித்து வீரச்சாவு.

லெப்.கேணல் மகேந்தி
இராசு மகேந்திரன்
கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: லெப்.கேணல், இயக்கப் பெயர்: மகேந்தி, இயற்பெயர்: இராசு மகேந்திரன், முகவரி: கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 14.02.1970, வீரச்சாவு: 10.06.2006, நிகழ்வு: மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவும் பிரிவு மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.

லெப்.கேணல் புகழரசன் (முகிலன்) (சித்திரன்)
மரியதாஸ் தேவசீலன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

நிலை: லெப்.கேணல், இயக்கப் பெயர்: புகழரசன் (முகிலன்) (சித்திரன்), இயற்பெயர்: மரியதாஸ் தேவசீலன், முகவரி: சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 15.10.1978, வீரச்சாவு: 21.02.2007, நிகழ்வு: யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவு.

லெப்.கேணல் இளங்கோ
இராசதுரை பகீரதன்
மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

பிரிவு: கரும்புலி, நிலை: லெப்.கேணல், இயக்கப் பெயர்: இளங்கோ, இயற்பெயர்: இராசதுரை பகீரதன், முகவரி: மீசாலை மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரச்சாவு: 22.10.2007, நிகழ்வு: அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையின் போது வீரச்சாவு.

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன்
சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன்
 சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்:

பொறுப்பு: தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர், நிலை: பிரிகேடியர், இயக்கப் பெயர்: சு.ப. தமிழ்ச்செல்வன் (தினேஸ்), இயற்பெயர்: சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன், முகவரி: சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 29.08.1967, வீரச்சாவு: 02.11.2007, நிகழ்வு: கிளிநொச்சி நகர்ப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் விமானங்கள் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலின்போது வீரச்சாவு.

மேற்குறிப்பிடப்பட்ட மாவீரர்களில் கப்டன் சீலன், கப்டன் ஆரமுதன் (நிரேஸ்), லெப்.கேணல் குணா ஆகிய மாவீரர்களின் வித்துடல்கள் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டிருந்தன. வீரவேங்கை தேவன், மேஜர் அப்துல்லா, 2ம் லெப்டினன்ட் இளங்கேஸ், லெப்.கேணல் சூட்டி ஆகிய மாவீரர்களின் நினைவுக்கற்கள் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நாட்டப்பட்டிருந்தன.

இவ்வாறாக எனது பெற்றோர்களின் வேர்களைத்  தேட விளைகையில் பல சிறப்புகளையும், பாரம்பரியங்களையும் தன்னகத்தே கொண்ட சாவகச்சேரி மற்றும் அதனை அண்டிய பகுதிகளான எனது அப்பாவின் ஊரான மீசாலை, அம்மாவின் ஊரான சங்கத்தானை ஆகிய  மண்களின் சிறப்பும், தமிழீழ விடுதலைக்காக வீரகாவியமான மறவர்கள் பற்றிய தேடலும் எனது வேர்களைத் தேடும் விழுதுகளுக்கான தேடல் மூலம் பல உணர்வுகளை என்னுள் ஏற்படுத்தியது எனும் கருத்தினை பதிவு செய்து, எனது தேடலை முடிந்தவரை சுருக்கமாகக் கூறிக்கொண்டு நிறைவு செய்கிறேன்.

நன்றி.

செல்வன் சர்யுதன் ஹரிகேசவன்
பியல்லா திலீபன் தமிழ்ச்சோலை

உங்கள் கவனத்திற்கு