தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கை

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

27.11.2022

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

எமது தாயகத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக்கொள்ளும் ஒரு புனித நாள். தனி மனித இருப்பியல் குறித்த சிந்தனைகளிலிருந்து தம்மை விடுவித்துத் தேசம், விடுதலை, எமது மக்களின் பாதுகாப்பு என ஒரு தேசக்கட்டுமானம் நோக்கிப் பயணித்த உயரிய இலட்சிய மாவீரர்கள் இவர்கள்.

ஆண்டாண்டு காலமாக ஆண்டுவந்த தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்காமண்ணாக மாற்றிவிட்ட எமது மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாள். மாவீரர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருகிறார்கள் என்னும் தமிழீழ மக்களின் நெஞ்சில் ஆழப்பதிந்த நெருப்பு நினைவோடு நாம் மாவீரர் நாளை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகின்றோம்.

எமது தேசத்தின் இருப்புக்காகவும் அதன் விடுதலைக்காகவும் போராடிய மாவீரர்;களை நடுகல், கல்வெட்டுகள், நினைவுச்சுவடுகள் என வழிபட்டுவந்த பண்பாட்டைக் கொண்ட மக்களினம் நாங்கள். இவ்வுயரிய வரலாற்றுப் பண்பாட்டு வழித்தடத்தில், எமது மாவீரர்களின் நினைவுகளை, அவர்களின் வீரவரலாற்றுப் பதிவுகளை தலைமுறைகள் கடந்தும் நினைவில் நிறுத்தி,  சரியான முறையில் உணர்வுகளுடன் உயிர் வலிசுமந்து கடத்திச்செல்வது தமிழினத்தின் வரலாற்றுக் கடமையும் பொறுப்புமாகும்.

தமிழ் மக்கள் தமக்கான ஓர் உயரிய நாகரிகத்தை, தனித்துவமான வாழ்வியலை, உயரிய மானிட விழுமியங்களை, பண்பாடுகளைத் தம்மகத்தே கொண்டிருக்கும் ஒரு தேசிய இனம். சிந்து வெளி நாகரிகம் தொட்டு சங்ககால தமிழ் இலக்கியங்கள் வரை, இன்று புலம்பெயர் மக்களாக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் வாழ்வியல் ஈறாக இது வெளிப்பட்டு நிற்கின்றது. இன்று எம்முன் உள்ள சவால்களாக இருப்பவை, இந்து பசுபிக் பிராந்திய புவிசார் அரசியற் சூழமைவும்; எமது விடுதலைப்போராட்டம் சார்ந்தும் தேசம் சார்ந்தும் வலுமிக்க சர்வதேச அரசியற் சக்திகளால் கட்டியெழுப்பப்படும் எதிர்மறையான அரசியற்கருத்துப்படிமத்தை எதிர்கொள்வதும் ஆகும்.

காலங்காலமாக மானிடத்தின் வரலாற்றுப் பேரியக்கத்தில் பொருளாதார மற்றும் இராணுவ வலுமிக்க அரசுகள், பிற இனங்கள் மற்றும் தேசங்கள் மீது பல்வேறு மறைமுக அடக்குமுறைகளை, சூழ்ச்சிவலைகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றன. இன்று, எமது தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் எமது மக்களினதும் இளம் தலைமுறையினதும் சிந்தனையையும், அவர்களது மனவுலகையும்  இவ்வரசுகள் தவறான வரலாற்றுப் புரிதல்களை, சிந்தனைக் கருத்துப்படிமங்களை உருவாக்கிக் கொள்ளுவதன் ஊடாக, தமது அதிகார வலைப்பின்னலில் அகப்படுத்திக்கொள்ளும் முன்முயற்சிகளில் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றன. எமது வரலாறு தொடர்பாகவும் தேசம் குறித்தும் தேசிய விடுதலைப்போராட்டம் குறித்தும் இவ்வதிகாரச்சக்திகள், தமது நலன்களுக்குச் சாதகமான கருத்துருவாக்கங்களைப் பல்வேறு வழிகளில் கட்டமைக்கின்றன. அரசுகளின் பல்வேறு கட்டமைப்புகளின் நலன்களை அரவணைத்துச் செல்லும் ஊடகங்கள், பல்கலைக்கழக கல்விக்குமுகாயங்கள், புலமைசார் துறைகள், சிந்தனைக்குழாம்கள், அரசு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் என இவ்வலைப்பின்னல் பரந்து விரிகின்றது.

எடுத்துக்காட்டாக, 2002 ஆம் ஆண்டில் தமிழர் தேசத்துக்கும் சிங்கள தேசத்துக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையினைத் தொடர்ந்து,  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துடன் சர்வதேச சமூகம் நிகழ்த்தியிருந்த சந்திப்புகளும் பேச்சுகளும் விடுதலைப் புலிகளின் இராசதந்திர முன்னெடுப்புகளும் மனிதநேய நடவடிக்கைகளும் இக்கருத்துருவாக்கப்படிமத்தில் மறைக்கப்படுகின்றன. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள், சிங்கள அரசுகளுடன் மேற்கொண்டிருந்த அமைதிப்பேச்சுகளும் இராசதந்திர செயற்பாடுகளும் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது திரிபுபடுத்தப்படுகின்றன. இத்தவறான கருத்துப் படிமங்களை எமது வரலாறாக கற்பிதம் செய்யமுற்படும் இச்செயற்பாடுகளையிட்டு நாம், மிகவும் விழிப்புடன் செயலாற்றவேண்டியவர்களாக உள்ளோம்.

எமது விடுதலைப்போராட்டத்தில், எமது மாவீரர்களினதும் எமது மக்களினதும் அளப்பரிய அர்ப்பணிப்புகளால் வளர்த்தெடுக்கப்பட்ட எமது தேசியத்தையும் தேசம் குறித்தான சிந்தனைகளையும் மழுங்கடிப்பது, இக்கருத்துப் போரின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன.  இதன் தொடர்ச்சியாக, எமது விடுதலைப்போராட்டத்தின் மீது பயங்கரவாதம் என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி, தமது தேசியப் பிராந்தியநலன்களை முன்னிறுத்தும் கருத்துப்படிமங்களை பிரதான அரசியல் சமூகத்தளங்களில் ஏற்படுத்துவதுமே இத்தகவற் போரின் முக்கிய நோக்கங்களாகும். இவற்றுக்கு ஆதரவாக, இவர்களின் கட்டுப்பாட்டிலியங்கும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத் தொழிநுட்ப நிறுவனங்கள் துணைநிற்கின்றன. இவற்றின் வெளிப்பாடாகவே தனிநபர்கள் தங்களை முன்னிறுத்தி விடுதலைப்போராட்ட வரலாற்றுச்சிதைப்புகளுடன் திரிபுபடுத்தி இன்று பல படைப்புகளை வெளியிட்டுவருகின்றார்கள். 

தாயகம் தொட்டு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் அர்த்தம் செறிந்த வாழ்வியலின் உயிர்ப்பாக இருப்பது, தேசியம் குறித்தான ஆழமான பற்றுதலும் நாம் தமிழர்கள் என்ற ஒன்றுபட்ட கூட்டுணர்வுமாகும். இக் கூட்டுணர்வானது, நாம் அனுபவித்த கூட்டு வலிகளாலும் தமிழீழம் என்ற இலட்சியத்தாலும் பிணைக்கப்பட்டுள்ளது. தேசங்கள் கடந்து நிற்கும் ஒன்றுபட்ட இவ்வுணர்வின் முக்கிய இணைப்பாக, எமது இளம் தலைமுறையினர் உள்ளனர். இன்று அவர்கள், பல்வேறு அரசியல், குமுகாய, இராசதந்திர தளங்களில், பல்வேறு வழிகளில் தமது அரசியல் உரிமைகளுக்கான இக்கூட்டுணர்வினை வெளிப்படுத்தி வருகின்றார்கள். பல்வேறு புலமைசார் தளங்களில் முன்னெடுக்கப்படும் கருத்துப்படிமங்கள், பரப்புரைகள், திரிபுபடுத்தல்களைத் தாண்டி அவர்கள், உண்மையை அறிந்துகொள்வற்கான தேடலினை ஊக்குவித்து வளர்த்தெடுக்கப்படவேண்டும். ஓர் அரசற்ற தேசிய இனமாக உலகெங்கும் பரந்து வாழும் நாம், எமக்கானதோர் தாயகம் உண்டு என்பதை உயிர்ப்புடன் நினைவில் நிறுத்தி, சர்வதேச உறவுகளில் காத்திரமான வகிபாகத்தைக் கொண்ட மக்களினமாக மாற்றம் பெறுவது முக்கியமானது.   

இன்று நாம் பல்வேறு தேசங்களில், பல்வேறு அறிவுசார் துறைகளில் மேலோங்கியவர்களாக வளர்ந்துவருகின்றோம். அதேவேளை தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை எனும் எமது இலக்கினை அடைவதற்கான வழிவரைபடத்தை பூகோள, புவிசார் அரசியலின் அடிப்படையில் சிந்திக்கவேண்டிய சர்வதேச அரசியலின் ஒரு முக்கிய திருப்புமுனையில் நிற்கின்றோம். இன்று, பல்துருவ அதிகார மையங்களாக சர்வதேச அரசியல் தோற்றம் பெற்று நிற்கின்றது. இப் புவிசார் அரசியலில், சக்திமிக்க சர்வதேசப் பிராந்திய அரசுகளின் நலன்களையும் இந்து பசுபிக் பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ள வலுச்சமநிலைப்போட்டியின் பன்முகத்தன்மைகளையும் அதன் பரிமாணங்களையும் அறிந்து நாம், இப்பூகோள அரசியலில் வலுமிக்கதோர் அரசியல், பொருளாதாரச் சக்தியாக உருவாகத் தவறுமிடத்தில் வெறும் அரசியற் சதுரங்கக் காய்களாகவே பிற சர்வதேசசக்திகளால் அவர்களின் நலன்களினடிப்படையில் கையாளப்படும் மக்களினமாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

தமிழினத்தின் மீதான தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குப்  பொறுப்புக்கூறல் தொட்டு, எமது சுயநிர்ணய உரிமைக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் புவிசார் அரசியலின் நலன்களை முன்னிறுத்தி, பிராந்திய சர்வதேச அரசுகளால் கையாளப்பட்டுவருகின்றது. அத்தோடு, முடிவின்றித் தொடரும் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான நிகழ்வுகள் வரை, அனைத்தும் பிராந்திய சர்வதேசசக்திகளின் புவிசார் நலனடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே அரங்கேறிவருகின்றன. தாயகத்தில் தமிழ் அரசியற்கட்சிகள் பல, இப்புவிசார் நலன்களை முதன்மைப்படுத்திய, தமிழ் மக்களுக்கான பேரம்பேசுகின்ற வாய்ப்புகள் பலவற்றை வெளிச்சக்திகளின் நிகழ்ச்சிநிரல்களுக்கு உட்பட்டு இழந்து நிற்கின்றன. 

இவ்வாறானதோர் சூழமைவில், சர்வதேச உறவில் நாம் எவரையும்; கசப்புணர்வுடனோ பகையுணர்வுடனோ நோக்கவில்லை. காலங்காலமாக, தேசங்களின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் போர்களையும் அழிவுகளையும் சந்தித்தே இவ்வுலக ஒழுங்கு நகர்ந்து செல்கிறது. சிறு அரசுகளிலிருந்து வல்லரசுகள் மற்றும் பிராந்திய சக்திகள் வரை தமது இருப்பையும் பாதுகாப்பையும் மையப்படுத்திய பொருளாதார, புவிசார் நலன்களினடிப்படையிலேயே செயலாற்றிவருகின்றன. ஆகையால், எமது தாயகம் அமைந்துள்ள இந்து சமுத்திரப்பிராந்தியத்தில், இந்திய அரசின் நலன்களும் பாதுகாப்பும் பேணப்பட வேண்டும் என்பது தெளிவானதோர் உண்மை. ஆனால், இலங்கைத் தீவில் விட்டுக்கொடுக்க முடியாத எமது அரசியல் உரிமைகளான சுயநிர்ணய உரிமையும் தேசமும் ஏற்றுக்கொள்ளப்;படுவதன் மூலமே, தெற்காசிய இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைதி நிலவமுடியுமென உறுதியாக நம்புகின்றோம். எமது மக்களின் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் அதிமுக்கிய தமிழர் நலன்களாக அமைந்துள்ளன. தமிழ் மக்களின் இந்நலன்கள் பேணப்படும் வகையில் நாம், அனைத்துப் பிராந்திய சர்வதேச அரசுகளுடனும் நல்லுறவைப் பேணுவதையே விரும்பிநிற்கின்றோம். இரு தேசங்கள் கொண்ட இலங்கைத்தீவில்,  தமிழர் ஒரு தேசிய இனம் என்ற உண்மை ஏற்கப்படாமல் சிங்களதேசம், தமிழினத்தை அடக்க முற்படும் வரைக்கும் இத்தீவானது இந்துசமுத்திரத்தின் கண்ணீர்த்துளியாகவே இருக்கப்போகின்றது.

அன்பார்ந்த உறவுகளே!

எம் தாயகத்தினை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள ஆட்சியாளர்களின் ஊழல்களாலும் எம்மீதான தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பினாலும் சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்குவாரத்தினாலும் இலங்கைத்தீவிலுள்ள இரு தேசிய இனங்களும் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கே மிகவும் சிரமப்படுகின்றார்கள்.  ஆயுதப்போராட்டக் காலத்தில் சிங்கள இனவாத அரசு, எம்மீது நடைமுறைப்படுத்திய கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு முகங்கொடுத்து மீண்டுவந்தவர்கள் என்ற வரலாற்றுக்குரியவர்கள் நாங்கள். அதேபோல், இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிற்கும் எம்மால் தீர்வுகாணமுடியும். சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், விவசாய நிலங்களை எம்மிடமுள்ள வளங்களைப் பயன்படுத்தி விளைநிலங்களாக மாற்றுதல் போன்றவற்றின் மூலம் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளமுடியும்.

இதேவேளையில், சிங்களப்பேரினவாத அரசின் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு தொடர்ந்தவண்ணமுள்ளது. எமது இளையோர் மத்தியில் திட்டமிட்டமுறையில் போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவித்து, வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்கி குமுகாயச்சீரழிவுக்குள் எமது தலைமுறையைத் தள்ளிவிடுகின்றது. அதேவேளை, இவ் ஆபத்தான அமைதியற்ற நிலையைத் தொடர்ந்தும் பேணுவதன் மூலம், எமது மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதை ஊக்குவித்து, எமது தாயகத்தில் தமிழ்மக்களின் குடிப்பரம்பலைக் குறைத்து  பௌத்த சிங்களப்பேரினவாத அரசானது சிங்களக் குடிப்பரம்பலைத் திட்டமிட்டவகையில் அதிகரித்துவருகின்றது. 

எமது இனத்தின் அடிமைத்தனத்தினை உடைத்து அழிவிலிருந்து காப்பாற்றவேண்டிய வரலாற்றுக் கடமை, நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. சிங்களப்பேரினவாத அரசின் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு மத்தியிலும்; தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி எமது மக்கள், தன்னெழுச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள். இவ் அறவழிப் போராட்டங்களை, இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களைக் கொண்டு சிங்களப் பேரினவாத அரசு அடக்கிவருவதுடன், தமிழின விரோதிகளைப் பாவித்துக் குழப்பியும் வருகின்றது.  இந்நேரத்தில், கொள்கைத்தெளிவுடன் சலுகைகளுக்கு விலைபோகாதவர்களை மக்கள் இனங்கண்டு, அவர்களுடன் இணைந்துசெயற்படுவதன் மூலமே எமது விடுதலையினை வென்றெடுக்கமுடியும் என்பதை உணர்ந்து செயற்படுவோம்.

அன்பார்ந்த தமிழக உறவுகளே!

தமிழ்த்தேசியம், தமிழ்மொழிக்காப்பு, குமுகாயநீதிக்கான போராட்டம், அடக்குமுறை எதிர்ப்பு என்பவற்றில் ஆழமான வரலாற்றைக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் காத்திரமான பின்தளமாக நின்று, எம்மை  வளர்த்துவிட்ட காலத்திலிருந்து இன்றுவரை, எமது மக்களின் உரிமைப்போராட்டத்துக்கான உந்துசக்தியாக இருந்துவருகின்றீர்கள்.

எமது தாயகத்தில், கட்டமைப்புசார் தமிழின அழிப்பு இன்றும் மிகவேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு எதிராகவும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு, இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகத் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறு வேண்டிநிற்கின்றோம். அத்துடன், மாவீரர்களின் ஈகங்களாலும் மக்களின் அர்ப்பணிப்புகளாலும் உருவான எமது விடுதலை வரலாற்றைச் சிதைத்துத் திரிபுபடுத்தி வெளிவரும் படைப்புகளுக்கு  வெளிப்படையாக எதிர்ப்புத்தெரிவிக்குமாறு  அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதோடு,   எமது தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கு எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உந்துசக்தியாக நின்று, அன்றும் இன்றும் பலம் கொடுத்து, பங்களிப்புச்செய்து  தமிழீழமே எமது இலக்கு என்ற உறுதியுடன் பயணித்துக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களையும்; மக்களையும் மற்றும் இளையதலைமுறையினரையும்  பாராட்டுவதுடன் உங்கள் அனைவரையும் அன்புரிமையுடன் இறுகப்பற்றிக் கொள்கின்றோம்.

தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளைப் புறந்தள்ளி, தேசியத்தலைவரின் சிந்தனையை மறுதலித்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுகளை மழுங்கடித்து,  புதிய பலகுழுக்கள் உருவாக்கப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க நினைக்கும் தமிழின விரோதிகளை இனங்கண்டுகொள்வதுடன் அவர்களை நிராகரித்து, தமிழீழ விடுதலைநோக்கி விழிப்புடன் பயணிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இல்லாதொழித்து, தமிழினத்தை கூறுபோட நினைக்கும் சிங்களப் பேரினவாதத்திற்கும் ஏனைய சக்திகளுக்கும் சோரம் போய், பல தீர்வுகள் என்ற போர்வையில் ஒற்றையாட்சிக்குள் எமது விடுதலையை முடக்கி, தமிழினத்தை தொடர்ந்தும் அடக்கியாள இக்காலத்தில் பலர் துணைநிற்கின்றார்கள் என்பதனைப் புரிந்துகொண்டு செயற்படுதல் முக்கியமாகும். பொருளாதாரத்தில் சரிவு கண்டுவரும் சிறிலங்காவைத் தூக்கிநிறுத்த, புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு வலைவிரித்து, அவர்களை வைத்துப் பாரிய சதிமுயற்சிக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ரணில் அரசின் நரித்தனமான சூழ்ச்சிவலைக்குள் எமது புலம்பெயர் உறவுகள்; வீழ்ந்துவிடாமல் இருப்பதும் தமிழினத்தின் இருப்பிற்கு முக்கியமாகும். அதேவேளை, தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மக்கள்போராட்டங்களைத் தொடர்வதுடன், சர்வதேச இராசதந்திர உறவுகளையும் வளர்த்தெடுத்து தமிழீழ விடுதலைக்காக மாவீரர்கள் காட்டியவழியில் உறுதியுடன் தொடர்ந்தும் போராடுவோம்.

‘‘நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்” என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றின் வழிநின்று தமிழீழ விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகத் தொடர்ந்தும் போராடுவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

உங்கள் கவனத்திற்கு