தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022-பலெர்மோ

“தமீழீழம்” என்ற உயரிய இலட்சியத்திற்காக தங்கள் உன்னத உயிர்களை ஆகுதியாக்கிய மானமறவர்களை நினைவுகூர்ந்து வணங்கும் புனிதநாளான தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2022 இத்தாலி பலெர்மோவில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், இத்தாலியத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பொதுச்சுடரேற்றல், ஈகச்சுடரேற்றல், முதல் மாவீரர் லெப். கேணல் சங்கர் அவர்களுக்கான மலர்மாலை அணிவித்தல் என்பன இடம்பெற்றன. அவற்றைத் தொடர்ந்து துயிலுமில்லக் காட்சிகள் வெண்திரையில் ஒளிபரப்பப்பட்டது. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை உணர்வெழுச்சியுடன் வணங்கிநிற்கும் அக் காட்சிகள் வார்த்தைகளுக்குள் அடங்காத உன்னத உணர்வலைகளின் தரிசனமாக அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கடந்தாகால மாவீரர்நாள் சிறப்புரை ஒளிபரப்பப்பட்டது.
மண்டபத்தினை அலங்கரித்துக்கொண்டிருந்த வீரவேங்கைகளின் திருவுருவப் படங்களிற்கு பெருந்திரளான மக்கள் மலர்வணக்கம் செலுத்தியவாறிருந்தனர்.

தமிழர்நம் வீரவரலாற்றையும் மாவீர்ரகளது தியாகங்களையும் நினைவுகூரும் எழுச்சி கானங்கள், திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் விடுதலை நடனங்கள் என்பன நிகழ்விற்குச் சிறப்புச் சேர்த்தன. அனைத்துலகச் செயலகத்தின் கொள்கைப் பிரகடனம் ஒலிபரப்பப்பட்டதையடுத்து, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக் கழகம் நடாத்திய தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மனனப்போட்டி 2022இல் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் உரை இடம்பெற்றது.

நிகழ்வுகளின் நிறைவாக தமிழீழத் தேசியக் கொடியும் இத்தாலிய கொடியும் இறக்கப்பட்டு,  “நம்புங்கள் தமிழீழம்” பாடல் இசைக்கப்பட்டு, உறுதிமொழி உச்சரிக்கப்பட்டது.
ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் மரிக்காது, மறக்காது, மறையாதுவாழும் மாவீரர்களின் மகத்தான கனவுகளை நனவாக்குவோம் என்ற உறுதியோடும் சுதந்திர தமிழீழம் ஒருநாள் மலரும் என்ற நம்பிக்கையோடும் எழுச்சிபூர்வமாக நிகழ்வுகள் நிறைவுற்றது.

உங்கள் கவனத்திற்கு