தமிழ்ப் பெண்ணினத்தின் வீர இலக்கணம் 2ம் லெப். மாலதி

சகாயசீலி பேதுருப்பிள்ளை எனும் இயற்பெயரைக் கொண்ட 2ம் லெப். மாலதி 04/01/1967 அன்று மன்னாரில் பிறந்தார்.


பெண்கள், அடிமைக் கூண்டுக்குள் வாழ்ந்த காலக்கட்டத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களின் ஆளுமையை சமூகத்திற்கு எடுத்துரைத்து அடிமைப்பட்டிருந்த பெண்களை விழிப்படையச் செய்தார் எமது தேசியத் தலைவர். பெண் தலை நிமிர்ந்தால் ஆபத்து என்று பெண்ணை இழிவாகவும், அடக்கியும் வைத்திருந்த அந்த கடுமையான காலப்பகுதியில் சிறு வயதிலிருந்தே தற்துணிவும், தன்னம்பிக்கையும் மிகுந்த வீரப் பெண்ணாகத் திகழ்ந்தார் மாலதி. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் அதிமுக்கிய பங்கை வகுத்த பெண் விடுதலையை முழு மனதோடு நேசித்த மாலதி அவர்கள், விடுதலைப் பயணத்தில் இணைந்து சாதனைப் பெண்ணாக உருவானார். போர் முனையிலும், அரசியற் தளத்திலும் சிறப்பாக கடமையாற்றினார்.

இந்திய அமைதிப்படை தாயகத்தில் ஊடுருவிய காலக்கட்டத்தில் மாலதி தனது சக தோழிகளுடன் கோப்பாய் கிறேசற்சந்தியில் ஊர்திகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத் தருணத்தில் தான் இந்திய இராணுவத்தினருடனான மோதல் ஆரம்பித்தது. இராணுவத்தினருக்கு மிகவும் அண்மையில் நின்று போர் நடாத்திய மாலதி விழுப்புண்ணடைந்த நிலையிலும் தொடர்ந்து களமாடிய மாலதி, தான் உயிருக்கு மேலாக நேசித்த ஆயுதம் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” என தனது தோழியிடம் ஆயுதத்தை கையளித்துவிட்டு கழுத்தில் தொங்கிய சயனைட்டை அருந்தி 10/10/1987 அன்று வீரகாவியம் படைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரவரலாறாகிய முதற் பெண் மாவீரரே 2ம் லெப். மாலதி ஆவார்.

2ம் லெப். மாலதி அவர்களின் வீரம் செறிந்த நினைவுடன் அவரின் பெயர் கொண்ட மாலதிப் படையணி தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது. பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து போர்முனையில் மட்டுமல்லமால் அரசியல், மருத்துவம், ஊடகம் எனும் வெவ்வேறு களங்களில் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதன் தலைவரின் உன்னத சிந்தனைக்கு அமைவாக எமது பெண்கள் வளர்ந்தார்கள், சாதனைப் படைத்தார்கள். இவ்வாறு வீரப்பெண்கள் வாழ்ந்து வீரம் பதித்த மண்ணில் இன்று எமது ஈழத்தமிழ்ப் பெண்கள் அனைத்து சவால்களையும் தாண்டி, காலத்தின் சூழ்ச்சிகளை எதிர்த்து தமது இருப்பிற்காகவும், எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள். சிங்கள இனவாத அரசால் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக நீதி கேட்டு ஓயாமல் குரல் ஓங்குகிறார்கள்.

பெண் அடிமைத்தனம் ஒழிந்து பெண் விடுதலை எங்கும் தலைநிமிர்ந்து பெண் என்றால் படையும் நடுங்கும் என்ற சூழலைப் படைத்தவர்கள் எமது ஈழப் புதல்விகள். 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து வரும் நாம் பெண் விடுதலையை உலகிற்கு இன்னும் எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பெண் விடுதலைக்கு அடையாளமானவர்கள் எமது தமிழ்ப் பெண்கள். எமது அடுத்தச் சந்ததியினரை நகர்த்த வேண்டிய தலையாய கடமையை எமது தேச நாயகிகள் எமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அக் கடைமைய மனதார ஏற்று தேச விடுதலை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்து உலகெங்கும் தமிழ்ப் பெண்ணினத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சாதனைகள் படைப்போம் என இந்நாளில் சபதம் எடுத்துக் கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உங்கள் கவனத்திற்கு