வேர்களைத் தேடும் விழுதுகள் – காரைநகர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்று காரைநகர் ஆகும். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவு. இவ்வூரில் ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. இதில் 30% நிலத்தில் நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது தற்போதைய மக்கள் தொகை 11,000 ஆக உள்ளது.. இந்த ஊரில் ஆறுகள் மற்றும் ஏரிகள் இருப்பதில்லை. ஊருக்கு அருகில் வண்டலை மற்றும் கலைப்பூமி  ஊர்கள் உள்ளன. இங்கே வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன.

பிரித்தானியரின் ஆட்சியில் 1869 ஆம் ஆண்டில் அரசாங்க அதிபராக இருந்த துவைனம் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும் ஒன்பது பாலங்களும் அமைத்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தார். இவ்விணைப்புத் தெருவின் நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.

மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. அது நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா கடற்கரையும்  உள்ளது. அங்கு பல சைவக்கோவில்கள் உள்ளன. அவை வைரவர்கோவில், ஐயனார்கோவில், கந்தசுவாமிகோவில், முருகன்கோவில், மணக்காடுமுத்துமாரிஅம்மன்கோவில், மருதடிவிநாயகர்கோவில் போன்ற கோவில்கள் ஆகும்.

19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே அமைக்கப்பட்ட காரைநகர் சிவன் கோவில்ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படுகிறது. சிதம்பரத்திலே நடைபெறுவது போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் இந்த திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுகிறது.

தினமும் வெளிநாட்டு  சுற்றுலாப் பயணிகளையும் தென்னிலங்கை மக்களையும் கவா்ந்து மக்கள் வந்துபோகும் பிரதான சுற்றுலா இடமாக விளங்கும் கசூரினா கடற்கரை பிரபலமானதற்கு காரணங்கள் இங்கு அளவான அலையுடன் சரிவு குறைவான கடல் மண்ணும் அமைந்திருப்பதால் கடலில் குளிப்பவா்களுக்கு இது இதமான அனுபவமாக அமைந்துள்ளது.

2004 சுனாமியின் போது இந்த, கடற்கரை பிரதேசம் முற்றாக நீரால் நிரம்பிய போதும் யாருக்கும் சேதங்கள் இல்லை.. கசூரினா என்பதற்கு சவுக்கு மரம் என்ற அா்த்தம் இங்கு சவுக்குமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப் பெயர் ஏற்பட்டது.

காரைநகர் என்னும் குக்கிராமத்தில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிகள் கல்வி பற்றிய சிந்தனை எழுச்சி பெற்ற காலமாகும். இக்காலத்தில் இங்கு தமிழ்மொழி உயர் வகுப்புக்கள் வரை கல்வி போதிக்கும் பாடசாலைகளாக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை, சைவப்பிரகாச வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் மட்டுமே இயங்கிவந்தன. ஆங்கில மொழி கற்பிக்க பாடசாலைகள் எதுவும் இயங்கி வரவில்லை. இக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த திரு. கந்தப்பர் இலட்சுமணபிள்ளை, திரு. சிதம்பிரப்பிள்ளை கந்தப்பு, திரு. மு. கோவிந்தப்பிள்ளை ஆகியோரின் முயற்சியினால் திரு. மு. கோவிந்தப்பிள்ளை அவர்களது சொந்த நிலத்தில் 1888 ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் பெரியார் முத்து சயம்பு அவர்களால் ஒரு கிடுகு கொட்டகையில் ”இந்து ஆங்கிலப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்”.

இப்பாடசாலையில் பெரியார் சயம்பு அவர்கள் கலங்கரை விளக்கமாக நின்று மாணவர்களை நல்வழிப்படுத்தியதுடன் ஆசிரியராகவும் தலமை ஆசிரியராகவும் செயற்பட்டார். இந்து ஆங்கில வித்தியாசாலை காலப்போக்கில் திருஞானசம்மந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பாடசாலையின் வளர்ச்சியுடன் மாணவர் தொகையும் அதிகரித்து வந்தது. மாணவர்தொகை அதிகரித்து வந்ததினால் பாடசாலையின் நிர்வாகியாக திரு. வி. காசிப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டார். இந்து ஆங்கில வித்தியாசாலை உயர் வித்தியாசாலையாகி காரைநகர் இந்துக்கல்லூரி என பெயர்மாற்றம் பெற்றது.

காரைநகர் மண்ணில் பிறந்து தமிழீழ இலட்சியத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து  விதையாகிப் போன மாவீரர்கள்:

  • மேஜர் சுருளி (நாயகன்) (சின்னத்துரை சத்தியானந்தம்)
  • மேஜர் முத்துமணி (குமாரசாமி சிவகாவேரி) – கடற்கரும்புலி
  • கப்டன் கலையரசன்/ ஜெயராஜ் (கந்தசாமி கோபாலகிருஸ்ணன்) – கடற்கரும்புலி
  • கப்டன் அருள்ஜோதி (முத்துலிங்கம் சியாமளா) – கடற்கரும்புலி (எனது அம்மாவின்  பள்ளித் தோழி)

எனது பெற்றோர் பிறந்த ஊரின்  வேர்களைத் தேடும் விழுதாக இருப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

நன்றி

சுதாகரன் அபிநயா 
ஆண்டு 10                                              
செனோவா திலீபன் தமிழ்ச்சோலை இத்தாலி

உங்கள் கவனத்திற்கு