இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம்

இரண்டாம் உலகப் போரின்போது நாசி வதை முகாம்களில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூருவதற்காக 60/7 தீர்மானத்துடன் நவம்பர் 1, 2005 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் இந்நாளிற்கான நினைவு தினம் நிறுவப்பட்டது. 1945 ஆம் ஆண்டு செம்படையினர், ஜெர்மனியின் திசையில் Vistola-Oder தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், முதன்முறையாக Auschwitz வதை முகாமை கண்டுபிடித்து அதற்குள் நுழைந்து அதனை விடுவித்தனர். Auschwitz கண்டுபிடித்த அந் நாளையே இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம் என பிரகடனப்படுத்தப்பட்டது.

செம்படையினர் வதை முகாமுக்குள் நுழைந்தபோது, ​​மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் சுமார் 7,000 கைதிகளைக் கண்டறிந்தார்கள். மேலும் அங்கு இல்லாத பிற நபர்களுக்குச் சொந்தமான காலணிகள், உடைகள் மற்றும் பிற சித்திரவதைக் கருவிகளும் பொருட்களும் இருந்தன. செம்படையினரின் வருகைக்கு பத்து நாட்களுக்கு முன்பு, இன்னும் உயிருடன் மற்றும் உடல்நலம் பெரிதாக பாதிக்கப்படாத அனைத்து கைதிகளையும் சாவு நடை எனும் ஒரு நீண்ட கால் பயணத்தில் நாசிக்கள் அழைத்துச் சென்றனர். அந்த கைதிகளில் பலர் பயணத்தின் போதே பரிதாபமான முறையில் இறந்தனர்.

Auschwitzன் கண்டுபிடிப்பு மற்றும் உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்கள் மூலம் நாசிப் படையினர் மேற்கொண்ட யூதர்கள் இனப்படுகொலையின் பயங்கரத்தையும் வதை முகாமில் பயன்படுத்தப்பட்ட சித்திரவதை மற்றும் அழிப்பு கருவிகளையும் உலகிற்கு முதன்முறையாக, முழுமையாக வெளிப்படுத்தின. உலகத்தையே உலுப்பிய இனப்படுகொலையின் சின்னமாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாட்சியமாக 1947ல் வெளியிடப்பட்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட Anna Frank எனும் சிறுமியின் நாட்குறிப்பு ஆகும்.

இவர் 1929ஆம் ஆண்டு ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் (Frankfurt) ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். 1933ல் Hitler ஆட்சிக்கு வந்ததை அடுத்து, யூதர்கள் மீதான நாசி வெறுப்பின் சூழலிலிருந்து தப்பிக்க, Anna Frank தனது குடும்பத்தினருடன் Hollandல் தஞ்சம் புகுந்தார். 1930 களின் இறுதியிலும் மற்றும் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்திற்கு இடையிலும், Hitler ஐரோப்பா முழுவதும் யூதர்களை நாடுகடத்துதல் மற்றும் அழித்தொழிக்கும் கொள்கையை உருவாக்கியதன் விளைவாக, இனச் சட்டங்கள் மூலம், அவர்கள் துன்புறுத்தப்பட்டனர், அவர்களின் உடைமைகளை அகற்றினர், வதை முகாம்களுக்கு நாடு கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். 1944ல் Anna Frankம் அவரது குடும்பத்தினரும் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்த நாசிப் படையினர் அவர்களை கைது செய்தார்கள். Auschwitz மற்றும் பின்னர் Bergen-Belsen வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட Anna Frank அங்கு 1945 இல் இறந்தார்.

பதுங்கியிருந்த நாட்களில் அவர் வைத்திருந்த நாட்குறிப்பில், ஒரு நண்பருக்கு எழுதும் கடிதத்தின் வடிவத்தில், அந்த ஆண்டுகளில் யூதர்கள் அனுபவித்த துன்பங்களைப் பற்றி எழுதி வந்தார். “உலகம் மெல்ல மெல்ல பாலைவனமாக மாறுவதை நான் காண்கிறேன்” என அவர் தனது நாட்குறிப்பில் அந்நாட்களின் கொடூரத்தை குறிப்பிட்டிருந்தார். அந்த நிலையிலும் அவர் நம்பிக்கையை தளர விடாது என்றோ ஒரு நாள் விடிவு கிடைத்து விடும் என முழு மனதுடன் நம்பினார். “நான் வானத்தைப் பார்க்கும்போது எல்லாம் மீண்டும் நன்றாக மாறும் என்று நினைக்கிறேன். இவ் இரக்கமற்ற கடினத்தன்மை கூட நின்றுவிடும். ஒழுங்கு, அமைதி, நிம்மதி திரும்பும்” எனும் அவர் எழுதிவிட்டுச் சென்ற வரிகள் மூலம் அவரின் ஆணித்திரமான நம்பிக்கை வெளிவருகிறது. இவ்வாறு, இருபதாம் நூற்றாண்டில் நடந்தேறிய இனவழிப்பை, யூதர்கள் அனுபவித்த சொல்லொணாத் துன்பங்களை உலகிற்கு கொண்டு வரும் சாட்சியங்களும் வாக்குமூலங்களும் காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பதிவுகள்.

யூத மக்களின் இனப்படுகொலை போன்ற கொடூரமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்கின்ற உயரிய சிந்தனையில் இத் தினம் பிரகடனப்படடுத்தப்பட்டது. இது ஒரு நினைவு தினமாக மட்டுமல்லாமல் அனைவரையும் சிந்திக்க வைக்கும் நாளாக அமைய வேண்டும். ஏனென்றால், யூதர்களின் இனப்படுகொலை நடந்தேறி ஒரு நூற்றாண்டு கடந்த நிலையிலும், இன்று இருபத்தொன்றாம் நூற்றாண்டில், சர்வதேசத்தின் தெளிவான பார்வையின் கீழ் நடந்தேறிக்கொண்டு இருக்கின்றது தமிழ் மக்களின் இனப்படுகொலை. 1948ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இழைத்த பெரும் தவறின் விளைவாக தாயகத்தில் எமது தமிழ் மக்கள், அன்றிலிருந்து இன்று வரை, பெரும் சித்திரவதைகளுக்கும் இனவழிப்புக்கும் உள்ளாகி வருவதை உலகம் மறுக்குமா, மறக்குமா? பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து, உறவுகளைத் தொலைத்து, சிறிலங்கா இனவாத அரசின் ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் இனவெறிக்கும் உள்ளாகி வரும் எமது தமிழ் மக்களின் அவலக்குரல்களை சர்வதேசம் செவியெடுக்காமல் இருப்பதை தமிழினம் மன்னிக்குமா?

வரலாறு எமக்கு எத்தகைய பாடத்தை கற்பித்தாலும் இன்றும் உலகில் ஒரு இனவழிப்பு நடைபெற்று வருகின்றது என்றால் அது மனிதகுலத்தின் பின்னடைவையும் இவ்வாறான கொடூரங்களைத் தடுப்பதற்கான அதன் இயலாமையையுமே முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. காலங்கள் உருண்டோடிச் செல்கின்றன. ஆனால் எமது தமிழினம் அனுபவிக்கும் அநீதிகளுக்கோ இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது ஏற்க முடியாத உண்மை. அந்த நீதிக்கான பயணத்தில் உலகத் தமிழினம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே இன்று காலத்தின் தேவை ஆகும் என்பதை உணர்ந்து அதற்காக அயராமல் போராடுவோம் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

உங்கள் கவனத்திற்கு