கேணல் கிட்டுவின் வீரகாவியம்

“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” – தமிழீழத் தேசியத் தலைவர்

ஈழ விடுதலைக்காகப் போராடிய  விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் கேணல் கிட்டு என அழைக்கப்பட்டும் சதாசிவம் கிருஷ்ணகுமார்.
இவர் சனவரி 2, 1960ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவருடைய தந்தையார் சதாசிவம், தாயார் ராஜலட்சுமி. கிட்டு அவர்கள் சிந்தியா என்ற மருத்துவக் கல்வி மாணவியைத் திருமணம் செய்தார். தனது 18வது அகவையில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். ஆரம்பத்தில் செங்கிட்டு எனும் பெயரைக் கொண்டு பின்னர் தமிழீழ மக்களால் கிட்டு எனச் செல்லமாக அழைக்கப்பட்டார். பெரும் விடுதலை வேட்கையைக் கொண்ட கிட்டு அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவராலேயே போரியல் பயிற்சியைப் பெற்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல சாதனைகளைப் புரிந்தவர் கிட்டு அவர்கள். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் இடம்பெற்ற உமையாள்புரம் தாக்குதலில் தனது G 3 துப்பாக்கியால் தனிமனிதனாக இராணுவ படைக் கவச வண்டிகளைச் சுட்டு, சிங்களப் படையை செயலிழக்கச் செய்தார். தலைவரின் நம்பிக்கையை வென்ற கிட்டு, ஏப்ரல் 1983இல் தாக்குதல் அணிக்கு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணம், கந்தர்மடம், வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், யூலை 23இல் இராணுவ உந்துகள் மீது நடத்தப்பட்ட திருநெல்வேலி கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் இவர் கலந்து கொண்டார். 1985இல் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் வீரச்சாவு அடைந்ததால், யாழ் மாவட்டத் தளபதியாக கிட்டு அவர்கள் நியமிக்கப்பட்டு, வடமாகாணத்திலேயே பெரிய காவல் நிலையமாகிய யாழ். காவல் நிலையம் மீது தாக்கியழித்து, அங்கிருந்து நூற்றுக்கணக்கான ஆயுதங்களையும், ரவைகளையும் கைப்பற்றி எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்ப்படுத்தினார்.

மக்கள் மத்தியில் விடுதலை தாகத்தையும் உணர்வையும் வளர்க்கும் வண்ணம் கிட்டு அவர்கள் மேற்கொண்ட பணிகள் அளப்பெரியவை. தனது மக்கள் மேல் அவர் கொண்ட அதி உயர்ந்த பாசத்தினால் அவர்களின் தேவைகளை நன்கு அறிந்து அதற்காகவே பாடுபட்டு உழைத்தார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் அதீத அக்கறையைக் காட்டினார். இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கும் செயல் வடிவம் கொடுத்து தமிழீழ மக்களால் மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களாலும் போற்றப்பட்டார்.

மார்ச் 1987இல், தேசத்துரோகிகளின் சதியால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலால் அவரது இடது காலை இழந்தார். இத் தருணத்தில் கூட தனது மனவுறுதியை தளரவிடாமல் அதே உறுதியுடனும் வேகத்துடனும் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த நகர்வுகளை முன்னின்று பார்த்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் தனது சிகிசிச்சைக்காக இந்தியாவிற்குச் சென்ற கிட்டு, அவ் ஒப்பந்தத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தையும், இந்திய அரசினால் வெளியிடப்பட்ட போரின் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழர்களின் உண்மையான நிலைப்பாட்டையும், அவர்களின் போராட்ட உண்மைகளைப் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். இதனாலேயே, இந்திய அரசு அவரைச் சிறையில் அடைத்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். தளபதி கிட்டுவை இந்திய அரசு விடுதலை செய்தபின், அவர் கொழும்பிற்கு சிறீலங்கா அரசுடன் பேசச் சென்று, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக  பிரித்தானியாவிற்குச் சென்றார். தாயகத்தில் மேற்கொண்ட பணிகளை அவர் புலம்பெயர் மண்ணிலும் சிறப்பாக மேற்கொண்டார். புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர் மத்தியிலும் விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் வளர்த்தார். இவ்வாறு விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம் எனப் பல்வேறு அமைப்புக்களையும் தொடக்கி வைத்தார்.

1993இல் தளபதி கிட்டுவும் அவருடைய சகத் தோழர்களும் குவேக்கர்சின் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக, எம். வி அகத் என்ற நீருந்தில் தமிழீழத்திற்குச் செல்லும்போது, இந்திய வல்லாதிக்கத்தின் சதிவலைக்குள் சிக்குண்டு, இந்தியக் கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டனர். தன்னிடம் சரணடையும் படியும் மறுத்தால் கப்பல் முழ்கடிக்கப்படும் எனவும் இந்தியக் கடற்படை எச்சரித்தது. ஆனால் அவர்களின் எச்சரிக்கைக்கு அடிபணிந்து சரணடைந்துவிட்டால் தமிழர்கள் மீதும் தமிழர்களுடைய போராட்டம் மீதும் இந்திய அரசு சுலபமாக களங்கம் ஏற்படுத்தும் என்று தெளிவாக புரிந்துகொண்ட தளபதி கிட்டும் அவரது தோழர்களும், நீருந்தை வெடிக்க வைத்து வீரச்சாவு அடைந்தனர். கேணல் கிட்டுவுடன் லெப். கேணல் குட்டிசிறி, மேஜர் மலரவன், கடற்புலிகளான கப்டன் குணசீலன், கப்டன் ஜீவா, கப்டன் றொசான், கப்டன் நாயகன், லெப். தூயவன், லெப். நல்லவன், லெப். அமுதன் ஆகியோர் வங்கக்கடலில் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர்.

தன் உயிருக்கும் மேலாக நேசித்த தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக, தமிழ் மக்களின் அபிலாசைகளை, அவற்றிற்காகப் போராடிய எமது மாவீரர்களின் தியாகங்களை மனதில் நிறுத்தி, இவற்றை உலகிற்கு அறியச் செய்து, தனது வாழ்வையே முழுமூச்சாக அர்ப்பணித்தவர் தளபதி கேணல் கிட்டு. கிட்டு, கிட்டாண்ணா, கிட்டு மாமா என்று எல்லோராலும் பாசத்துடனும் உரிமையுடனும் அழைக்கப்பட்ட அந்த ஒப்பற்ற வீரனை என்றும் எங்கள் மனங்களில் நிறுத்தி, தலைவர் காட்டிய பாதையில் எப்படி அவர் சென்றாரோ அதே போன்று தமிழர்கள் நாமும் எமது விடுதலை வேட்கை தணியாமல் தொடர்ந்தும் போராடுவோம் என கேணல் கிட்டுவின் 29வது நினைவு நாளான இன்று உறுதி எடுத்துக் கொள்வோம்!

உங்கள் கவனத்திற்கு