கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களது 29வது நினைவுதினம்

16/01/1993 அன்று மேற்கு ஐரோப்பிய நாடுகள் தயாரித்துவழங்கிய சமாதானத் திட்டத்தோடு சர்வதேச கடற்பரப்பினூடாக தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தாம் பயணித்துக்கொண்டிருந்த எம்.வி. அகத் கப்பலுக்குத் தீயிட்டு வீரச்சாவை அணைத்துக்கொண்ட கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களது 29வது நினைவுதினம் இன்று.

அசாத்தியமான துணிச்சலும், இயல்பான ஆற்றலும் விடுதலைப் போராளிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கேணல் கிட்டு அவர்களை தனித்தன்மையுடன் வெளிப்படுத்திநின்றது. தமிழீழத் தேசியத் தலைவரால் தளபதியாக, தம்பியாக, உற்ற தோழராக நேசிக்கப்பட்ட கிட்டண்ணாவுடன் லெப். கேணல் குட்டிசிறி, மேஜர் மலரவன், கப்டன் ஜீவா, கப்டன் குணசீலன், கப்டன் நாயகன், கப்டன் றொசான், லெப். அமுதன், லெப். நல்லவன், லெப். தூயவன் ஆகியோரது வீரவணக்க நிகழ்வு இத்தாலி பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது. பொதுச்சுடரேற்றல், ஈகச்சுடரேற்றல், அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன இடம்பெற்றன. இந் நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள், திலீபன் தமிழ்ச்சோலை, மாலதி கலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கக்கடலில் காவியமான வேங்கைகளுக்கு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.

உங்கள் கவனத்திற்கு