சர்வதேச மனித உரிமைகள் தினம்

2ம் உலகப்போரின் பின், 10 டிசம்பர் 1948, பாரிசில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் அறிவிக்கப்பட்டது. மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் என்பது, ஒரு நபரின் உரிமைகளைப் பற்றிய ஒரு அடிப்படை ஆவணமாகும். இது ஒரு முன்னுரை மற்றும் 30 சட்டப்பிரிவுகளைக் கொண்டது. இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட, சிவில், அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை அங்கீகரிக்கின்றன. இவ் ஆவணம் 500க்கு மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது, மேலும் இது உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாகும். இது 58 மாநிலங்களைக் கொண்ட சட்டமன்றத்தால் வாக்களிக்கப்பட்டது. அதில் 48 மாநிலங்கள் ஆதரவாக நின்றன, 8 மாநிலங்கள் வாக்களிக்கவில்லை, 2 மாநிலங்கள் பங்குபெறவில்லை. எந்த நாடும் இதற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நாளில் வெவ்வேறு நாடுகளில், மனித உரிமைகள் சார்ந்த விடயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், கலாச்சார நிகழ்வுகள், கச்சேரிகள் மற்றும் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன. அதுபோல், அந்நாளில் இரண்டு முக்கிய விருதுகளும் வழங்கப்பட்டுகின்றன: 

  • நியூயார்க்கில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான விருது.
  • ஒச்லோவில், ஒற்றுமைக்கான நோபல் விருது. 

மேற்கூறிய பிரகடனத்தை உற்று நோக்கையில் “அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும், கண்ணியத்திலும் உரிமைகளிலும் சமமாகவும் பிறந்தவர்கள். அவர்கள் பகுத்தறிவும் மனசாட்சியும் கொண்டவர்கள் மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் ஒருவருக்கொருவர் செயல்பட வேண்டும்” என பிரகடனத்தின் முதலாவது சட்டப்பிரிவு கூறுகின்றது. இதனைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நாட்டிற்கும் இருக்கின்றது. ஆனால்  இதற்கு அமைவாக நடந்து கொள்கிறதா சிறிலங்கா அரசு? இப் பேரினவாத அரசால், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை பிரகடனம் தொடர்ச்சியாக மீறப்பட்டு தான் வருகின்றது. 

பிரகடனத்தின் சட்டப்பிரிவு 3ன் படி “ஒவ்வொரு மனிதனுக்கு வாழ்வதற்கும், சுதந்திரம் பெறுவதற்கும், அவரவர் வாழ்வின் பாதுகாப்பிற்கும் உரிமை உண்டு”. ஆனால் அன்றாட வாழ்வில் ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பும் சுதந்திரமும் பறிக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை உரிமைகளுக்குக் கூட எமது தமிழ் மக்கள் அவலப்பட வேண்டிய கொடூரமான சூழலுக்குள் தள்ளியுள்ளது சிறிலங்காப் பேரினவாத அரசு. 

பிரகடனத்தின் சட்டப்பிரிவு 5ன் படி “எந்த ஒரு நபரும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது”. எமது தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்வில் சிறிலங்கா அரசால் பல கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 2009ல், போரின் இறுதிக் கட்டங்களில், தமிழர்களை கைது செய்து, அவர்களின் கைகளை பின்னால் கட்டி, கண்களை மறைத்து, நிர்வாணமாக்கி, அவர்களை சிங்கள இராணுவவத்தினர் சுட்டுக் கொலை செய்த கொடூரமான காட்சிகளை Channel 4 தொலைக்காட்சி  ஒளிபரப்பியது உலகமே பார்த்தறிந்த உண்மை. விடுதலைப்புலிகளின் தமிழீழத் தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த இசைப்பிரியாவை கைது செய்து, சித்திரவதைக்குள்ளாக்கி, ஆடைகள் கலைந்த நிலையில் அவரது உயிரைப் பறித்தார்கள் சிங்கள இராணுவத்தினர். 

பிரகடனத்தின் சட்டப்பிரிவு 9ன் படி “எந்த நபரையும் தன்னிச்சையாக கைது செய்யவோ, சிறையில் வைக்கவோ அல்லது நாடு கடத்தவோ கூடாது”. பயங்கரவாதத் தடைச் சட்டம் எனும் சட்டத்தின் கீழ் பல தமிழர்களை சிங்கள இராணுவத்தினர் கைது செய்து வருகின்றார்கள். கைது செய்யப்படுபவர்களின் விபரங்கள் அப்படியே தொலைந்து போகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்டு வலிந்த காணாமல் ஆக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அளப்பெரியது. சொந்த உறவுகளைத் தேடும் முயற்சியில் தமிழ் குடும்பங்கள் தாயகத்தில் பல அறவழிப் போராட்டங்களை இன்று வரை நடாத்தி வருகின்றார்கள். காணாமல் போன உறவினர்கள் மீளக் கிடைப்பார்கள் எனும் நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக துணிவாகவும் உறுதியாகவும் போராடும் எமது தமிழ்க் குடும்பங்களுக்கு கிடைத்த பதில் என்ன? காணாமல் போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதாக நியூயார்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதமர் கோட்டபாய ராஜபக்ச இலகுவாக கூறியுள்ளார். இன்று வருவார்கள் நாளை வருவார்கள் என நம்பிக்கையுடன் வாழும் உறவுகளுக்கு “அவர்களை கொன்று விட்டேன்” என்பதை ஒப்புக்கொண்டு இறப்புச் சான்றிதல்களைத் தான் கைமாறாக கொடுக்க நினைக்கிறது சிறிலங்கா அரசு.

பிரகடனத்தின் சட்டப்பிரிவு 16.3ன் படி “குடும்பமானது சமூகத்தின் இயற்கைக் கருவாகும், மேலும் சமூகம் மற்றும் அரசால் பாதுகாக்கப்படுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது”. சிறிலங்கா அரசால் பல குடும்பங்கள் அழிக்கப்பட்டன, இன்றும் அழிக்கப்பட்டு வருகின்றன.

இறுதியாக பிரகடனத்தின் சட்டப்பிரிவு 17.2ன் படி “எந்த ஒரு தனி மனிதனின் சொத்தும் தன்னிச்சையாக பறிக்க முடியாது”. ஆனால், 1983ல் நடந்தேறிய யூலைக் கலவரத்தில் சரி அதனைத் தொடர்ந்த கலவரங்களிலும் சிறிலங்கா அரசால் தமிழர்களின் பல வீடுகள், கடைகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டன, பறிக்கப்பட்டன.

இவ்வாறு மனித உரிமை மீறல்களில் முக்கிய இடம் வகிக்கும் சிறிலங்கா அரசாங்கம் இன்று வரை இக் குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தால் தண்டிக்கப்படவில்லை என்பதே முழுமையான உண்மை. சமத்துவம், சமாதானம், சுதந்திரம், நம்பிக்கை, செழிமை, நீதி போன்ற உன்னதமான விடயங்களை மையமாகக் கொண்டது சர்வதேச மனித உரிமைகள் தினம். ஆனால் இவை அனைத்துமே மறுக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து, வார்த்தைகளால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து, வாழ்வோ சாவோ என்று அன்றாட வாழ்விற்கு அல்லலுறும் எமது தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதி வழங்கும் வரை, பூமிப்பந்தில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவருமே நீதிக்கான பயணத்தில் ஒன்றிணைய வேண்டும் என்பது இன்றய நாளில் புரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுக் கடமையாகும்.

உங்கள் கவனத்திற்கு