தாய் மண்ணில் விருட்சமாகும் விடுதலை வேட்கை

வாழ்வில் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு, தாயகத்தின் விடிவிற்காய், நெஞ்சில் வீரத்தைப் பாய்த்து, எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலை உளமார ஏற்று, தங்கள் உள்ளம், உடல், உடைமை அனைத்தையும் ஈந்து, உறுதியோடு போராடி, தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்கள் எமது மாவீரர்கள். தாய் மண்ணில் தமிழர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மகத்தான இலட்சியவாதிகள். இவ் இலட்சியப் பயணத்தில் முதல் வித்தான வீரவரலாறு தான் லெப். சங்கர் அவர்கள். செல்வச்சந்திரன் சத்தியநாதன் என்கின்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1982ம் ஆண்டு எதிரியின் கையில் சிக்கிடாமல், வயிற்றில் குண்டு பட்ட காயத்துடன் எந்தத் தலைவனின் சத்திய பாதையில் களமாடினாரோ அதே தலைவனின் மடியில் தனது இறுதி மூச்சை விட்டுச் சென்றார். அவர் வீரவரலாறாகிய அத் தினமே தமிழீழத் தேசிய மாவீரர் நாளாக எமது தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டு 1989ம் ஆண்டு முதலாவது மாவீரர் தினம் இடம்பெற்றது. அதுவரை காலமும் போரில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாளைக் கொண்டாடுவது வழக்கம். வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒரு நாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே மாவீரர் நாள் ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

“எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் என்னும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை கொண்டாட முடிவு எடுத்துள்ளோம். அதாவது எமது போராளிகளை நினைவு கூறும் தினத்தை ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாராணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம் என்பதுடன், வீரச்சாவு அடைந்த எல்லாப் போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக நினைத்து மாவீரர் நாளாக கொண்டாடுகிறோம்” என 1989ல் தேசியத் தலைவர்கள் அவர்கள் தனது முதலாவது உரையில் குறிப்பிட்டிருந்தார். அன்றிலிருந்து, ஒவ்வொரு வருடமும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகவும், எழுச்சிப் பூர்வமாகவும் நவம்பர் 27 அன்று நினைவுகூரப்படும் அதே நாளில், எமது தேசியத் தலைவரின் உரை இடம்பெறும். அவ் உரைக்கு உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருமே ஆவலுடன் காத்திருப்பார்கள்.

மாவீரர் வாரம் ஆரம்பித்ததும் தாயகத்தில் வீதிகளெங்கும் சிவப்பு மஞ்சள் நிறக் கொடிகள் பறக்க விட்டு வீடுகள் தோறும் விடுதலைத் தேசிய கீதங்கள் ஒலிக்கும். பாடசாலைகளில், மாவீரரின் வீரம், ஈகம் பற்றியும், மாவீரர் நாளின் மகிமைப் பற்றியும் மாணவர்களுக்கு ஆசிரியர்களால் விளக்கம் கொடுக்கப்படும். வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு நடுகற்கள் நாட்டப்பட்டு அவர்களுக்கான மரியாதை செலுத்தப்படும். மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி கௌரவிக்கப்படுவார்கள். நவம்பர் 27 அன்று, லெப். சங்கர் அவர்கள் வீரமரணம் அடைந்த நேரம் சரியாக மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடரேற்றல் இடம்பெறும். அதே நேரத்தில் தமிழீழம் எங்கும் அனைத்து ஆலய, தேவாலய மணிகளும், ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்துவார்கள்.

1989 முதல் 2008 வரை தமிழீழத்தின் மிகப் பெரிய உணர்வார்ந்த நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று எமது வீரமறவர்களை நினைவுகூரும் அந்த உன்னத செயற்பாடுகளை முற்றிலும் மறுத்து வருகின்றது சிங்கள இனவாதம். எமது மாவீரர்கள் உறங்கும் புண்ணிய பூமியை அவமதித்து அதனைத் தரமட்டமாக்கி எமது வேங்கைகளின் ஈகத்தை கொச்சப்படித்தியுள்ளது சிங்கள இனவாதம்.

எமக்காக வாழ்ந்து, போராடி, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் அடிப்படை உரிமை கூட தமிழர்களுக்கு இல்லை! தங்கள் பிள்ளைகளை மண்ணின் விடியலுக்காக தற்கொடையாக்கிய பெற்றோர்கள் அவர்களின் வித்துடல் மேல் நின்று குமுறி அழுவதற்கு கூட உரிமை இல்லை! இதுதான் சிங்களத்தின் கோரமுகம். மாவீரர் நாள் ஏற்பாடுகளை முற்றிலும் தடை செய்து வருகின்றது சிங்கள அரசு. தமிழர்களுடைய வரலாறு, போராட்டம் இடம்பெற்றதற்கான அறிகுறி, தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை, தனித் தமிழீழம், தேசியம் என்ற கோரிக்கைகள் இனிலும் உலகப் பந்தில் ஒலிக்க விடக் கூடாது என்று சிங்களத்தின் இனவெறிப் பிடித்த நகர்வுகள் திட்டவட்டமாக தெரிகின்றன. இதன் வெளிப்பாடே கடந்த நாட்களில், இராணுவத்தினரின் பார்வையின் கீழே, ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதானச் சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டது ஆகும்.

சிங்கள அரசும் உலகமும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எமது தேசியத் தலைவர் கண்ணுக்குள்ளே வைத்து காத்த வீரர்களை நாங்கள் மண்ணுக்குள்ளே புதைக்கவில்லை. விதைத்திருக்கின்றோம்! அந்த விதை தான் விருட்சமாகி இன்று வேருன்றி நிற்கின்றது எமது உள்ளங்களில். ஆயிரம் தடைகள், அச்சுறுத்தல்கள், கைதுகளையும் தாண்டி எமது தமிழ் மக்களின் மூச்சில் கலந்துள்ளது எமது வேங்கைகளின் தியாகம். அதை எந்த அரசால் மறுத்துவிட முடியும்? சிங்கள இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், அவர்கள் முன்னிலையிலேயே 2018ஆம் அண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் மாவீரர் நினைவு தூபியை புணரமைத்து ஈழத்தமிழ் மக்கள் பெரும் திரளாகக் திரண்டு எமது வீர வேங்கைகளுக்கான வணக்கத்தினையும், மரியாதையையும் உரிமையுடன் செலுத்தினார்கள்.

பொது இடங்களில் வணக்க நிகழ்வுகள் நடாத்துவதற்கு சிங்கள அரசாங்கம் தடை விதித்த போதிலும், இராணுவத்தினரின் கண்ணெதிரே, வீடுகளில் இருந்தே, சிவப்பு மஞ்சள் கொடிகளை பறக்க விட்டு மாவீரர்கள் விட்டுச் சென்ற இலட்சியத் தீயை மூட்டி வணக்கம் செலுத்தினார்கள் எமது ஈநத்தமிழர்கள்.

“எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம் மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிட முடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது. எம்மக்கள் துன்பச் சிலுவையை சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புகளையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாயிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாயிருக்கிறது” என எமது தேசியத் தலைவர் 2008ம் ஆண்டு நடாத்திய அவரது இறுதி உரையில் குறிப்பிட்டார். அவர் எம்மில், எம்மக்கள் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே இன்று வரை ஈழத்தமிழர்களின் விடுதலைத் தீ அணையாமல் இன்னும் பரவசமாகின்றது. அந்தத் தீயின் பரவசமே இன்று சிங்கள இனவாத அரசுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. பயத்தை ஊட்டுகிறது.

வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். அவர்கள் எமது நெஞ்சங்களில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள். உலகம் தோறும் அவர்களின் வீரகாவியம் ஒலிக்க வேண்டும். “தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்” என தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை 2007ம் ஆண்டின் உரையில் தேசியத் தலைவர் வர்ணித்தார். அதே போன்று, எமது மாவீரர்களின் விடுதலை வேட்கையை விருட்சமாக்கும் இப் புனித நாளில், எவ்விடர் வரிலும், ஈழத்தமிழ் மக்களுக்கு தோளோடு தோள் நின்று எமது வீர நாயகர்களைப் போற்றி வணங்குவோமாக!

உங்கள் கவனத்திற்கு