வேர்களைத் தேடும் விழுதுகள் – திருகோணமலை

தமிழீழத்தின் தலைநகரா(கு)ம் திருகோணமலை

திருகோணமலை ஈழத்தின் இயற்கை வனப்புமிக்க ஓர் எழில்மிகு நகரமாகும். அநுராதபுரம், பொலனறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களை தனது எல்லைகளாகக் கொண்டது. இயற்கையாக மூன்று பக்கங்களிலும் மலையால் சூழப்பட்ட இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலைப் பிரதேசமானது ஆதிகாலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை பிரசித்தம் பெற்றிருந்தமைக்கு  இந்நிலம் தாங்கியுள்ள வரலாற்று எச்சங்களே சான்றாக உள்ளன. தமிழீழத்தின் தலைநகராக விளங்கும் திருகோணமலை நகரம் அரசியல், சமூக, வரலாற்று ரீதியான சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

“தென்கிழக்காசிய மிலேச்சர்களின் உரோமாபுரி” என இந்நகரின் சிறப்பினை ஹரஸ் பாதிரியார் ஏற்றிப் போற்றியுள்ளார்.

திருக்கோணேச்சர ஆலயம் 

திருகோணமலையில் உள்ள வரலாற்று முக்கியம் வாய்ந்த ஆலயங்களில் முதன்மை பெறுவது திருக்கோணேசுரர் ஆலயமே. இந்த ஆலயம் மலைமீது அமைந்திருக்கின்றது. இந்த ஆலயத்தின் தொன்மைகள் அனைத்தும் இக்கோயில் அமைந்திருக்கும் மலையடிவாரத்தில் கடலுடன் முழுமையாகப் புதைந்து காணப்படுகிறது. ”கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந்தாரே” என திருஞானசம்பந்தர் பெருமான்  இந்நகரின் சிறப்பினை வர்ணித்துள்ளார். ”குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே ” என்ற தேவார பாடல் வரிகளும் திருகோணமலையின் அன்றைய பொருளாதார செழிப்பினை எடுத்தோம்புவனவாக உள்ளன.

இராவணன் வெட்டு

திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றை இராவணேசுவரனுடன் தொடர்புபடுத்திக் கூறும் ஒரு புராண வரலாறும் உண்டு. தசக்கிரீவன் தாயாரின் வேண்டுகோளுக்கு அமைய சிவலிங்கம் ஒன்றைப் பெற கைலயங்கிரி சென்றான் என்றும் சிவலிங்கத்தை கொடுத்தருளிய சிவன் “இந்த சிவலிங்கத்தை பூமியில் வைத்தால் அதனை மீண்டும் எடுக்க முடியாது. பூமியில் அதனை பிரதிட்டை செய்து வைப்பவனை பூமியில் வெல்லக்கூடியவர் எவருமிலர்” என்று கூறியதை அறிந்த தேவர்கள் தந்திரம் செய்து லிங்கத்தை பிரதிட்டை செய்யாமல் தடுத்தனர். தனது முயற்சியை கைவிடாத இராவணன் தாயின் ஆசையை நிறைவேற்ற கோணேஸ்வரம் வந்து இறைவனை வேண்டினான் என்றும் சிவலிங்கம் கிடைக்காத கோபத்தால் இராவணன் தனது வாள் கொண்டு கோணமலையை வெட்டினான் என்றும் அதுவே இராவணன் வெட்டு என்று புராண, இதிகாசங்கள் பகருகின்றன.

கன்னியா வெந்நீரூற்றுக்கள்         

இலங்கையை ஆண்ட இராவணன் என்கிற மன்னனால் தனது தாயின் கிரியை நிகழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஏழு கிணறுகளுமே இதுவாகும் என வரலாறு கூறுகின்றது. இந்த ஏழு கிணறுகளும் வெவ்வேறு விதமான வெப்பநிலையை வெளிப்படுத்தும் ஊற்றுகளாக அமைந்துள்ளதுடன் குறுகிய தூர இடைவெளியில் அமைந்துள்ள இவ்வூற்றுக்களின் வெப்பநிலை வேறுபாட்டுக்கான காரணங்கள் இதுவரையிலும் அறிவியல் பூர்வமாகக் கண்டறியப்படவில்லை என்பது பெரும் விந்தையாகும்.

திருகோணமலை கோட்டை (பிரட்ரிக் கோட்டை)

திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ளது திருகோணமலைக் கோட்டை. நகரத்தின் மிக உயரமான இடத்தில் இக் கோட்டை அமைந்துள்ளது. பிரட்ரிக் கோட்டை எனப்படும் திருகோணமலைக் கோட்டை 1623 ஆம் ஆண்டில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒல்லாந்தரும் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஆங்கிலேயர் வசமானது. இவர்கள் கோட்டையை விரிவுபடுத்தி பிரட்ரிக் கோட்டை என்ற பெயரும் சூட்டி  உபயோகித்து வந்துள்ளனர். 16 ஆம் நூற்றாண்டிற்கு உரித்தான ஒரு தமிழ்க் கல்வெட்டு ஒன்று கோட்டைக்கு பிரவேசிக்கும் கதவை அண்மித்த மதிலில் உள்ளது. இக் கல்வெட்டில் பிற்காலத்திலே நடக்கவிருக்கின்ற நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிவித்த தீர்க்க தரிசனப் பாடல் வரிகளும் எழுத்துகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு

இலட்சுமி நாராயணன் ஆலயம்

திருகோணமலை நிலாவெளி ஆறாம் கட்டையில் நிர்மானிக்கப்பட்டுள்ள இலட்சுமி நாராயணன் ஆலயம் இப்பொழுது மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்குகின்றது. இன்றைய கால கட்டத்தில் அதிகளவிலான பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் இன பேதமில்லாமல் அனைவரும் சென்று வரும் ஆலயமாக அருள்மிகு இலட்சுமி நாராயணன் ஆலயம் திகழ்கின்றது. இதன் பிரமாண்டத் தோற்றம் பார்ப்பவர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்துகின்றது.

நிலாவெளி – புறாமலை (புறாத்தீவு)

இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டமானது பல சுற்றுலாப் பிரதேசங்களை தன்னகத்தே இயற்கையாகவே கொண்டுள்ள இடமாகும். இதில் அதிக சுற்றுலாப் பயணிகள் விரும்பி வருகின்ற இடமாக நிலாவெளிக் கடற்கரை காணப்படுகின்றது. நிலாவெளிக் கடற்கரை மிகவும் அழகானது. அதற்கு மேலும் அழகினைக் கூட்டி நிற்பது புறாமலை. முன்னர் மக்கள் தனியாரின் படகுகளில் சென்று குளித்து, சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள். புறாமலை என்று சொல்கின்ற போதும் இவற்றில் இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய தீவு சுமார் 200 மீற்றர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்டது. இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. படகுப் போக்குவரத்து நடாத்துகின்றார்கள். மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல், அழகிய முருகைக் கற்களோடு கூடியது. கற்களைப் பார்த்து இரசிக்கலாம். புறாக்கள் அக்காலத்தில் இங்கு நிறைந்திருந்ததால் புறாமலை என்ற பெயர் வந்தது.  இங்கு 100 வகையான பவளப்பாறைகளும், 300 வகையான பவளப்பாறை மீன்களும் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிப்பது சுற்றுலாத்துறை ஆகும். அத்துறையில் தனக்கென ஓர் இடத்தினை வகிப்பது திருகோணமலை நிலாவெளிக் கடற்கரைப் பிரதேசமாகும்.

மாவீரர்கள் நிறைந்த மண்

ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக சுதந்திர வேட்கையுடன் களத்தில் போராடி தமது இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் பலரை ஈன்றெடுத்த தாய் நிலமாக திருகோணமலை விளங்குகின்றது. வீரச்சாவு அடைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் பகுதியில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ளது. இத்துயிலும் இல்லத்தில் 2500க்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

திருகோணமலை நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எமது தந்தையின் சொந்த ஊரான செல்வநாயகபுரம். இம் மண்ணில் பிறந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் பலர் உள்ளனர். அவ்வாறு வீரச்சாவு அடைந்தவர்களில் எனது தந்தையின் மைத்துனரான வீரவேங்கை ஜெகன் அவரும் ஒருவர். அவர் 1991 இல் வெற்றிலைக் கேணியில் கடல் வழியாக தரையிறக்கப்பட்ட சிறீலங்காப் படையினருடனான சமரில் வீரச்சாவடைந்தார். அவரது நினைவுக்கல் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அவரோடு, எனது தந்தைக்குத் தெரிந்த பலர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். அவர்களில் வீரவேங்கை முரளி, வீரவேங்கை அறிஞன், 2ம் லெப்டினன் காந்தன், 2ம் லெப்டினன் சுகந்தன், லெப்டினன் சுடரொளி, கப்டன் நேசன், மேஜர் ரதன், கடற்கரும்புலி லெப்டினன் பேனாட், கப்டன் முதல்வன், லெப்டினன் சிறிநாத் போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். எமக்காகப் போராடி தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு ஒரு நினைவுக்கல் கூட வைப்பதற்கு முடியாத சூழலில் நாம் உள்ளதை நினைக்கும் பொழுது எமக்கு மிகவும் வேதனையாக உள்ளது.

திருகோணமலையின் ஆரம்பகால மாவீரர்  லெப்டினன்ட் சீலன்

அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.

1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது. 1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்தார்.

1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின.

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது.  சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார். திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். 

லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது.

இயற்கைத் துறைமுகம்

திருகோணமலைத் துறைமுகம் ஈழத்தின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் மையத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பான இயற்கைத் துறைமுகம் ஆகும். ஐரோப்பியக் குடியேற்ற காலத்தில் இத்துறைமுகத்தைக் கைப்பற்ற பல சமர்கள் இடம்பெற்றுள்ளன.  இத்திருகோணமலைத் துறைமுகம் புராதன காலத்தில் கோகண்ண துறைமுகம் என அழைக்கப்பட்டது. இலங்கையிலே உள்ள மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம் எனவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. புராதன காலந்தொட்டு மேலைத்தேய மற்றும் கீழைத்தேய நாடுகளை இணைக்கும் வர்த்தகத் தொடர் மையமாகவும் விளங்கிய இத்துறைமுகம் சுற்றிவர மலைகளால் சூழப்பட்ட ஒரு வளைகுடா போன்று அமைந்திருப்பதனால் சீரற்ற காலநிலைகள் காரணமாக கப்பல்களுக்கு சேதம் ஏற்படாதவாறு  காப்பதற்கான ஒரு சிறந்த பாதுகாப்புப் பிரதேசமாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்து மகா சமுத்திரத்தில் மிகவும் பாதுகாப்பாகவும் வர்த்தக நலவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சிறந்த துறைமுகமாகவும் விளங்குவதாக மேலைநாட்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். திருகோணமலைக் கோட்டை இலங்கையை ஆண்ட   அந்நிய தேசத்தவர்களால் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமைக்கு கோட்டைக்கு கரணியம், அண்மையில் அமையப்பெற்ற இவ் இயற்கைத் துறைமுகம்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கிழக்கு மாகாணத்தின் ஒரு சிறிய நிலப்பரப்பில் இத்துணை பெறுமதி வாய்ந்த இயற்கை, கலை, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படுவது இம்மண்ணிற்கே உரிய தனிச் சிறப்பென்று கூறினால் அது மிகையாகாது. திருகோணமலை மாவட்டம் ஈழத்தின் இயற்கை எழில் கொஞ்சும் கவர்ச்சிகரமான பிரதேசமாகவும் என்றுமே தமிழீழத்தின் தலை நகராகவும் நிச்சயமாக அமைந்திருக்கும்.

ஆக்கம்: ஜெயதாஸ் அனுஜன், ஜெயதாஸ் அனுதீப்
(ஆண்டு – 8), பியல்லா திலீபன் தமிழ்ச்சோலை

உங்கள் கவனத்திற்கு