ஈழத்தில் மலர்ந்த பெண் விடுதலை
இந்திய வல்லாதிக்க அரசாங்கம் எமது இனத்தை வேரோடு அழிக்க அனுப்பி வைத்த அமைதி காக்கும் படையை எதிர்த்து, கோப்பாயில் 10 October 1987 அன்று இடம்பெற்ற மோதலின்போது, பகைவன் கையில் உயிருடன் சிக்கக்கூடாது என்ற உயரிய மனவுறுதியுடன் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் 2ம் லெப்டினன் மாலதி. சகாயசீலி என்ற இயற்பெயரைக் கொண்ட இவரின் நினைவுதினமே தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது.
பெண்களது ஆற்றலையும் விவேகத்தையும் புறக்கணித்த சமுதாயம், அவர்களை ஒரு ஒடுக்குமுறை நிலையில் தான் வைத்திருந்தது. பெண்களால் சுயாதீனமாக வாழத் தெரியாது என்ற தவறான கருத்து நிலவிவந்த காலப்பகுதி அது. ஆணாதிக்க சமுதாயத்தால் பெண்களின் உடல்வலிமை, மனவலிமை என்பன மதிப்பிழந்தன. சமுதாயத்தின் கொடுமைகள் மட்டுமன்றி, சிங்கள இனவாதிகளின் மோசமான கொடூரங்களையும் பெண்ணினம் அனுபவித்து வந்தது. பாலியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் என் சொல்லொணா துயரங்களுக்கு இலக்காகி இருந்தனர் பெண்கள். பெண்களை அழித்துவிட்டால் எமது இனம் வேரோடு அழிந்துவிடும் என்பதை நன்கு அறிந்த சிங்கள அரசு, எமது பெண்களை கொடுமைப்படுத்தி, அவமானப்படுத்தி, கொன்றுகுவித்தது. இந்த துயர நிலையை மாற்றி, ஈழத்து பெண்களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தவர்கள் தான் எமது பெண் போராளிகள்!
பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான விடுதலையைப் பெற்றதாகக் கூறமுடியாது. பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுப்பது கடினம் என உணர்ந்த பெண்கள், ஆண்களுக்கு நிகராக ஆயுதம் ஏந்தி களம்காணச் சென்றனர்.
பெண்கள் விழிப்புற்று, எழுச்சிகொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன்வரும்போது தான், அந்தப் போராட்டம் ஒரு தேசிய போராட்டமாக முழுவடிவத்தைப் பெறும் என்பதை உலகறியச் செய்தவர்கள் எமது பெண்போராளிகளே!
இன்றும் எமது ஈழத்தில் வாழும் பெண்கள் ஒவ்வொரு நாளும் வெயில் மழை பாராது வலிந்து காணமால் ஆக்க்கட்டோருக்காக தொடர்ந்து போராடி வருகின்றார்கள். சிங்கள அரசு திட்டமிட்டு காலத்தை வீணடித்து வரும் நிலையில், போராடும் தாய்மார்கள் 72பேர் தமது உறவுகள் இன்று வருவார்கள் நாளை வருவார்கள் என்ற ஏக்கத்துடன் உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறு, இலங்கை அரசாங்கம் எமது பெண்களை அன்றும் இன்றும் தொடர்ந்து கொடுமைப்படுத்தியும் அவர்களது உரிமைகளைப் பறித்தும் வருகின்றது. இந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து பெண்கள் என்றால் வீரத்திலும், தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண்கள் தமது வீர சாதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர். அந்த வகையில் மண்விடுதலையுடன் பெண்விடுதலைக்கும் உரமிட்ட முதற் பெண் மாவீரராக புதிய சரிதம் எழுதிச் சென்றார் 2ம். லெப்டினன் மாலதி.