வேர்களைத் தேடும் விழுதுகள் – ஆரையம்பதி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன்பாடும் தேன் நாடு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள ஓர் கிராமமாகும். இது கிழக்கிலங்கையில் தமிழர் செறிந்து வாழும் கிராமங்களில் ஒன்றாகும். இந்த அழகான கிராமத்தில் எனது தாய் , தந்தை பிறந்தார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன். இக் கிராமம் பற்றிய வேர்களைத் தேடுவதில் நான் பெருமையும் ஆவலும் அடைகிறேன்.

ஆரையம்பதியின் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காளவிரிகுடா கடலும் தெற்கில் ஐந்தாம்கட்டை மண்முனையும் தாழங்குடாவும் தென்கிழக்கில் பாலமுனையும் தென்மேற்கில் மாவிலங்குதுறை காங்கேயனோடையும் மேற்கில் மட்டக்களப்பு வாவியும் அமைந்துள்ளன.

ஆரையம்பதி காலத்துக்கு காலம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த காத்தான் என்பவன் குடியிருந்தமையால்காத்தான்குடி என அழைக்கப்பட்டது. 1872 இல் தமிழர்கள், இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிகள் அரசினால் இரண்டாக பிரிக்கப்பட்டது. இஸ்லாமியர் வாழ்ந்த பகுதி காத்தான்குடி எனவும் தமிழர்கள் வாழ்ந்த பகுதி ஆரைப்பற்றை எனவும் பெயர் பெற்றது.

ஆரைப்பற்றை பகுதியில் ஓடும் நீரோடைகளில் ஆரை எனப்படும் ஒரு வகைக் கீரை அதிகமாக வளர்ந்து காணப்பட்டதால் ஆரைப்பற்றை என அழைக்கப்பட்டது. 1872 ல் ஆரைப்பற்றை என அரசால் உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.  பின்பு 1992ல்ஆரையம்பதி என மாற்றப்பட்டது.

இவ்வூரின் தோற்றம்,  குடியேற்றம் பற்றி பார்க்கும் போது  கி.மு 2ம் நூற்றாண்டு காலங்களில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளன் தனது பாதுகாப்புக்காக மட்டக்களப்பு வாவி ஓரங்களில் ஆற்றுக்காவல் படையினராக நிறுத்தி வைத்திருந்தவர்கள் இங்கு பரம்பரை பரம்பரையாக வாழத்தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஆரையம்பதியின் இயற்கை வளங்களாக அலையான்குளம், ஆனைக்குளம், வண்ணான்குளம், வம்மிக்கேணி, தும்பன்கேணி, தோணாபால் வாத்தோடை ஆகியன இவ்வூருக்கு நீர்வளம் சேர்கின்றன. அத்துடன் பயிர்செய்ய கூடிய நிலம், மீன்பிடித்துறை, போக்குவரத்து வசதி போன்ற வளங்கள் நிறைந்த அழகான கிராமம்.  மற்றும் கல்விநிறுவனங்கள் அமைப்பு பற்றிப் பார்க்கும் போது தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்று கூறலாம்.

இராமகிருஷ்ணமிசன் மகா வித்தியாலயம், ஆரையம்பதி மகா வித்தியாலயம், நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயம், சுப்பிரமணியம் வித்தியாலயம் எனகூறிக்கொண்டே போகலாம் இவை அன்று தொடக்கம் இன்றுவரை சிறப்புவாய்ந்த பாடசாலைகளாகும். எனது தாய் அன்று கல்விகற்ற பாடசாலை இராமகிஷ்ணமிசன் மகாவித்தியாலயம். தந்தை கல்விகற்ற பாடசாலை சுப்பிரமணியம் வித்தியாலயம்.  நான் இலங்கை சென்ற போது இப்பாடசாலைகளை என் தாயுடன் சென்று பார்த்து மகிழ்ந்தேன்.

ஆரையம்பதியில் அமைந்துள்ள வணக்கத்தலங்கள் எண்ணில் அடங்காதவை. அவற்றுள் கண்ணகியம்பாள் ஆலயம், கந்தசுவாமி ஆலயம்,பரமநயினார் ஆலயம், திருநீலகண்ட விநாயகர் ஆலயம் என அடிக்கிக் கொண்டே போகலாம். இவ் ஆலயங்கள் மிக பழமையானதும், நம்பிக்கையானதுமான ஆலயமாக விளங்குகிறது. எனது பெற்றோரின் வணக்க தலங்களில் இவை முதலிடம் பெறுகிறது. கந்தசுவாமி ஆலய திருவிழாக் காலங்களில் இங்கு மக்கள் குவி்ந்து காணப்படுவர். பார்ப்பதற்கு மிகவும் அழகாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். ஆடல், பாடல், காவடி, கூத்து என பல நிகழ்வுகளைக் காணக்கூடியதாக இருக்கும். இது போன்றே கண்ணகியம்பாள் ஆலயமும் சிறப்பு வாய்ந்ததும் பழமையானதும் அருள் பாலிக்கும் அம்பாள் குடியிருக்கும் ஆலயமாக விளங்குகிறது. ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ள சிலப்பதிகார நாயகியான பத்தினி கண்ணகிக்கு இலங்கையில் அமைந்துள்ள ஆலயங்களில் முக்கியமான ஆலயமாகும். வருடத்தில் வைகாசிமாத பூரணைக்கு முந்திய எட்டு நாட்கள் அதிகாலை, மாலை நேரங்களில் சடங்கு நடைபெறும். திருக்கதவு திறத்தல், அம்மனை அழைத்துவருதல், திருக்கல்யாணச் சடங்கு, திருக்குளித்தி, திருக்கதவடைத்தல் என எட்டு நாட்கள் தொடர்ந்து சடங்கு நடைபெறும்.  இவ்வெட்டு நாட்களும் மக்கள் வெளியூர் செல்லமாட்டார்கள். அவ்வாறு சென்றால் அவதூறு விளைந்துவிடும் என்ற நம்பிக்கை இன்றும் மக்கள் மனதில் உள்ளது.

ஆரையம்பதி மண்ணில் பிறந்து எமது மண்மீட்பு போராட்டத்திற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்து இக்கிராமத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அந்தவகையில்  இரண்டு கரும்புலிகள்  உட்பட 104  மாவீரமறவர்களையும் நான்கு நாட்டுப்பற்றாளர்களையும் குறிப்பிடலாம். மட்டு-அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் லெப் கேணல் நீலன், கடற்கரும்புலி மேஜர் எழில் வேந்தன், லெப் சுதர்சன், 2ம் லெப் அனித்தா, 2ம்லெப் கோபி என பல வீரமறவர்களை  விதைத்துள்ளது.

மட்டக்களப்பு தாண்டியடிப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு அங்கு பொலிஸ் நிலையத்திற்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது தங்களுக்காக போராடி உயிர் நீத்த போராளிகளின் துயிலுமில்லத்தை முற்றாக அழித்து அங்கு படையினர் நிலை கொண்டுள்ளது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஆரையம்பதி கி்ராமம் சமூக கட்டமைப்பு மற்றும் வழக்காறு போன்றவற்றில் காணப்படும் தனித்துவம் பழமையும் சிறப்பாக அடையாளப்படுத்தப்படும் போக்கிலும் ஆரையம்பதி மிகநீண்ட வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டிருப்பது நிதர்சனமாகின்றது, எனது பெற்றோரின் கிராமமான ஆரையம்பதி பற்றி வேர் தேடுதல் மூலம் நான் பெரு மகிழ்சியடைகிறேன்.

நன்றி

போலோணியா திலீபன் தமிழ்ச் சோலை

உங்கள் கவனத்திற்கு