சோல்பரியின் காப்பீட்டைத் தகர்த்தெறிந்த சிங்கள இனவாதம் – வரலாறு சொல்லும் பாடம் 15

பெரும்பான்மைச் சிங்களவரின் பேரினவாத வெறிக்கு ஓரளவு கடிவாளமாக இச்சட்டப்பிரிவு இருக்க முடிந்ததே தவிர, 1948இல் சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த மிகச்சுருங்கிய காலத்திலேயே இச் சட்டப்பிரிவின் காப்பீடு சிங்கள அரசியல்வாதிகளாலே தகர்த்து எறியப்பட்டதென்பதே வரலாறு.

1970ஆம் ஆண்டுவரை சிங்கள அரசு தமிழர்களின் நலனுக்கெதிராகச் செய்த எந்த ஒரு சட்டத்தினின்றும் பாதுகாப்பளிக்க இந்த 29ஆம் பிரிவுச் சட்டம் துணைக்கு வரவில்லை. 1948இல், இலங்கைக் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 9 இலட்சம் இந்தியத் தமிழர் குடியுரிமையிழந்தனர். 1949இல் வாக்குரிமை இழந்தனர். இக்குடியுரிமைச் சட்டம் அரசியலமைபுச் சட்டத்தின் 29 ஆம் பிரிவுக்கு முரணானதென இலண்டனிலுள்ள கோமறைக் கழகத்திற்கு (பிரிவிக் கவுன்சிலிக்கு) முறையிடப்பட்டபோது இத்தகைய சட்டம் நிறைவேற்ற இலங்கை அரசுக்கு உரிமை உண்டு என்றே கோமறைக் கழகம் தீர்ப்புச் சொன்னது. 1956இல், தனிச் சிங்களச் சட்டம் (சிங்கள ஆட்சிமொழிச் சட்டம்) கொண்டு வரப்பட்டது. இது அரசியற் சட்டத்தின் 29ஆம் பிரிவை மீறுகின்றதென்ற வழக்கு கோமறைக் கழகத்துக்குப் போனது. தனிச்சிங்களச் சட்டம் 29 ஆவது பிரிவை மீறுகின்றதென்ற தீர்ப்பையே கோமறைக்கழகம் வழங்கினாலும் இலங்கையில் சிங்கள அரசாங்கம் சோல்பரிச்சட்டத்தைப் புறந்தள்ளி, மிக மூர்க்கமாகச் சிங்களம் மட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. 29ஆம் பிரிவு, சட்டத்திளைவில் சுறுபான்மையோருக்கு எழுத்தில் அமைந்த கால்பீடு என்ற போதிலும் நடைமுறையிற் செயலற்றதாகவே அது இருந்தது.

அது போலவே:

01) மூதவை (செனற்சபை)

02) நியமன உறுப்பினர்கள்

3) பல உறுப்பினர் தொகுதி

4) கோமறைக்கழகம் (பிரிவுக்கவுன்சில்)

05) சுதந்திரமான பொதுச்சேவை நீதிச்சேவை ஆணைக்குழு

போன்றவையை, சினுபான்மையினருக்குக் காப்பீடுகளாகச் சோல்பரி நினைத்தபோதும், சிங்களப்பேரினவாதத்தின் இன, மதப் பேரவாவிற்கு முன் இவை, ஒன்றுமே நின்று நிலைக்க முடியவில்லை. மூதவை நியமனம் சிங்களத் தலைமையமைச்சரின் பரிந்துரையில் ஆளுநராற் செய்யப்பட்டது. இதனால், மூதவையும் சிங்களப் பெரும்பான்மையால் நிறைந்தது. நியமனம் பெற்ற ஓரிரண்டு சிறுபான்மையோரும் வாய்மூடி இருந்தனர். அல்லது தமது நலன்பேண பெரும்பான்மைப் பக்கம் சரிந்தனர்.

எம்.சி.சுப்பிரமணியம்

குடியுரிமைச் சட்டம், தேர்தல் திருத்தச் சட்டம், தனிச்சிங்களச்சட்டம் என்பவை மூதவையின் முன்னே வந்தபோது சிங்களப் பெரும்பான்மை கண்ணை மூடிக்கொண்டு அவற்றை ஆதரித்தது. ஆதலால், போர்த்துக்கேயருடைய வரவு வரை இலங்கைத்தீவின் ஒரு புறத்திலே தனியாட்சி செய்த தமிழினம், இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்குள்ளே தனது தனித்தன்மையை ஒருவாறு பேணக்கூடுமென்று எண்ணியிருந்த தமிழினம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகவேண்டிய காலகட்டத்திற்கு ஆளாகியது. பாராளுமன்றத்திற்கான நியமன உறுப்பினர்கள் சிறுபான்மையினரிலிருந்து தெரிவுசெய்யப்படுவது சிங்களப் பெரும்பான்மையின் வேகத்தைக் குறைக்குமென்று சோல்பரி வாதித்திருந்தாலும், நடைமுறையிலே அவரின் எதிர்பார்ப்புக்கு மாறாகப் பெரும்பான்மை இனத்தவரே நியமிக்கப்பட்டனர். மாறாகப் சிறுபான்மையினர் ஒருவர் இவ்வாய்ப்பைப் பெறும்பொழுதுகூட தமது இன நலனைப் புறக்கணித்து, பேரின நலன்பேண வாக்குத்தத்தம் செய்தவர்களாகவே பார்த்து நியமிக்கப்பட்டனர்.

1970 ஆம் ஆண்டு நியமன உறுப்பினரான எம். சி.சுப்பிரமணியமும், மூதவை கலைக்கப்பட்டதன் பின் நியமன உறுப்பினரான செல்லையா குமாரசூரியரும் 1972 இல் உருவான இலங்கையின் “ சிங்கள பௌத்த குடியரசு யாப்பை ” ஆதரித்தது. தமிழ் மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குறியாக்குவதற்குக் காரணமாயினர். சிங்கள அரசின் எந்தவிதமான இனஒதுக்கல்களுக்கும் கை உயர்த்தக்கூடிய “விசுவாச” அடிமைகளாகவே இவர்கள் தமிழ் மக்களால் இன்றும் (இறந்தபின்பும் கூட) கணிக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்திற்கான பல உறுப்பினர் தொகுதிகள் மூலம் சிறுபான்மையோர் தமது உறுப்புரிமையைப் பல்லினத் தேர்தல் தொகுதிகளில் உறுதி செய்ய முடியுமென்று எதிர்பார்க்கப்பட்டது.

உங்கள் கவனத்திற்கு