“இன அழிப்பிற்கும் மறக்கப்படும் நிலையிற்கும் இடையில் ஓர் தேசம்” இணையவழி மகாநாடு

இத்தாலியிலுள்ள தமிழ் கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில் 12 மே 2021 அன்று ‘இன அழிப்பிற்கும் மறக்கப்படும் நிலையிற்கும் இடையில் ஓர் தேசம்‘ எனும் தலைப்பில் இணையவழி மகாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.

கொரோனாவைரசு அவசர காலத்தால் இத்தாலி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மே 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் கட்டவிழ்க்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தேறி 12 வருடங்கள் ஆகிவிட்டன. இதில் 140.000ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

பல ஆண்டுகளாக தமிழ் மக்களுடன் ஒத்துழைத்து அவர்களுக்கு ஆதரவளித்த நபர்கள் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டனர்:

Mario Carli, Valdilana மாநகர முதல்வர்;
Leoluca Orlando, Palermo மாநகர முதல்வர்;
Cristiana Natali, Bologna பல்கலைக்கழக ஆசிரியை;
Vainer Burani, தமிழ் சமூகத்தின் வழக்கறிஞர்;
Giuseppe Burgio, Enna Kore பல்கலைக்கழக ஆசிரியர்;
Giorgio del Zanna, Comunità di Sant’Egidio அங்கத்தவர்;
Marina Forti, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் (Tribunale Permanente dei Popoli) பத்திரிகையாளர் மற்றும் உறுப்பினர்;
Stefano Rebora, ONLUS “Music For Peace” அமைப்பின் நிறுவனர்;
Matteo Pria, பத்திரிகையாளர்;
Matteo Portigliatti, “Welcome to Tigerland” திட்டத்தின் ஆசிரியர் மற்றும் புகைப்பட பத்திரிகையாளர்;
Stefano Stranges, “The Beauty will save the drama” திட்டத்தின் ஆசிரியர் மற்றும் புகைப்பட பத்திரிகையாளர்.

தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்ட இச் சந்திப்பு, தமிழர்களுடைய இனப்படுகொலை சார்ந்து சர்வதேச அரசியலின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விரிவான பகுப்பாய்வுடன் ஆரம்பமானது. மேலும், இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறிலங்காப் படையின் முன்னாள் தளபதி சுமங்கல டயஸை இத்தாலிக்கான இலங்கை தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையும் அனைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


Valdilana மாநகர முதல்வர் Mario Carli அவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து Palermo மாநகர முதல்வர் Leoluca Orlando அவர்களும் தமிழர் இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்கும் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணையைக் கோருவதற்கும் ஒரு உத்தியோகப்பூர்வ அறிக்கையை வெளியிடுவாக தனது உரையில் கூறினார்.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் (Tribunale Permanente dei Popoli) பத்திரிகையாளரான Marina Forti, 2001 11 செப்டம்பருக்குப் பின்னர் இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான போர் கோட்பாட்டை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நியாயமற்ற முறையில் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி, சர்வதேச அரங்கில் தமிழர்களுக்கும் சிறிலங்காக்கும் இடையிலான சம அங்கீகாரத்தை சமநிலையற்றதாக ஆக்கப்பட்டதைப் பற்றி விளக்கமளித்தார்.

ஆசிரியை Cristiana Natali தனது உரையில், நினைவுகூரலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சிறிலங்காவின் அடக்குமுறையை கண்டித்தார்:

“மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் தமிழின அழிப்பின் நினைவுச் சின்னங்களை சிறிலங்கா அரசாங்கம் அழித்திருப்பது தமிழர்களை இரண்டாவது முறையாக கொன்று அவர்களை அவமதிப்பது ஆகும்.”

ஆசிரியை Cristiana Natali

மே 2009ல் ஆயுதப்போராட்டம் முடிந்தாலும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்கின்றது. நல்லிணக்கம் என்ற பெயரில், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர்களின் அடையாளத்தை அழித்து வருகின்றது. Stefano Stranges, Matteo Portigliatti மற்றும் Marina Forti தங்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இவ்வாறான சம்பவங்களைப் பற்றி சாட்சியமளித்தனர்.

சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களின் முன்னிலையிலும் சிறிலங்கா அரசாங்கம் தனது குற்றங்களுக்கான விசாரணை மற்றம் நீதியை தொடர்ச்சியாக தவிர்ப்பதுடன், மனித உரிமை மீறல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை தனது போதாத எதிர்வினைகளால் தமிழர்களை அவர்களின் நீதிக்கான பாதையிலும் உரிமைகளை வலியுறுத்துவதிலும் கைவிடுகின்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து இனப்படுகொலைக்கு எதிராக ஒரு தெளிவான பார்வையை உருவாக்குவது மட்டுமல்லாமல், தமிழர்களின் அடக்குமுறை மீது விதிக்கப்பட்டுள்ள மௌனத்தை உடைப்பதற்கான ஒரு வழியாகவே இந்த மகாநாடு அமைந்தது. 

முக்கியமாக, இத்தாலி வாழ் தமிழ் மக்கள் தனியாக இல்லை இத்தாலிய சமூகத்தின் ஒற்றுமையும் நெருக்கமும் அவர்களுக்கு பக்கப்பலமாக இருக்கும் என்பதும் இந்த மகாநாடு மூலம் வெளியாகியது.  

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இத்தாலி
தமிழர் ஒன்றியம் இத்தாலி
ஈழத்தமிழர் மக்களவை இத்தாலி 
தமிழ் இளையோர் அமைப்பு

உங்கள் கவனத்திற்கு