எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம் ஒன்று நிரந்தர அமைதியில் துயில் கொள்கிறது!

நெஞ்சுறுதி கொண்டு இறுதிவரை உறுதி தளராது பயணித்த தாயகத்தின் முன்னைநாள் மன்னார் மறைமாவட்ட பேரன்பின் தூதுவன் வயது முதிர்வால் இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட புனித வியாழனில் (1/4/2021) தன்னுயிர் துறந்து விண்ணுலகத்தில் ஆண்டவனோடு உயிர்ப்பு விழா கொண்டாடச் சென்றதனால் எம் விழி கலங்குகிறது.

இராயப்பு ஜோசப்பு அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை நெடுந்தீவிலும், முருங்கனிலும் உள்ள றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாண சம்பத்திருச்சியார் கல்லூரியிலும் கல்வி கற்ற இவர் தனது 27வது அகவையில் குருப்பட்டம் பெற்றார். 1967இல் தனது குருப் பணியை ஆரம்பித்த ஆண்டகை தனது குருத்துவப் பணி மட்டுமன்றி தமிழ் இனத்திற்காகவும் குரல் கொடுத்து வந்தவர், 2015 நடுப்பகுதியில் சுகயீனமுற்று தனது ஆயர் பதவியில் இருந்து விலகினார். இராயப்பு யோசப்பு அவர்கள் ஈழப்போரின் போது இலங்கை அரசு, மற்றும் இலங்கைப் படையினரின் பங்களிப்புக் குறித்தும், நாட்டின் மனித உரிமை மீறல் குறித்தும் பெரிதும் விமர்சனம் செய்து வந்தார். இதன் மூலம் அவருக்கு அரச ஆதரவாளர்களின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியும் இடைவிடாது குரல் கொடுத்து வந்தார். ஈழத் தமிழரின் உரிமைக்கான போராட்ட காலத்திலும், போர் நிறைவுபெற்றதன் பின்னரும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்களின், பலமான குரலாக செயற்பட்ட பேராயர் இராயப்பு யோசேப் ஆண்டகையின் மறைவு கத்தோலிக்க திருச்சபைக்கும், தமிழ் தேச மக்களுக்கும் ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும். தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்க முயன்றபோது, தமிழ்த் தேசத்தில் நடைபெற்ற இனவழிப்புக்கு நீதியைக் கோரி, சர்வதேச பொறுப்புக்கூறலை எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி வலியுறுத்தி, தமிழ் சிவில் சமூக அமையத்தினூடாக ஆண்டகை அவர்கள் தலைமை வகித்தது பெருமைக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்களுக்கான நீதிக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அமைதியில் உறங்குகின்றது. தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கலந்து, உடலால் அமரத்துவம் அடைந்த ஆண்டகையின் ஆன்மா நித்திய அமைதி அடைவதாக. ஆயர் நிலையில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும் இன விடுதலைக்காக உண்மையாக குரல் கொடுத்த மறைமாவட்ட ஆயர் முள்ளிக்குள பிரச்சனையிலும் 146679 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் யுத்தத்தில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக உலக நாடுகளுக்கும் எடுத்துச் சொல்லுமளவிற்கு செயற்பட்டவர் இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்கள். மதத்திற்கும் அப்பால் இனம், மதம், மொழி, சாதி, சமயம் பாராமல் மக்களுக்காக ஆன்மீகப் பணியோடு மட்டுமல்லாமல் அனைத்து மக்களின் உரிமைக்காகவும் தன்னை அர்ப்பணித்து மானிடத்தில் மங்கா ஒளிச் சுடராக திகழ்ந்த ஆயர் அவர்கள் பலவகை நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொண்டு சுதந்திர நாட்டை கட்டியெழுப்புவதற்காக பாடுபட்டு ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்கள் தமிழ்த்தேசியத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்.

உங்கள் கவனத்திற்கு