“ஜெனிவா தீர்மானமும் தமிழரின் தலைவிதியும்”

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் 46-1 தீர்மானம், புவிசார் அரசியலுக்கும், பேரினவாத சிங்கள அரசிற்கும் வெற்றியைத் தவிர நீதி மறுக்கப்பட்டு வரும் ஈழத்தமிழர்களாகிய எமக்கு மீண்டும் “வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய” கதையாகவே உள்ளது.

2009 உச்சக்கட்ட போரில் சிறிலங்கா பேரினவாத அரசு எம்மை இனவழிப்பு செய்த போது மௌனமாக இருந்ததன் மூலம் அன்று பேச்சுவார்த்தை அரங்கில் இருந்த இணைத்தலைமை நாடுகள் இனவழிப்பிற்கு துணை நின்றனர். அந்த நேரமும் ஈழத்தமிழரை பயன்படுத்தி தமது புவிசார் அரசியலை வலுப்படுத்த முனைந்தனர்.

இதில் கடந்த பத்து வருடங்களாக வெற்றி பெற முடியாமல் தமது இராஜதந்திர நடவடிக்கையில் தோல்வியைத் தழுவிய இந்தியாவும், இணைத்தலைமை நாடுகளும் இன்று ஜெனிவா அரங்கை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சீனாவின் புவிசார் வளர்ச்சியை தடுப்பதற்காகவும், அதனோடு தமது பகமையை நேரடியாகக் காட்டாமல் மீண்டும் “ஈழத்தமிழர்” விவகாரத்தை தமக்கு சாதகமாக எடுத்து இம்முறை
மீண்டும் “இணைக்குழு” நாடுகள் என்ற பெயரில், எமக்கு நடக்கும் “இனவழிப்பை” நீர்த்துப்போக பண்ணி போர்க்குற்ற ஆதாரங்களை மட்டும்
திரட்டும் நடவடிக்கைக்கான தீர்மானமாக இம்முறை ஜெனிவாத் தீர்மானத்தை வரைந்துள்ளனர்.

இதில் இந்தியா தனது வாக்கினை அளிக்கவில்லை. ஆனால் தனது பேச்சில் இராஜதந்திர முறையில் மிகவும் தாராளமான சொற்பதங்களை பாவித்து சிறிலங்கா அரசை மிரளச் செய்துள்ளது என்பதே உண்மை. அதாவது அடிபணிய வைக்கும் அரசியல் செய்தியாக தான் இந்தியாவின் பேச்சு அமைந்துள்ளது. இதிலும் ஈழத்தமிழருக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை மாத்திரம் குறிப்பிட்டு அடுத்தவையாவும் தனதும் புவிசார் அரசியலையுமே முன்னிலைப்படுத்தி தமது உரையில் குறிப்பிட்டுச் சென்றது.

ஏன் இந்தியாவும் “துணைக்குழு” நாடுகளும் எம்மை மீண்டும் பயன்படுத்துகின்றனர். எமது கோரிக்கைகளை ஏன் உள்வாங்குறார்கள் இல்லை? எமக்கு ஏன் நீதி மறுக்கப்படுகின்றது? எமது கோரிக்கைகளான இனவழிப்பு, சுயாதீனமான சர்வதேச புலனாய்வு விசாரணை, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற கோரிக்கைகளை எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் உள்ளகப் பொறிமுறை போன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமது பூகோள அரசியலுக்காக எம்மினத்தின் விடுதலை வேணாவை மறுதலித்து, இனவாத சிங்கள இனவழிப்பு சிறீலங்கா அரசுடன் பேரம் பேசுகின்றனர்.

இதில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பட்டுப் பாதை (“Silk” Belt and Road Initiative) திட்டத்தை முறியடித்து தமது பலத்தை நிரூபிக்க அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளுடன் சிறீலங்காவையும் இணைத்து “நேட்டோ” (NATO) நேச நாடுகளுக்கு ஒத்த ஒரு அமைப்பாக “குவாட்” (QUAD) அமைப்பில் சிறிலங்காவை கையொப்பமிட வைப்பதன் மூலம் சீனாவை இந்து சமுத்திரத்தில் இருந்தும், சிறீலங்காவிலிருந்தும் மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தினால் தான் எமது கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டு தமது நலன் சார்ந்து தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவும் ஜப்பானும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இத் தீர்மானத்தின் ஊடாக “எமது தலைவிதியை” பூகோள அரசியல் தீர்மானிக்க இடம் அளிப்போமா அல்லது இதனை சவாலாக எடுத்து நீதிக்காக தொடர்ந்து போராடுவோமா? நிச்சயமாக நாம் தொடர்ந்து போராடியே ஆகவேண்டும்.

எமது இனம் 1948 முதல் சிறீலங்கா பேரினவாத அரசினால் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு செய்யப்பட்டு வருகின்ற ஓர் தேசிய இனம். இருபத்தோராம் நூற்றாண்டிலும் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட தேசிய இனம்.

இருந்தும் புவிசார் அரசியலை நன்கு அறிந்துகொண்ட நாம் தெளிவான வேலை திட்டத்தை வரைந்து இனவழிப்பிற்கான நீதி கோரலை முதன்மைப்படுத்தி இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதன் மூலம் எமது சுதந்திர வேட்கையை அடைய முடியும்.

“தலைவிதி என்பது மாற்றம்” பெற நாம் முயற்சியுடன் ஒற்றுமையாக அணிதிரள வேண்டும். இலட்சியப்பற்று, துணிவு, தற்சார்பற்ற நிலை இவைகளே ஒரு இனத்தின் சுதந்திரத்தை அடைய வழிகோலும்.

ஆகவே “ஜெனிவா” தீர்மானம் எம்மை சோர்வடையப்பன்னாது, அதிலிருந்து மீண்டெழுந்து எமது தேசத்திற்கும், மக்களுக்குமாக நீதிக்காக தொடர்ந்து போராடி எமது விடுதலையை மீட்டெடுப்போம்.

உங்கள் கவனத்திற்கு