ஆனந்தபுரம் அழியாத தமிழ் வீரத்தின் உறைவிடம்

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனந்தபுரம் தமிழரின் வீரம் நிறுவப்பட்ட இடம். தன்மானமும் மனவுறுதியும் எக்காலத்திலும் எதிரியால் அடிபணிய வைக்கமுடியாத வீரமரபின் வழிவந்த மானமறவர்களை தன்னகத்தே தாங்கியபூமி.

2008ம் ஆண்டு மாவிலாறில் தொடங்கிய தமிழின அழிப்பு போரை சர்வதேசமே கண்திறந்து பார்த்திருக்க இனவெறி கொண்ட சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக தமிழர்களை கொன்று ஒழித்து வன்னி பெருநிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பெரும் ஆயுத பலத்தையும் ஆள் பலத்தையும் திரட்டி தனதுபக்க பெரும் இழப்பையும் பொருட்படுத்தாது வல்லாதிக்க சக்திகளை தனக்கு துணையாக்கி மூர்க்கத்தனமாக தமிழர் தேசத்தை ஆக்கிரமித்த அக்காலப்பகுதியிலேயே சமர்களுக்கு எல்லாம் தாய்ச்சமராக பலராலும் பார்க்கப்பட்ட ஆனந்தபுரம் வீரச்சமர் நடக்கவிருந்தது. 2009 மார்ச் மாத இறுதியில் ஆனந்தபுரம் பெரும்பரபரப்பாக ஒரு பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருகிறது என்பதை பலர் வாயிலாகவும் செய்திகள் பரவிக் கொண்டிருந்தது.

புதுக்குடியிருப்பு சிறீலங்காவின் பிடிக்குள் சென்றபின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தக்கவைக்க தமிழர் தேசம் ஒருபெரும் எதிர் தாக்குதலை நடத்தமுனையும் என்று பலரும் நம்பினர். அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் ஒரு பெரிய தாக்குதலுக்கு ஆனந்தபுரத்தில் அத்திவாரம் இடப்பட்டது. அதாவது முப்பதாண்டு கால தமிழீழ  விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகக்குறுகிய காலத்திலேயே திட்டமிடப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் திட்டமாக இருபதிற்கும் மேற்பட்ட பிரிகேடியர் தர தளபதிகள், நாற்பது கேணல் தரத்தினர், எழுபதிற்கும் அதிகமான லெப் கேணல் தர தளபதிகள், பல நூற்றுக்கணக்கான போராளிகள் கொண்டு இறுதி யுத்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக அமைந்ததே தமிழர் தேசத்தின் இத்திட்டம்.

மாறாக உலகப்பயங்கரவாத அரசுகளுடன் கைகோர்த்து அறத்தையும் போர்மரபையும் குழிதோண்டி புதைத்து சர்வதேச போர்விதிகளை முற்றாக மீறி மிலேச்சத்தனமாக நயவஞ்சகமாக மனிதகுல அடிப்படை பண்புகளை மீறி தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி நச்சு வாயுக்கள் கொண்டு தமிழர் தேசத்தின் ஆள்பலத்தையும் ஆயுதபலத்தையும் ஏப்ரல் மாத முற்பகுதியில் நிர்மூலமாக்கி எமது போராட்டத்தை சிதைத்தது. ஆனால் அந்தமண்ணில் தம்மை எதிரி கையில் ஒப்படைக்காமல் தம்மை ஈகம் செய்த பல இடங்களில் எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஷ், கேணல் அமுதா, கேணல் தமிழ்ச்செல்வி மற்றும் பல வீரமறவர்களின் ஓர்மமும் ஈகமும் வீரமும் ஓர்நாள் எதிரிகளை புறமுதுகிட்டு செய்து தமிழரின் சுதந்திர வாழ்விற்கு வழியமைக்கும் என்பது நிச்சயம்.

உங்கள் கவனத்திற்கு