Covid-19 க்கு எதிரான தடுப்பூசியை நோக்கி

Mondo insieme எனும் அமைப்பால் சென்ற வாரம் நடாத்தப்பட்ட இணையவழி சந்திப்பில் கொரோனாவைரசு தொற்றுநோய்க்கான தடுப்பூசி பற்றிய விளக்கங்கள் தொற்று மற்றும் வெப்பமண்டல நோய்களில் நிபுணரான Dr. Enrico Barchiயால் அளிக்கப்பட்டன.

ஒவ்வொரு நாட்டின் தற்போதைய நோக்கம் தொற்றுதல்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பது ஆகும். இது முகக்கவசங்கள், சுகாதார விதிமுறைகள், சமூக இடைவெளி, தொடர்புத் தடமறிதல் மூலம் மேற்கொள்ளப்பட்டது. முடக்கநிலை மிகவும் பயனுள்ள நடவடிக்கையாக கருதப்பட்டாலும் இது பொருளாதாரம், உளவியல் மற்றும் சமூக சிக்கல்களை வழிவகுக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், இதிலிருந்து வெளியேற தடுப்பூசி ஒரு பெரிய நம்பிக்கையாக திகழ்கின்றது. ஐரோப்பாவில் தற்போது மூன்று அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளன. அவை: Pfizer, Moderna (இவ் இரண்டையும் குறைந்தவெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். அதனால் தகுந்த மையங்களில் மட்டுமே இதை வழங்க முடியும்) மற்றும் AstraZeneca (இதற்கு குளிர் சங்கிலி தேவையில்லை). இருப்பினும், பிரச்சினை தீர்க்கப்படவில்லை ஏனென்றால் தொற்றுநோய்கள் மற்றும் இறந்தவர்களின் அளவைக் குறைப்பதற்காக பலர் தடுப்பூசி போட முயற்சிக்க வேண்டும். ஆனால் நாம் தொடர்ந்தும் சுகாதாரம் மற்றும் சமூக விலகல் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். கூட்டங்கள், பொது இடங்களைத் தொடர்ந்து தவிர்ப்பது அவசியம். முகக்கவசங்கள் பயன்படுத்துவதைத் தொடர வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

வைரசின் மாற்றங்களைப் பொறுத்தவரை ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனைய வைரசுகளைப் போலவே Covid-19 வைரசும் மாற்றமடைவது சாதாரணமானது. தற்போதைக்கு, வைரசின் வெவ்வேறு வகைகளுக்கு எதிராகக் கூட தடுப்பூசிகள் பயனுள்ளதாகத் தெரிகிறது. ஆகையால், தடுப்பூசியின் பயன் குறித்து எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. உதாரணமாக Israel போன்ற நாடுகளில் முன்னேற்றம் காணலாம் என அவர் விளக்கமளித்தார்.

தடுப்பூசியின் செயல்திறனின் காலம் குறித்து, அது பல மாதங்கள் நீடிக்கும் என்பது உறுதி ஆனால் அவ்வப்போது மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது (ஒரு வருடத்திற்கு ஒரு முறை). எல்லோருக்கும் சமநேரத்தில் தடுப்பூசி போட முடியாததால், முதலில் வைரசின் தொற்று அபாயம் கூடுதலாக உள்ளவர்களுக்கு போடப்பட்டது. அதாவது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் வயதானவர்கள், ஏனைய கடும் நோய்கள் உள்ளவர்கள். அடுத்த வாரத்திலிருந்து AstraZeneca தடுப்பூசி பாடசாலைகளில் வேலை செய்பவர்களுக்கும் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கும் போடப்படும். மருந்துகளில் உள்ள மூலப்பொருளால் ஏற்படுவது போல் (உதாரணத்திற்கு tachipirina) தடுப்பூசியும் பக்க விளைவுகளை கொண்டு வரும். கூடுதலாக அவதானிக்கப்பட்டவை பொதுவாக வேறு எந்த தடுப்பூசியாலும் வரக்கூடிய எலும்பு வலி, சோர்வு, கை வலி போன்றவை ஆகும். இவ் விளைவுகள் ஓரிரு நாட்கள் வரை நீடிக்கும். ஒரு நபர் இரண்டு நாட்களுக்கு மேல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும். சிறிதாக கூட வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி போடமுடியாது. ஏனென்றால், ஏற்கனவே உடல் வைரசுக்கு எதிர்வினையாற்றுவதால் தடுப்பூசி போட்டால் மேலதிக எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். குணமடைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு வைரசால் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியை போடலாம் என Dr. Barchi விளக்கினார்.

உங்கள் கவனத்திற்கு