காலங்கள் கடந்தோடினாலும் இளமை குன்றாமல் கம்பீரமாக எழுந்து நிற்கும் மொழி எமது தமிழ் மொழி. தாயகத்திலே அந்நியரின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆட்சியாளரின் புறக்கணிப்பு ஊடாக எமது தாய்மொழியான தமிழை சிதைக்க முயன்றாலும், அத்தனை இடர்களை தாண்டியும், இன்று உலகளாவிய ரீதியில் வீறுநடை போடுகின்றது எமது தமிழ் மொழி.

மொழிகளுக்குள் மூத்த மொழியாகக் கருதப்பட்டு, திராவிட மொழியான தமிழ் மொழி ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தோன்றியது என பல சான்றுகள் கூறுகின்றன. பிற மொழிகளின் கலப்பிடமில்லாமல் தனித்துவமான தமிழ் மொழி செம்மொழி என்றும் அழைக்கப்படுகின்றது. தமிழ் என்றால் இனிமை என்ற பொருள் கொண்ட இவ் இனிமையான மொழி 247 எழுத்துக்களைக் கொண்டு இன்றும் எழுத்தளவிலும் பேச்சளவிலும் சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை சிறப்புகளை எமது அன்னைத் தமிழ் கொண்டுள்ளது என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர். இத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கிய எமது தாய்மொழியின் பெருமைக்கு முக்கிய சான்றாக பல்லாயிரம் ஆண்டுக் காலப் பழமையான தமிழ் இலக்கிய இலக்கணங்கள் அமைகின்றன.

இவற்றில் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலம் சங்க காலமாகும். பொற்காலமாகக் கருதப்படும் இக் காலப்பகுதியில் அமைக்கப்பட்டவை தான் சங்க இலக்கியங்கள். இவற்றிற்கு மூல இலக்கணமாக விளங்குவது தொல்காப்பியம். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங் காப்பியங்கள் எழுதப்பட்டன. உலகளவில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மாபெரும் தமிழ் இலக்கியம் திருக்குறள் ஆகும். 133 அதிகாரங்களாகப் பிரித்து, மொத்தம் 1330 குறள்களைக் கொண்ட திருக்குறளானது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக திகழ்கின்றது. இது வாழ்வியல் சார்ந்த ஒரு நூலாகும். மனிதர்கள் தங்களது வாழ்வில் சுகமாகவும், இன்பமுடன் வாழவும் அவசியமான அடிப்படைப் பண்புகளை இதன் மூலம் விளக்குகின்றார் திருவள்ளுவர்.

“தமிழுக்கும் அமுதென்று பேர்! — அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! என பாவேந்தர் பாரதிதாசன் எமது அன்னைத் தமிழை வர்ணிக்கின்றார். இவ்வாறு, எமது தாய் மொழியின் தூய்மையை உலகமே போற்றும் போது, தமிழர்களின் பூர்வீகத்தையே அழிக்க நினைக்கின்றான் சிங்கள இனவெறியன். தமிழர்கள், அவர்களுக்கென்ற ஒரு மொழி, அடையாளம், வரலாறு இருந்ததற்கான ஆதாரத்தையே அழிக்கும் நோக்கோடு தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாக பேணப்பட்டு, தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் 1981ம் ஆண்டு சிங்கள இனவாத அரசால் திட்டமிட்டு சாம்பலாக்கப்பட்டது. வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் நூல்களை எரித்து விட்டால் தமிழர்களை வேரோடு இல்லாதொழித்து விடலாம் என எண்ணிய சிங்கள இனவாதத்திற்கு பதிலடியாக தான் இன்று எமது தமிழ்மொழி உலகில் வேரூன்றி நின்று வெற்றி நடை போடுகின்றது.

புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்தாலும், வாழும் நாட்டின் மொழியை மட்டுமே முன்னோக்கிப் போகும் ஒரு சிலருக்கு மத்தியில், எத்தனை மொழிகள் தெரிந்தாலும் சொந்தத் தாய்மொழியை பயின்று கதைப்பதன் இன்பத்திற்கு வேறேதும் ஈடாகாது என உறுதியோடு நம்பும் பலரின் புனிதமான சிந்தனைக்கு தலை வணங்கி, சர்வதேச தாய்மொழி தினமாகிய இன்று எமது தாய்மொழியான தமிழ் மொழியின் பெருமையை நிலை நாட்டுவோம் எனவும் எதிர்கால சந்ததியினரை தமிழ் பற்றோடு வழிநடத்திச் செல்வோம் எனவும் இந் நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

தமிழைக் கற்போம்! தமிழை வளர்ப்போம்!

உங்கள் கவனத்திற்கு