பிப்ரவரி 21, சர்வதேச தாய் மொழி தினம்

ஒரு மனிதனுடன் அவர் புரிந்துகொள்ளும் மொழியில் பேசினால், அது அவரது அறிவைச் சென்றடையும். அவருடன் அவரது சொந்த மொழியில் பேசினால், அவருடைய இதயத்தை அடையும் ” – நெல்சன் மண்டேலா

1999 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (unesco) பிப்ரவரி 21 ஆம் திகதியை சர்வதேச தாய் மொழி தினமாக அறிவித்தது. இது பன்மொழி, கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு சிறப்பு நாளாக கருதப்படுகிறது.  உலகெங்கிலும், மக்களும் அமைப்புகளும் சர்வதேச தாய் மொழி தினத்தை சமூக ஊடக பதிவுகள், பட்டறைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளூடாகக் கொண்டாடிவருகின்றன.

இன்றைய வங்காளத்தேசத்தின் தலைநகரான டாக்காவில் 1952 பிப்ரவரி 21 ஆம் திகதியன்று தங்கள் மொழியான வங்காளத்தை இரண்டு தேசிய மொழிகளில் ஒன்றாக அங்கீகரிப்பதற்காக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது சில மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாக இந் நாள் சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.  

தாய்மொழி என்றால் என்ன?

ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து கற்றுக் கொள்ளும் முதல் மொழியாக தாய்மொழி வரையறுக்கப்படுகிறது, அதனாலேயே தாய்மொழி என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, குடும்ப உறவுகளில், சிறு குழந்தைகள் பாட்டி மற்றும் தாய்மார்களின் பராமரிப்பில் வளர்வதால் அவர்களிடமிருந்து அவர்கள் முதல் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். இதை ஒரு சொந்த மொழி என்று அழைக்கலாம். “மக்கள் தங்கள் முதல் மொழியை தங்கள் தாய்மார்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள் ” என்று மொழியியலாளர்களும் கூறுகிறார்கள்.

தாய்மொழியைப் பேசுவது ஒரு நபரின் ஆளுமையை வரையறுக்கிறது. இது ஒருவரின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வடிவமைக்க உதவும். இது கல்வியறிவுத் திறன், இரண்டாம் மொழி கற்றலுக்கான திறன்கள் மற்றும் விமர்சன சிந்தனை போன்ற உள்ளார்ந்த திறன்களை மேம்படுத்துகிறது.

அத்துடன், இது குழந்தைகளின் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதாவது, தாய்மொழியில் சரளமாக இருக்கும் குழந்தைகள் தங்கள் அறிவுசார் மற்றும் அறிவாற்றல் திறனை வேகமாக வளர்த்துக் கொள்ளக்கூடியவர்களாக நம்பப்படுகிறது. பல ஆய்வுகள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்கும் மாணவர்கள் வேறு மொழியில் கற்பிக்கப்படும் மாணவர்களை விட கல்வியில் உயர்ந்த நிலையை வெளிப்படுத்துகின்றனர் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. மேலும், தாய்மொழியைப் பேசக் கற்றுக் கொள்ளப்படும் குழந்தைகள், அவர்களின் எழுத்தறிவு திறன் வலுவாக இருப்பதால், அவர்களுக்கு வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது என்று அறியப்படுகிறது.

புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்கள் வழக்கமாக தங்கள் குழந்தைகள் தங்கள் புதிய நாட்டின் மொழியைப் பேச ஊக்குவிப்பதன் மூலம் புதிய சூழலுக்கு ஏற்ப வாழவேண்டும் என்று விரும்புவதால் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்பித்தலில் ஆர்வம்காட்டுவதில்லை. இதுவே குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிட காரணியாக அமைகிறது. ஆனால் இன்றைய சூழலில், அவர்களின் தாய்மொழியைப் பேசுவது பெருமைக்குரியது. இது அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது. மேலும், அவர்களின் தன்நம்பிக்கையை அதிகரிக்கிறது.

நமது தாய்மொழி எமது இன அடையாளத்தையும் தனித்துவத்தையும் வழங்குகிறது. எனவே, எமது கலாச்சாரம் வரலாறு மற்றும் அடையாளத்தை அழியாமல் எமது பிள்ளைகளுக்கு, அடுத்த சந்ததியனுருக்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான ஊடகம் தாய்மொழியே ஆகும்.

உங்கள் கவனத்திற்கு