தடைகளை உடைத்து முள்ளிவாய்க்கால் கடந்து புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழர் படை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முல்லைத்தீவில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாயை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு உரிய தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது அறிந்ததே.
நேற்றையதினம் திருகோணமலை புல்மோட்டையில் பேரணி வாகனங்களுக்கு ஆணி வைத்த காடையர்களின் அட்டூளியத்தினால் மயிரிழையில் பல வாகனங்கள் சேதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் அலைகடலென மக்கள் திரள முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் தாண்டி புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்திருக்கிறது. குறித்த போராட்டத்தில் பல்லின மக்களும் அரசியல் தலைமைகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பூரண ஆதரவுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மேலும் வலுப்பெற்று தொடர்கிறது.

உங்கள் கவனத்திற்கு