சிறீலங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாக்கிய தாயக, புலம்பெயர் தமிழர்கள்

2வது நாளாக தொடரும் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” தமிழினத்தின் உரிமைக்கான போராட்டம் மிகவும் உணர்வுபூர்வமாக இன்று (04.02.2021) இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி, காத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்திற்கு சென்று அங்கிருந்து தற்போது தமிழீழ தலைநகரான திருகோணமலையை சென்றடைந்துள்ளது.

மொத்தம் 550 கிலோமீற்றர் தூரத்தை கொண்ட இந்த நடை பயணப் போரட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வழி எங்கும் தமது பேராதரவை வழங்கி வருகின்றனர் . குறிப்பாக முஸ்லிம் மக்களும் இப்பேரணியில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்குவது எமது உரிமைக்கான போராட்டத்திற்க்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைகிறது.
புலம்பெயர் தேசங்களில் நோய்தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளே கிடைத்தபோதும் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நீதியின் எழுச்சி போராட்டத்திற்க்கு பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் குரலை ஓங்கி ஒலித்தனர். தமிழின அழிப்பின் ஆதாரங்களை மிகவும் தெளிவாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தப்பட்டது வேற்றின மக்களின் கவனத்தை ஈற்றிருந்தது.
தமிழர் தாயகத்திலும், புலத்திலும் நீதிக்கான எமது போராட்டம் சரியாக பயணிக்கும் போது எமது இனத்தின் விடியலும் தொலைவில் இல்லை.