மனஅழுத்தம் என்றால் என்ன?

நாங்கள் மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம், ஆனால், உண்மையில் மனஅழுத்தம் என்றால் என்ன?

மனஅழுத்தம் என்பது ஒரு நோய் ஆகும். இன்னும் துல்லியமாக, ஒரு நபரின் மனநிலையை அல்லது மனநலத்தை தொடர்ச்சியான வழியில் பாதிக்கும் ஒரு மனநோய் ஆகும். மனஅழுத்தத்தினை துன்பத்துடன் குழப்பித்துக்கொள்ளக் கூடாது. மனஅழுத்தம் சில சந்தர்ப்பங்களில் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடிக்கும் என்றாலும், சூழ்நிலையைச் சார்ந்த மனநிலையாகவே உள்ளது. இது காலப்போக்கில் கடக்கப்படுகிறது.

உலக மக்கள்தொகையில் குறைந்தது 15% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும், பெண்கள் சராசரியாகவே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அறிகுறிகள்:

மனஅழுத்தத்தை நன்கு புரிந்து கொள்ள, வெவ்வேறு அறிகுறிகளை உற்றுநோக்குவது நல்லது. இவற்றை பின்வருமாறு பிரிக்கலாம்:

புலனுணர்வு சார்ந்த அறிகுறிகள் = கவனமின்மை, முடிவுகளை எடுப்பது மற்றும் நினைவாற்றலில் சிரமம். கூடுதலாக, கடந்த காலங்களில் செய்த சிறிய தவறுகளை மேன்மேலும் நினைவில் கொள்ளல், குற்ற உணர்ச்சி போன்ற ஒரு வித போக்கை உள்ளடக்குகிறது.

உணர்வாற்றல் சார்ந்த அறிகுறிகள் = எதிர்மறை உணர்வு மற்றும் எண்ணங்கள் தோன்றுதல். வாழ்க்கையினை வேதனையுடன் வாழ்வது போலவும் இனி எந்தவொரு இன்பத்தையும் அனுபவிக்க முடியாது போன்ற கருத்து நிலாவுதல். கூடுதலாக, சமூகத் தொடர்புகளைத் தவிர்த்து தற்கொலை பற்றி சிந்திக்கத் தொடங்குவர்.

உந்துதல் சார்ந்த அறிகுறிகள் = உடலியக்கம் சார்ந்த செயல்பாடு இல்லாத நிலையில் கூட சோர்வாக உணரக்கூடிய போக்கு. மிகச்சிறிய பணிகளுக்கு கூட அதிக முயற்சி எடுப்பதாக உணருதல்.

நடத்தை சார்ந்த அறிகுறிகள் = எடை இழப்பு அல்லது உணவு மட்டுமே ஆறுதலின் ஆதாரமாகக் கருதப்படும் பட்சத்தில் எடை அதிகரிப்பு காணப்படலாம். தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் மற்றும் உடல் மந்தநிலையின் அதிகரிப்பு. 

உடல்நலம் சார்ந்த அறிகுறிகள் = தலைவலி, படபடப்பு, விரைந்த இதயத் துடிப்பு, தசை, எலும்புகள், மூட்டுகள் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் வலிகள். குழப்பம் அல்லது வெறுமை போன்ற மனநிலையில் காணப்படுவர்.

காரணிகள்:

  • நோயெதிர்ப்பு மண்டலத்தின் மாற்றம் முற்றிலும் சீரற்ற முறையில் நிகழும் போது மனச்சோர்வின் காரணங்கள் உயிரியல் ரீதியாக இருக்கலாம்.
  • குடும்ப சூழ்நிலைகளினால் ஏற்படும் பாதிப்பு, அழுத்தங்கள் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகள், குடும்பப் பிரச்சினைகள், உடல் நோய்கள், வேலை இழப்பு அல்லது மரபணு காரணிகள் உளவியல் / சமூக ரீதியாக இருக்கலாம். 
  • எவ்வாறாயினும், மரபு வழியாகவும்  மனஅழுத்த நோய் வரலாம். இதனால் சில குடும்பங்களில் அதிக பேருக்கு மனச்சோர்வு நோய் இருப்பதை காணலாம்.

தமிழீழத்தில் போருக்குப் பிந்தைய உளவியல் தாக்கங்கள்

வான்வழி குண்டுத் தாக்குதல், சித்திரவதை, கடத்தல், தடுப்புக்காவல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற அதிர்ச்சிகரமான தருணங்களை ஏராளமான தமிழ் பொதுமக்கள் கண்டிருக்கிறார்கள் அல்லது நேரடியாக அனுபவித்திருக்கிறார்கள். மேலும், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, சிங்கள தேசியவாத ஒடுக்குமுறைகளால், அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் சிறியவையாகவே இருந்து வருகிறது.

இந்த நிகழ்வுகளாலும் மற்றும் ஒருவரின் எதிர்காலம் குறித்த இயலாமையின் நிலைமைகளால் ஏற்படும் மனஅழுத்தம், கவலைக் குறைபாடுகள் மற்றும் பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் (P.T.S.D) போன்றன உளவியல் குறைபாடுகளின் வளர்ச்சியில் தீர்க்கமான காரணிகளின் ஒரு பகுதியாகும். இந்த எதிர்மறையான விளைவுகள் அனைத்தும் குடிப்பழக்கம் மற்றும் குடும்ப வன்முறை அதிகரிப்புக்கு காரணிகளாக அமைகின்றன. இந்த அனுபவங்களின் மற்றொரு கடுமையான விளைவு “தற்கொலை”. இது உளவியல் ரீதியான உதவிகள் இல்லாத காரணத்தினாலும் இப்படியான முடிவுகளுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால்தான் உலகிலேயே அதிக தற்கொலை விகிதங்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் ஒன்று என்பது தற்செயலான நிகழ்வு அல்ல.

புலம்பெயர்ந்தோர் மத்தியில் போருக்குப் பிந்தைய உளவியல் தாக்கங்கள்

கருப்பு ஜூலை என அழைக்கப்படும் 1983 ஜூலை கலவரத்தின்போது, ​​பல தமிழ் பொதுமக்கள் சிறந்த எதிர்காலத்தைக் பெறவேண்டும் என்ற நம்பிக்கையில் இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்தனர். ஆயுத மோதல்களின் போது ஏற்பட்ட மனஉளைச்சளுக்கு மேலதிகமாக, புலம்பெயர்ந்தோர் தங்கள் தாயகத்திலிருந்தும் அன்பானவர்களிடமிருந்தும் பிரிவினை ஏற்க வேண்டியிருந்தது. மேலும், ஒரு புதிய மற்றும் முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்திற்கு விரைவாக தங்களை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. இந்த ஒருங்கிணைப்பு செயல்பாட்டின் போது பெரும்பாலும், முந்தைய கடந்த காலத்தில் கண்டறியப்படாத அதிர்ச்சிகள் PTSD, மனச்சோர்வு, பதகளிப்பு மற்றும் கவலைக் கோளாறுகள் போன்றவை உளவியல் குறைபாடுகளாக மாற்றமடைகிறது.

பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள், ஆபத்தானவர்கள் என்று முத்திரை குத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இனப்படுகொலைக்கு உள்ளார்ந்த உரையாடலைத் தவிர்க்கிறார்கள், சில சந்தர்ப்பங்களில் அதை மறுக்கிறார்கள். இருப்பினும், இந்த நடத்தைகள் நிலைமையை மோசமாக்குவதைத் தவிர வேறொன்றும் செய்யாது. மேலும், எதிர்கால சந்ததியினருக்கு உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க, புலம்பெயர் தமிழர்கள் அவர்களின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், தங்கள் சொந்த அடையாளத்தையும் மறுக்கக்கூடாது என்பதும், இவற்றினை தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவதும் அவசியமாகும்.

மனச்சோர்வின் வகைகள்

மனஅழுத்தத்தில் பல வடிவங்கள் உள்ளன, அவற்றுள்:

  • எதிர்வினை மனஅழுத்தம் = வலிமிகுந்த நிகழ்வுகளுக்குப் பிறகு நிகழ்கிறது. உணர்ச்சி பலவீனம், தூக்கமின்மை மற்றும் நீடித்த சோகம் ஆகியவற்றின் வெளிப்பாடு உள்ளது. எதிர்வினை, நிகழ்வின் உண்மையான அளவிற்கு ஏற்றதாக இருப்பதில்லை.
  • குழந்தை பருவ மனஅழுத்தம் = பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. அவர்கள் தனிமை நோக்கிய போக்கைக் காட்டத் தொடங்குவார்கள். தாழ்வு மனப்பான்மை, மரணம் பற்றிய எண்ணங்கள் மற்றும் ஆர்வமின்மை போன்றவை வெளிப்படுகின்றன. வாந்தி, வயிற்று வலி மற்றும் பயம் போன்ற அறிகுறிகளும் அவர்களுக்குள் எழக்கூடும்.
  • இளம் பருவ மனஅழுத்தம் = எளிதில் எரிச்சல் அடையக்கூடிய மனநிலை இந்த காலகட்டத்தின் காரணமாக ஏற்படுகிறது. சிறுவர்கள் மற்றவர்களால் செவிசாய்க்கப்படுவதில்லை, புரிந்து கொள்ளப்படுவதில்லை என்ற உணர்வு அவர்களுக்கும் ஏற்படுகிறது. தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் எந்தவொரு சமூக தொடர்புகளையும் தவிர்ப்பது மூலம் அவர்களின் மனச் சோர்வு வெளிப்படுகிறது.
  • முதுமைப் பருவ மனஅழுத்தம் = இது 60 முதல் 70 வயதிற்குட்பட்ட வயதானவர்களை பாதிக்கிறது மற்றும் கவலை, கிளர்ச்சி, எரிச்சல் மற்றும் அடிக்கடி மாயத்தோற்றம் (பிரமை) ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது. நினைவாற்றல் மற்றும் கற்றல் குறைபாடுகள், உடலியக்கமின்மை அல்லது மன குழப்பம் போன்றவற்றால் அவர்களின் உடல் நிலைப்பாடு மேலும் சிக்கலாகிறது.
  • மகப்பேற்றுக்கு பிறகான மனஅழுத்தம் = பிரசவத்தைத் தொடர்ந்து வரும் காலகட்டத்தில் பெண்களிடையே அதிகம் வெளிப்படும் ஒருவகை மனச்சோர்வின் வடிவமாகும். மிகவும் கடுமையான நிகழ்வுகள் பொதுவாக குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நிகழ்கின்றன. பெண் தனது குழந்தையை சரிவர கவனிக்க இயலாமையால் அவர் தன்னிலையிழத்தல், பதற்றம், மனப்பிரமைகள், மருட்சி மற்றும் ஒழுங்கற்ற மற்றும் அசாதாரணமான சிந்தனை மற்றும் பேச்சு போன்றவற்கு முகக்கொடுக்கப்படலாம். சில சமயங்களில் சிசுக்கொலை போன்ற தீவிர நிகழ்வுகளும் இதனால் நடைபெறுகிறது.

மனஅழுத்தத்திற்கான மருத்துவம்  

உளவியல் மற்றும் மனநல மருத்துவர்கள் மனஅழுத்தச் சிகிச்சையில் முக்கிய நிபுணர்களாக உள்ளனர். ஒருவரின் நோயின் தீவிரத்தைப் பொறுத்து அவருக்குரிய வைத்தியம் மருத்துவர்களால் வழங்கப்படும். பொதுவாக அது புலனுணர்வு சார்ந்த சிகிச்சை அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மூலமான சிகிச்சையாக இருக்கும் .

புலனுணர்வு சார்ந்த சிகிச்சையில், நோயாளியின் மன நிலையில் கவனம் செலுத்தப்படுகிறது. அதாவது, அவரது சிந்தனை வழிகளை மறுசீரமைக்க முயற்சிப்பது மற்றும் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களைச் சமாளிப்பதற்கான உத்திகளை அவருக்குக் கற்பித்தல் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன. கூடுதலாக, அந் நபர் முன்னர் கைவிடப்பட்ட வேலைகளை படிப்படியாக மீண்டும் தொடங்க அழைக்கப்படுகிறார், மிகவும் பிடித்தவற்றிலிருந்து தொடங்க ஊந்தப்படுகிறார்.

பொதுவாக மனச்சோர்வடைந்த அனைவரையும் குணப்படுத்த பொதுவான ஒரு சிகிச்சை இல்லை என்பதை நினைவில் கொள்க. ஒவ்வொரு நோயாளியும் தனிப்பட்ட சிகிச்சைகளுக்கு வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். எனவே தங்களின் சிகிச்சையை நிபுணர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் மருத்துவர்களால் மட்டுமே மிகவும் பொருத்தமான சிகிச்சையை பரிந்துரைக்க முடியும்.

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மருத்துவ அறிக்கை

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் அனுபவத்தையும் அதிலிருந்து அவர் எவ்வாறு குணமடைய முடிந்தது என்பதையும் நாங்கள் கீழே கொண்டுவந்துள்ளோம்.

உதவி தேவை என்பதை அங்கீகரிப்பதே முதல் பெரிய படி. நான் படுக்கையில் படுத்துக்கொண்டிருந்த முழு நாட்களையும் இன்னும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். உண்மையில் நான் சலித்துவிட்டேன் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன், எனது மனநலம் சரியில்லை என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதே உண்மை.
உயர்நிலைப் பள்ளியின் கடைசி ஆண்டில் எனது மனஅழுத்தம்
உச்சத்தை அடைந்தது. எனது தயக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு மனநல மருத்துவரிடம் அணுகவேண்டும் என்று முடிவு எடுக்கும் வரை நான் பல நாட்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்த்துவந்தேன்; தனிமையில் அதிக நேரம் செலவிட்டேன்; என் மனச்சோர்வின் காரணங்களைப் புரிந்துகொள்வதற்கும், அது என் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைப் போலவே, அதன் மீதும் என்னால் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும் என்பதை உணரவும் இந்த சிகிச்சை எனக்கு உதவியது. காலை உணவை உட்கொள்வது போன்ற சிறிய பழக்கங்களை மீண்டும் தொடங்குவதன் மூலம் எனது முந்தைய வாழ்வுக்கு திரும்ப ஆரம்பித்தேன். எனது வழக்கமான தினசரி வழக்கத்தை அடையும் வரை சிறிய ஆனால் நிலையான முன்னேற்றத்துடன் தொடர்ந்தேன்.

எனது பாதை நீளமாக இருந்தது, சில நேரங்களில் அது முடிவற்றதாகத் தோன்றியது, ஆனால் இறுதியில் நான் மன அழுத்தத்திலிருந்து வெளியேற முடிந்தது. நான் ஒரு நிபுணருடன் கலந்தாலோசித்திருக்காவிட்டால் இந்த மைல்கல் சாத்தியமில்லை என்பதை நான் உணர்கிறேன். ஏனென்றால் மனஅழுத்தம் என்பது ஒரு நோயாகும், இது தனி நபராக கையாளப்படவேண்டிய விடயமல்ல!

முடிவுரை

இந்த கட்டுரை பொதுவாக மனஅழுத்தத்தைப் புரிந்துகொள்ளவும், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை குறைத்து மதிப்பிடவும் உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம்.

நீடித்த மற்றும் ஒரே நேரத்தில் பல அறிகுறிகள் தோன்றினால், உங்கள் குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ள தயங்காதீர்கள். அவர் உங்களுக்குரிய ஆரம்ப மருத்துவ மதிப்பீட்டை வழங்க முடியும் மற்றும் உங்களை மிகவும் பொருத்தமான சிகிச்சை பாதைக்கு அழைத்துச் செல்வார்.

ஒருவர் தனது அடையாளத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வது, குறிப்பாக தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு உளவியல் கோளாறுகள் காரணமாக உருவாகும் எதிர்மறையான விளைவுகளைத் தடுக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு அல்லது நீங்கள் ஒருவரிடம் பேச வேண்டியிருந்தால், எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

உங்கள் கவனத்திற்கு