நடுகல் வரலாறும் மாவீரர் துயிலும் இல்லங்களும்

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும்.
வீரன்கல், வீரக்கல், நடுகல், நினைவுத்தூண் என்றும் இக் கற்கள் அழைக்கப்படுகிறன.

தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே இந்நடுகற்கள் இருப்பது கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருகாலத்தில் நாவலந்தீவு என அழைக்கப்பட்ட இந்தியா முழுவதையும் தமிழர்களே ஆண்டதன் கரணியமாக அங்கு எல்லாப் பிரதேசங்களிலும் நடுகற்கள் காணப்படுவது சாத்தியமாகிறது.

நடுகற்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், நடுகற்களிலுள்ள எழுத்துக்கள் தனித்தமிழ் எழுத்தாகவோ, கிரந்தமும் தமிழும் கலந்த எழுத்தாகவோ, தனி வட்டெழுத்தாகவோ, அல்லது வட்டெழுத்தும் தமிழும் கலந்த எழுத்தாகவோ உள்ளன என்று பதிவிட்டுள்ளார்கள். சமற்கிருதம் என்ற வட எழுத்து ஒரு நடுகல்லிலும் காணப்படவில்லை என்பதிலிருந்து தமிழர்களே நடுகல் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பது வெள்ளிடைமலை.

வீரச்சாவு அடைந்தவருக்கு நடுகல் நட்டனர் என்பதை வள்ளுவரும் குறிப்பிடுகிறார்.

” என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலரென்னை முன்னின்று கல் நின்றவர்.”

குறள்-771

“பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள். என்னுடைய தலைவரை எதிர்த்து நின்று கல்லாய்ப் போனவர் பலர்.” என வள்ளுவர் கூறுவதிலிருந்து, அந்த நாட்களில் நடுகற்கள் வழக்கத்திலிருந்தன என்பது உறுதியாகின்றது.

சங்க இலக்கியங்களில், போரில் வீர மரணம் அடைந்த ஆடவரைப் போற்றி வணக்கம் செய்யுமுகமாக நடப்பட்ட கற்களே நடுகற்கள் எனக்கூறப்படுகிறது. சங்க கால மக்கள் அக்கல்லுக்கு நீராட்டி, நெய் தடவி, புகை காட்டி, தீபமிட்டு வழிபட்டனர்.

கோவலர் என்போர் ஆநிரைகளை வைத்திருப்பவர்கள். கோ என்றால் பசு. சங்க காலத்தில், கோவலர்கள் வேலைக் கையில் பிடித்துக் கொண்டு ஆநிரைகளை மீட்டு வருவர். அப்போது வில் எய்து வீழ்த்தப்பட்டால், அந்த மறவனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். சங்க கால நூலாகிய புறநானூற்றில் புறத்திணையில் வெட்சி எனப்படுவது ஆநிரைகளைக் கவர்ந்து செல்லுதல். அதை மீட்டு வருவது கரந்தை எனப்படுகிறது.

வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்காக நடைபெற்ற கரந்தைப்
போரில் உயிர் நீத்த வீரனுக்கு ஊர்மக்கள் கல் நாட்டினர்.

பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம் பூங்
கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்……

புறநானூறு 264

“பரல் கற்கள் கொண்ட மேட்டு நிலத்தில் மரல் பூக் கொண்டு பூ மாலை தொடுத்து அதனைக் கல்லுக்குச் சார்த்தி இறந்த வீரனுக்குக் கல் நாட்டினர். அவன் நடுகல் ஆனான்.”

என்கிறது புறநானூற்று வரிகள்.

தொல்காப்பியர் காலத்திற்கும் பல நூற்றாண்டுகள் முன்னதாக தோன்றிய இந்த நடுகல் வழிபாடு தமிழர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் வீரச் செயல்களையும் இறந்துபட்ட வீரர்களின் புகழையும் வெளிப்படுத்தும் சாதனமாக அமைகிறது.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்த அடங்காப்பற்று வன்னி மண்ணின் மாவீரன் பண்டாரவன்னியனின் நடுகல் தமிழீழத்தில் கற்சிலைமடு என்னுமிடத்தில் காணப்படுகிறது.அங்கு காணப்பட்ட பண்டாரவன்னியனின் சிலை சிங்கள இனவெறி அரசினால் 2009 போரின் பின் சிதைக்கப்பட்டது.
பின்னர் 2016 இல் மீண்டும் தமிழ் மக்களினால் அச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அடங்காப்பற்று பண்டாரவன்னியனின் வீரத்தை எண்ணி வியந்த ஆங்கிலேயன், தானே அவனுடைய பெயர் எழுதி, நடுகல் நாட்டிச் சென்றான்.

இவ்வாறு வீரர்களுக்கான கல்வெட்டில் அவ் வீரருக்கான பெயரும் புகழுக்கான வீரச் செயலும் பொறிக்கப்பட்டு நடப்பட்டன.

மறவர் பெயரும் பீடும் எழுதி

அகநானூறு 67

மக்கள் நடுகற்களுக்கு வணக்கம் செலுத்தினர். நாள்தோறும் நடுகல்லை வணங்கினால் மழை குறைவின்றிப் பெய்து நாடு செழிப்படையும் என்றும், பெண்கள் தமது கணவனுக்கும் அரசனுக்கும் போரில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை கொண்டு தூப தீபம் காட்டி வழிபட்டனர்.

போரிட்டு வீரச்சாவு அடைந்தவர்களின் கற்களே பெரு மதிப்புப் பெறுகின்றன. தமிழ்ப் பேராசிரியர், பாவலர், எழுத்தாளர், தமிழ்த் தேசியச் சிந்தனையாளர் போன்ற இன்னும் பல தகுதிகளைக் கொண்ட சாலை இளந்திரையன் நடுகல் பற்றிக் கூறும் போது, ஓங்கு புகழ் கற்கள் என வருணிக்கிறார்.

இம் மாவீரர் கற்கள் பல்லில்லாத முதியவருக்கும் உள்ளத்தில் வீரத்தைத் ஊட்ட வல்லது என்கிறார். மேலும் அவர், தன் நாட்டில் மேலாண்மை செய்ய எண்ணும் மாற்றானைத் தன் மண்ணிலிருந்து விரட்டியடிக்க வீரஞ் செறிந்த போர்க்களத்தில் நின்று போரிட்டு வீரச்சாவைத் தழுவிய மாவீரரின் கற்கள்தான் தமிழர் போற்றத்தக்க கற்கள் என்கிறார்.

ஆம்! இக் கற்களைத்தான் எமது இயக்கம், விடுதலைப் புலிகள் மாவீரர் துயிலும் இல்லங்களில் வைத்து வணக்கம் செலுத்தி வந்தனர். அதைக் கண்டு ஆற்றாத, ஜனநாயகமற்ற சிங்கள இனவெறி அரசு அனேக துயிலுமில்லங்களைச் சிதைத்தழித்துள்ளது. அந்த இடங்களை அழித்து ஒழித்தாலும், தமிழ் மக்களின் இதயத்தில் கொண்டுள்ள இடங்களை யாராலும் அழிக்க முடியாது.

மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக் கற்கள் முதலியவற்றை உள்ளடக்கிய பிரதேசம் மாவீரர் துயிலும் இல்லம் எனப்படுகிறது. இந்த துயிலுமில்லங்களானவை சங்கத்தமிழர்களின் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகவே
காணப்படுகிறது.

தமிழீழமெங்கும் நாடளாவிய வகையில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பெருமெடுப்பிலான அளவில் துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் பெருவாரியான நடுகற்கள் காணப்பட்டன. அவை சிதைத்தழிக்கப்பட்டு அதில் இப்போது படை முகாம்கள் கட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் நிலம் புதர் மண்டிக் கிடக்கிறது.

உறங்காத கண்மணிகள், கரும்புலிகள், ஓயாத அலைகள் என்று பல கோணங்களில் எமது மாவீரர்கள் தமது வழ்வையே ஈழ விடுதலைக்காக, இனத்தின் விடுதலைக்காக ஈந்துள்ளனர்.

ஒரு படை வீரன் காட்டு முயலுக்கு அம்பு எய்வதிலும் பார்க்க கொல்லமுடியாத யானை மேல் அம்பெய்யவே முற்படுவான். இவ்வாறான தன்மை கொண்ட வீரனின் மரணம் மதிப்பு மிகுந்தது; போற்றத்தக்கது. உலக வல்லரசே விடுதலைப் புலிகளுடன் மறைமுகமாக நின்று போராடியது. போரறந் தவறிய முறையில், தடை செய்யப்பட்ட கந்தகக் குண்டுகள், கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டன. அயல் நாடான இந்தியாவும் எமக்குத் துரோகம் செய்தது

இந்த வகையில் எமது மாவீரரின் புகழ் வானைத் தொடுமளவுக்கு உயர்ந்தது. அவர்களை என்றும் வழிபடுவோம்! அவர்களை என்றும் பூசிப்போம்!! மாவீரர் நினைவு நாளில் தவறாது பூக்கொண்டு தீபமேற்றி வழிபடுவோம்.

உங்கள் கவனத்திற்கு