இளையோர் கண்ட தலைவன்

1954 இல் வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை-பார்வதி தம்பதியருக்கு பிறந்தார் எமது தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். உலக அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும் சிறு வயதிலிருந்தே மிகவும் ஆர்வம் கொண்டவர். தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக வீசிய இனவெறிக் காற்று எமது தேசியத் தலைவரின் சினத்தை தூண்டியது. அகிம்சை வழியல் எமக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று புரிந்து கொண்ட எம் தலைவர் ஆயுதப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

நாம் எமது வரலாற்று தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவத்துடன் வாழ வேண்டும்

என்ற கோரிக்கையுடன் 1976 இல் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’  எனும் இயக்கத்தை உருவாக்கினார். இளைஞர்களும், மாணவர்களும் தமிழீழத் தாகத்துடன் இந்தப் போராட்டத்தில் ஒன்று திரண்டு இணைந்து கொண்டனர். தமிழர்கள் என்றால் இளக்காரமாக பார்த்த இலங்கை அரசாங்கம், தமிழர்களின் ஆற்றலையும், விவேகத்தையும் பார்த்து அச்சம் அடைந்தனர்.

உலகமே நிராகரித்த தமிழ் இனத்தை, எம் தலைவரின் ஆழுமையால் தலை திரும்பிப் பார்த்தனர். தரை, கடல், வான் என முப்படை பலத்தைக் கொண்டு சிங்கள இன வெறியர்களை கதிகலங்க வைத்த முதல் தமிழ் வீரன் எம் தலைவர். தனி நாடு, தன்னாட்சி, தாயகம் எனப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள், நாளுக்கு நாள் வளம் பெற்று ஒரு தனி அரசாங்கமாகவே திகழ்ந்தனர். ஆயுதப் போராட்டம் மட்டுமல்லாமல், ஒரு தனி நாட்டுக்கு அவசியமான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கினார். இந்த அமைப்புகள் ஊடாக ஒரு சமூக சீர்திருத்தமும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த பெண்கள் கட்டளையிடும் நிலைக்கு வந்ததும் எம் தலைவரால் தான், மொழிக் கலப்பால் இனம் அழிந்து விடும் என செந்தமிழை வலுப்படுத்தியதும் எம் தலைவர் தான்.

இவ்வாறு, பெண்ணடிமைத்தனமற்ற, சாதி முரண்பாடுகளற்ற, ஏற்றத்தாழ்வுகளற்று  நவீன சிந்தனைகளை அடிப்படியாகக் கொண்டதுதான் எம் தலைவரின் புரட்சிகரமான தமிழீழத் தேசம்.

தமிழீழ விடுதலையை முழுமூச்சாக சுவாசித்த எம் தலைவரின் 66வது அகவை நாளாகிய இன்று, புலத்தில் வாழும் இளையோர்களாகிய நாமும் அவரின் தலைமையை தலை வணங்குகிறோம்.

தமிழீழ மண்ணில் நாங்கள் பிறக்காவிட்டாலும் தேசப் பற்றையும், தமிழீழ சுதந்திர வேட்கையும் சொல்லித் தந்தது எம் தலைவர் தான். எம் தலைவரின்  முற்போக்குப் பார்வை உள்ளடங்கிய ஒரு புரட்சிகரமான தலைமை உலகத்தை மட்டும் வியக்கவில்லை, எங்களையும் வியக்க வைத்தது. அன்றும், இன்றும் தமிழீழம் என்ற தேசம் மலர்வதற்கு தீர்க்கமாக இருப்பது ஆயுத பலமோ, ஆட்பலமோ இல்லை, பலமான மனவுறுதி மட்டும் தான் என்று சொல்லித்தந்தார். ஆயுதப்போர் மௌனிக்கப்பட்டதால் எமது போராட்டம் முடிந்து போகவில்லை, எம் விடுதலைக்காக நாம் இன்னும் வெகு தூரம் தளராத மனவுறுதியுடன் பயணிக்க வேண்டும் என்பதை உணர வைத்ததும் எம் தலைவர் தான்.

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை

என்ற எம் தலைவரின் சிந்தனைக்கு அமைய, தமிழீழம் நோக்கிய பயணத்தில் இளையோராகிய நாமும் முழுமூச்சுடன் தேசத்துக்காக போராட வேண்டும்.

வழுவாத நேர்மையும், தவறாத ஒழுக்கமும், சளைக்காத உறுதியும் என முடிவற்ற பட்டியல் எம் தலைவர் நிறைந்திருந்த பண்புகள். இந்த பண்புகள் நிறைந்த மேதகு வே. பிரபாகரன் எமது தேசியத் தலைவர் என்பதில் இளையோர் ஆகிய நாம் பெருமிதம் அடைகிறோம்.

எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக. ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்”.

என்ற தலைவரின் கனவு நனவாகும் வரை இளையோர் ஆகிய நாம் தொடர்ந்து போராடுவோம்!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!