340 அகவை காணும் இத்தாலி தேசத்து தமிழர் வீரமாமுனிவர்

தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் யாரென்று நாம் பட்டியலிட்டோமானால் அதில் பிற மதத்தவரும் பிற இனத்தவர்களும் என அனேகமானவர்கள் இடம்பெறுவர். தமிழுக்கு தமிழர் தொண்டு செய்வது என்பது பெரிய விடயம் இல்லை. நாம் வாழும் நாடான இவ் இத்தாலி நாட்டில் பிறந்து கப்பல் மூலமாக தமிழகத்திற்குச் சென்று ஏறத்தாழ 32 வருடங்கள் அவருடைய மதத்தினைப் பரப்பும் நோக்கில் சென்றிருந்தாலும் கூட தமிழ் மொழியினை கற்று, 23 தமிழ் நூல்கள் எழுதி சதுரகராதி என்னும் அற்புதமான அகராதியை உருவாக்கி தமிழிலேயே உரைநடையை உருவாக்கிய பெருமை உடையவர் யார் என்று பார்த்தோமானால், Costantino Giuseppe Beschi என்ற இயற்பெயருடைய
வீரமாமுனிவர் தான் இத்தனை பெருமைக்கும் உரியவர்.

1680 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த இவர் 1710 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு செல்கிறார். இவர் ஆரம்பத்தில் தனது மதத்தை பரப்புவதற்காகவே தமிழைக் கற்கின்றார். பின்பு அவருக்கு தமிழ் மீது மிகுந்த பற்று ஏற்படுகின்றது. தேம்பாவணி என்ற காப்பியத்தை எழுதுகின்றார்.
காப்பியம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. ஆனால் இவர் மிகவும் அழகான உரைநடையில் இக்காப்பியத்தை எழுதியுள்ளார்.

தமிழ் எதை சாதித்தது என்று கேட்பவர்களுக்கு நாம் திமிரோடும் பெருமிதத்தோடும் கூறுவதற்கான பதில்தான் வீரமாமுனிவர். மதத்தை பரப்புவதற்கு வந்த ஒருவருக்கு அதனை விடுத்து அம்மொழி மீது பற்று வருதல் என்பது மிகவும் ஆச்சரியமான விடயமே. இவர் முதலில் தனது பெயரினை தைரியநாதசுவாமி என்று மாற்றிக்கொண்டு பின்பு அப்பெயரில் வரும் தைரியம் என்பது வட மொழி என்பதால் நன்கு தமிழை கற்றதாலும் மொழியின் அர்த்தத்தை நன்கு விளங்கி கொண்டதாலும் தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி செந்தமிழில் வீரமாமுனிவர் என்று பெயரை மாற்றிக் கொண்டார்.
இவர் தனது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் போது “நான் கிறிஸ்தவனாக இந்தியாவிற்கு வந்தேன். ஆனால்திரும்பிப் போகும்போது ஒரு தமிழனாக செல்கின்றேன்” என்று கூறினர்.

இவர் மரணிக்கும் தறுவாயில் கூட “இறை நம்பிக்கையை பரப்புவதற்கு இந்தியா வந்தேன். ஆனால் தமிழர்கள் என்னை விட சிறந்தவர்கள் என்பதை நான் தமிழ் படித்த பின்புதான் தெரிந்து கொண்டேன்” என்று கூறினார். இலக்கிய சுவடிகளை பல இடங்களில் சென்று தேடி எடுத்ததால் இவரை “சுவடி தேடும் சாமியார்” என்றும் அழைத்தனர்.
இவர் திருக்காவலூர் கலம்பகம் என்ற நூலையும் எழுதினார். அத்தோடு தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களைச் செய்தார் .
தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலை எழுதினார். இவற்றைவிட எம் போன்ற சிறுவர்கள் படித்து மகிழும் விதத்தில் பரமார்த்தகுரு கதை, வாமன் கதை போன்ற நூல்களையும் படைத்தார்.
வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், முதலான உரைநடை நூல்களையும் ஆக்கினார். குற்றெழுத்துக்கள் மற்றும் நெடில், குறில் வேறுபாடு என்பவற்றையும் இவர்தான் அறிமுகப்படுத்தினார். தொல்மொழியில் எழுத்து வடிவத்தில் இருக்கும் அத்தனை விடயங்களும் பாட்டு வடிவில்தான் இருக்கும். அதனையெல்லாம்
உரை நடையாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.

தமிழிலக்கிய வரலாற்றிலே இத்தாலி தேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு மதம் பரப்புவதற்கு சென்ற வீரமாமுனிவர்த மிழைக் கற்று தமிழில் தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் தேம்பாவணி என்ற காப்பியத்தையும், சதுரகராதி என்ற ஓர் அகராதியையும், ஏன் உரை நடை எழுத்து சீர்திருத்தத்தையும் உருவாக்கிய பெருமை இவருக்கு மட்டும்தான் உள்ளது.

தமிழ் இலக்கிய வரலாற்றில்மறக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் நம்முடைய வீரமாமுனிவர். நாம் வாழுகின்ற நாடான இத்தாலி நாட்டில் பிறந்து தமிழை நேசித்து தமிழை தன் பெயராக மாற்றிக்கொண்டு தமிழை உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்த வீரமாமுனிவர் பிறந்த நாட்டில் நாமும் வாழ்வதையிட்டு நாம் மிகவும் பெருமை அடைகின்றோம்.

“கலைச்செல்வன் கமலத் திருவடி தலையெணி புனைந்து சாற்றதும் தமிழே” என்று தமிழைப் போற்றிய
வீரமாமுனிவரை நாமும் போற்றி அவர் வழியில் நாமும் நம்மால் முடிந்தளவு
தமிழை வளர்ப்பதில் எம் பங்களிப்பினை செலுத்துவோம்.
எம் தாய்மொழியினை நன்கு கற்று அறிவோம்.

              ஆக்கம்: Biella திலீபன் தமிழ்ச்சோலை

உங்கள் கவனத்திற்கு