குமரிக்கண்டமும் தமிழும் – பாகம் 2

காய்சினவழுதியினால் நிறுவப்பட்ட இம் முதற் கழகம் பாண்டியன் கடுங்கோன் வரை 4440 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. இக் கழகத்தைப் புரந்த பாண்டியர் எண்பத்தொன்பதின்மர் (89) இக் கழகத்திலிருந்து பாடிய புலவர்கள் அகத்தியனார், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடி நாகராயர் தொடங்கி ஐந்நூற்றுநாற்பத்தொன்பதின்மர் (549).

இக் கழகத்தில் பெருமுதுநாரை, பெருங்குருகு, களரியாவிரை போன்ற நூல்கள் இயற்றப் பெற்றிருந்தன. இக் கழகங்கள் பற்றிய செய்திகளை இறையனார் அகப் பொருளுரை என்னும் நூல் கூறுகிறது.

மேற் குறிப்பிட்ட  “திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்” என்பது சிவனைக் குறிக்கிறது. இதை விளக்கும் வகையில் தொன்மக் கதையொன்று உள்ளது. அசுரர்கள் மூன்று பறக்கும் கோட்டைகளை வைத்திருந்து மக்களுக்குத் துன்பம் செய்தனர் என்றும் அக் கோட்டைகளைச் செங்கோன் எனப்பட்ட சிவன் எரித்து அழித்தான் என்பதும் அதிற் கூறப்பட்டுள்ளது. அதனால் சிவன் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் பெயர் பெற்றிருந்தான்.

அடுத்து, முருகன் குறிஞ்சி நிலக் கடவுள் என்று போற்றப்படுபவன், குறிஞ்சி மாநிலத்திலுள்ள குன்றுகளிலிருந்து வேல் வீசி பகைவர்களை அழிப்பதனால் “குன்றெறிந்ந முருகவேள்” எனக் கூறப்பட்டான். அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் என்ற முருகனின் புகழ் பாடும் பாடலொன்றில் “முப்புரமெரிசெய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா” என முருகனைப் புகழ்ந்து பாடுகின்றார். முப்புரத்தை எரித்த சிவன் உறையும் தேரின் அச்சை முருகன் அழித்தான் எனப் பாடுகின்றார்.

எனவே, சிவனும்  முருகனும் தலைக் கழகத்தில் இருந்தார்கள் என்பதற்கு மேலாக ஒரே காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதையும் திருப்புகழ் வாயிலாக அறியக் கிடக்கிறது. அத்துடன் குமரிக்கண்டத்தில் முதல் அறியப்பட்ட வேந்தன் பாண்டியன் செங்கோன் என்றும் சிவன் என்றும் அறியப்பட்டான். அவன் உலகம் முழுவதும் போர் மேற் சென்று குமரிக்கண்டத்தின் பகைவர்களை அழித்தான் என்றும் சொல்லப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளுக்கும் தரைவழியாகச் சென்றிருந்தான் பாண்டியன் செங்கோன். அதைத் தீந் தமிழிற் பாடினான் கடியூர் சேந்தன் என்னும் புலவன். அவன் இயற்றிய முதற் பயண நூல் தான் மறைந்து போன ‘செங்கோன் தரைச் செலவு’  எனும் நூல் என்பது குமரிக்கண்டவரலாறு. (பயணம் என்பதன் செந்தமிழ்ச் சொல் ‘செலவு’ என்பதாகும்.)

மேலும், நாம் இன்று சிவபெருமான், முருகப் பெருமான் என்ற கடவுளரை வணங்குகிறோம். இச் செயற்பாடு “பழந்தமிழர் மூதாதையர் வழிபாட்டைக் கொண்டிருந்தனர்” எனும் கூற்றை வலியுறுத்துகிறது; மெய்ப்பிக்கிறது.

கழகங்களில் புலவரோடு புலவராக வீற்றிருந்த தமிழ் மன்னர்கள் வயல் வெளிகளில் உழவரோடு உழவராக ஏர் பிடித்தனர். ஆண்டுக் கொருமுறை ஏர் பூட்டும் முதல் நாளில் மன்னர்கள் பொன்னேர் என்னும் முன்னேர் நடத்தினர். குடை நிழலில் இருந்து கோலோச்சுவதுடன் குடி மக்கள் வாழ்வில் பங்கு கொள்வதும் தமது கடமை என்று  கருதினர். இவ்வாறு மன்னர்களும் மக்களும் நெருங்கி உறவாடி இருந்தனர்.

இவ்வாறு 4000 ஆண்டுகளுக்கு மேலாக முத்தமிழ் வளர்த்த முதற் கழகம் தோராயமாக கி.மு.4500 அளவில் அழிவுக்குள்ளாகியது. கழகம் அமைந்திருந்த தென் மதுரையை கொடுங் கடல் தனதாக்கிக் கொண்டது. அரிய செல்வங்களான நூல்களும் அந்தோ! கடலுள் மூழ்கின. தமிழ் மக்களின் கலைப் பொருட்களும் ஏற்றம் மிக்க இலக்கியச் சுவடிகளும் மூழ்கி மறைந்தன. கண்டத்தின் பெரும் பகுதியைக் கடல் விழுங்கியது. முதலில் அழிவுக்குள்ளான பகுதி தற்போது அரபிக் கடலாகவுள்ளது எனக் கூறப்படுகிறது.

தலைக் கழகம் அழிவுற்று ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பின் குமரியாறு கடலோடு கலக்கும் அலைவாய் என்னும் புகழ் சேர் துறைநகரில் மன்னன் வெண்டேரச் செழியன் 2வது கழகமான இடைக் கழகத்தை நிறுவினான். திருச்சீரலைவாய் என்று பெருமையோடு கூறப்பட்ட அந்த இடம் தற்போது கபாடபுரம் என்று வடமொழியில் கூறப்படுகிறது. 

கடைக்கழகம் ஏறத்தாழ  3500 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. கழகம் பேணிய அரசர்கள் வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை ஐம்பத்தொன்பதின்மர் (59). பாடிய புலவர்களும் ஐம்பத்தொன்பதின்மர்(59). கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலையகவல் முதலான நூல்கள் பாடப்பட்டன. அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம் முதலான இலக்கண நூல்கள் பயன்படுத்தப்பட்டன.

குமரிக்கண்ட மன்னர்கள் முத்தமிழ் வளர்த்த கைகளுக்கு முத்துக்களைக் குவித்து மகிழ்ந்தனர்; பொற் காசுகளை வழங்கிப் பூரித்தனர். செந்தமிழ்ப் பாடல்களை இயற்றியவருக்குச் செம் பவளங்களைப் பரிசளித்தனர். இதைக் கண்ணுற்ற கடலன்னைக்கு மனம் பொறுக்கவிவ்லைப் போலும்! இடைக் கழகமும் பாண்டியன் திருமாறன் காலத்தில் கடல் வாய்ப்பட்டது.

அப்போது, அங்கே நிலம் நடுங்கியது; கடல் பொங்கியது. கழகத்தில் பொன்னும் மணியும் முத்தும் பவளமும் கொட்டிச் சிதறின. செந்தமிழில் சிந்தையைச் செலுத்திய பாண்டிய மன்னன் திருமாறன் செல்வங்களைப் பொருட்படுத்தாது, ஒரு நூற் கிழியை (நூற் பொதி) மாத்திரம் கையில் எடுத்துக் கொண்டு, உக்கிரமான அலைகளுடனும் பாறைகளுடனும்  மோதியும் உருண்டும் புரண்டும் கை கால் ஊனமுற்ற நிலையிலும் நூற்கிழியைக் கை விட்டுவிடாது வைகை ஆற்றின் கரையிலமைந்த தற்போதுள்ள மதுரையை வந்தடைந்தான். இதனால் முடத் திருமாறன் என்ற கரணியப் பெயரையும் பெற்றுக் கொண்ட இவன் நூற் கிழியைத் தமிழ்த் தாயின் முன் வைத்துக் கண்ணீர் சொரிந்தான்.

இவனுடைய போற்றத்தக்க அரிய செயலினாலேயே நாம்  இடைக் கழக நூலாகிய “தொல்காப்பியம்” என்னும் இலக்கண நூலைப் பெற வாய்ப்புக் கிடைத்தது என்றால் அது பொய்யாகாது.

தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி

பின்பு இந்த முடத் திருமாறனே கடைக் கழகத்தை நிறுவினான். இக் கழகம் தோராயமாக 1850 ஆண்டுகள் நிலை பெற்றது எனச் சொல்லப்படுகிறது. பாடிய புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர். பதிற்றுப் பத்து, பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை போன்ற நூல்கள் இயற்றப்பட்டன. அகத்தியம், தொல்காப்பியம் என்பவற்றை இலக்கண நூலாகப் பயன்படுத்தினர்.

கடைக் கழக காலம் ஆரியம் தமிழகத்தில் நன்றாக வேரூன்றி இருந்த காலம். மூவேந்தரும் ஆரியப் பித்தர்களாக மாறி வேள்விகள் நடத்திய காலம். அதனால் தமிழை நன்றாகக் கற்றுப் புலமையடைந்திருந்த ஆரியப் புலவர்கள் கழகத்தில் நிறைந்திருந்தனர். கழக உறுப்பினரல்லாத திருவள்ளுவர், ஆரிய மூட நம்பிக்கைகளை எதிர்த்து எழுதிய திருக்குறளைக் கழகம் ஏற்க மறுத்தது. ஔவையார் ஆரியப் புலவர்களை எதிர்த்து ஏரணம் செய்து திருக்குறளை அரங்கேற்றினார் என்று மரபு வழிவந்த கதை ஒன்று சொல்கிறது.

ஆரியர்கள் பல்யாகசாலை முதுகுடுமிப் பாண்டியன் காலத்தில் கழகத்தைக் கலைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். பின் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கழகம் முடிவுற்றது. கடைக் கழக காலம் கி.மு.1550 தொடக்கம் கி.பி.200 வரை எனச் சொல்லப்படுகிறது. கி.மு. காலத்தில் எழுந்த நூல்கள் வாழ்வியல் நூல்களாகவே காணப்படுகிறன. ஆரியரின் ஏமாற்று அடாவடியாலும் மூட நம்பிக்கையாலும் அறம் மறுக்கப்பட்ட நிலையில் கழகத்தின் இறுதிக் காலமாகிய கி.பி. யில் தான் அறம் இலக்கியங்கள் தோன்றின.

                    தொடரும்

உங்கள் கவனத்திற்கு